Tuesday, March 26, 2024

ஏலோஹிம் கடோல்

பொருள்: தேவன் பெரியவர்

God is great
வசனம்: "கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக்கிறார், அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது."
சங்கீதம் 145:3
மற்ற ஆசிரியர்களை விட பிரபலமான சில ரபிக்களைக் குறிக்க இஸ்ரவேலில் "கடோல்" என்ற தலைப்பு பயன்படுத்தப்படுகிறது. ஒருவரின் திறமைகளைப் பாராட்ட நாம் பெரும்பாலும் "பெரியவர்" என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். சில வெற்றிகரமான நபர்களுக்கு இது ஒரு தலைப்பாகவும் பயன்படுத்தப்படுகிறது – (Alexander The Great, Akbar The Great)
தேவனின் மகத்துவம் மனிதனின் கற்பனைக்கு அப்பாற்பட்டது. போற்றத்தக்க ஒவ்வொரு குணத்தின் உச்சம் அவர். அவர் அதிகாரத்திலும் வல்லமையிலும் சிறந்தவர், அவருக்கு மிகுந்த அன்பும் இரக்கமும் உண்டு. அவரது மகத்துவத்தை யாராலும் ஈடுபடுத்த முடியாது. அவர் மட்டுமே நம் ஆராதனைக்குறியவர்.
"GREAT" என்பது ஒரு நேர்மறையான சொல். அதை பல்வேறு இடங்களில் பயன்படுத்துகிறோம். பெரிய ஆள், பெரிய இடம், பெரிய படிப்பு, பெரிய வீடு என்று அளவிலோ, மதிப்பிலோ, தன்மையிலோ சிறப்பானதைக் கூற இவ்வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். "எப்படி இருக்கீங்க?" என்று கேட்டால் அநேகர் ஆங்கிலத்தில் "I'm great" என்று நெகிழ்வுடன் பதிலளிப்பார்கள்.
நான் நினைவூட்ட விரும்புவது என்னவென்றால், ‘great’ என்ற வார்த்தையை நாம் பயன்படுத்தும்போதெல்லாம், தேவன் மட்டுமே உண்மையிலேயே பெரியவர் என்பதை உணர வேண்டும்.
நாம் அவருடன் எதை ஒப்பிட்டுப் பார்த்தாலும் அவரை விட பெரியது எதுவும் இல்லை. நாம் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு அவர் சிறந்தவர்.
"கர்த்தர் பெரியவரும் மிகவும் துதிக்கப்படத் தக்கவருமாயிருக்கிறார், எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே."
1 நாளாகமம் 16:25

ஏலோஹிம் பாஷமாயிம்

பொருள்: பரலோகத்திலிருக்கிற தேவன்

('ஷமாயிம்' என்றால் பரலோகம்/வானம்)
வசனம்: "எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தாவே, பரலோகத்திலிருக்கிற நீர் அல்லவோ தேவன்,..."
-2 நாளாகமம் 20:6
பண்டைய எபிரேயர்கள் பூமிக்கு மேலே 3 அடுக்கு வான மண்டலம் உள்ளது என்று நம்பினார்கள். நம் கண்களால் காணக்கூடிய வானத்தை "முதல் வானம்" என்று அழைத்தார்கள். அதற்கு மேலே ஒரு உறுதியான, ஐலத்தால் நிறைந்த, இன்று நாம் "ஓசோன் படலம்" என்று அழைக்கும் மண்டலத்தை "இரண்டாம் வானம்" என்றனர். (அந்த ஜலம் இப்போது இல்லை. நோவாவின் வெள்ளத்தின் போது அது தீர்ந்துவிட்டது.) இரண்டாம் வானத்திற்கு அப்பாற்ப்பட்ட எல்லாவற்றையும் நாம் "விண்வெளி" என்று கருதுகிறோம்.
இதற்கும் மேலானதுதான் "மூன்றாவது வானம்"/"பரமண்டலம்", அங்கு தேவன் வசிக்கிறார் என்று நம்பினார்கள்.
இது நமக்கு முக்கியமா...? ஆம் என்பதற்கு பல சாத்தியமான காரணங்கள் உள்ளன, ஆனால் நான் மிகவும் புதிரானதாகக் கருதுவது என்னவென்றால், அது முக்கியமானது என்று இயேசுவே நினைத்தார். தன் சீடர்களுக்கு எப்படி ஜெபிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கும் போது, "பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே" (அப்பா பாஷமாயிம்) என்ற சொற்றொடருடன் தொடங்குகிறார் என்பதைக் கவனியுங்கள். இயேசு ஏன் இந்த அறிவிப்புடன் ஆரம்பிக்கிறார்? இரண்டு காரணங்களுக்காக:
• முதலாவது, யாரிடம் ஜெபிப்பது என்று நமக்குத் தெரியும்படியாக. நாம் தேவதூதர்களிடம், புனிதர்களிடம் (Saints) அல்லது மரித்தவர்களிடம் ஜெபம் செய்யக்கூடாது.
• பரலோகத்தில் உள்ள தேவன் மற்ற எல்லா தேவர்களையும் விட உயர்ந்தவர் என்பதை நமக்குக் கற்பிப்பதற்காக.
இந்த தலைப்பு அவரது முழுமையான அதிகாரத்தையும் ஆட்சியையும் காட்டுகிறது. இது பண்டைய எபிரேயர்களால் மட்டுமல்ல, அவர்களின் எதிரிகளாலும் புரிந்து கொள்ளப்பட்ட ஒன்று.
"ஏலோஹிம் பாஷமாயிம்" என்பது ஒரு பெயர் என்பதை விட ஒரு அதிகாரத்தின் தலைப்பாகும். நாம் ஆராதிக்கும் தேவன் மட்டுமே நமது துதி, நமது கனம், நமது நேரம் மற்றும் நமது பலிகளுக்குப் பாத்திரர் என்பதை நமக்கு நினைவூட்டும் பெயர் இது.
"...உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர்."
யோசுவா 2:11

ஏலோஹிம்

பொருள்: தேவன் (God)

வசனம்: "ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்."
- ஆதியாகமம் 1:1
"ஏலோஹிம்" என்பது தேவனுக்கு நான் கண்ட மிக சுவாரஸ்யமான நாமங்களில் ஒன்று. தேவன் தன்னை அறிமுகப்படுத்த தேவத்தின் முதல் வசனத்தில் பயன்படுத்திய நாமம் இதுவே. இது வேதத்தில் 2500 தடவைகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
"ஏலோஹிம்" என்பது உயர்ந்த அதிகாரம் கொண்டவர்களைக் குறிக்கிறது - நீதிபதியையோ, ஒரு ராஜாவையோ கூட குறிக்கும். ஆனால் நம் கர்த்தர் "தேவாதி தேவன்" - தேவர்களுக்கெல்லாம் தேவன். தேவதூதர்கள் மற்றும் சில சமயங்களில் மனிதர்களைக்கூட "தேவக்குமாரர்கள்" என்று குறிப்பிடப்படுவதைக் காண்கிறோம்.
வேதத்தில் உள்ள பல பெயர்களில் 'ஏல்' என்ற உச்சரிப்பு உள்ளது. 'எலி'யா, 'எலி'சா, சாமு'வேல்', யோ'வேல்', தானி'யேல்' மற்றும் தேவதூதர்களும் 'ஏல்' ஐ அவர்களின் பெயர்களில் கொண்டுள்ளனர்: மிகா'வேல்', கபிரி'யேல்' என்று பட்டியல் நீடித்துக்கொண்டே போகிறது. ஏன்...இஸ்ர'வேல்' என்ற பெயர் கூட "ஏல்" இல் தான் முடிகிறது.
நாம் ஆராதிக்கும் ஏலோஹிம் தேவன்:
சர்வ வல்லமையுள்ளவரும், சர்வ ஞானியும், சர்வ வியாபகருமானவர்.
நம் தேவன் காலத்திற்கோ அல்லது இடத்திற்கோ உட்பட்டவரில்லை. தமிழில் "இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்" என்ற பழமொழி உள்ளது, ஆனால் ஏலோஹிம் தேவன் ஒரு ஜுவனில்லாத பொருளில் இல்லை. அவர் எல்லா இடங்களிலும் இருக்கிறார், ஆனால் ஒரு பொருளுக்குள் இல்லை. தேவன் விக்கிரகாராதனையை வெறுப்பதற்குக் காரணமும் இதுவே.
(சங்கீதம் 115:4-9)

ஏலோஹெய் டெஹில்லாட்டி

பொருள்: நான் துதிக்கும் தேவன்

வசனம்: "நான் துதிக்கும் தேவனே, மவுனமாயிராதேயும்."
- சங்கீதம் 109:1
சங்கீதம் 109 இல், தாவீது தன் சொந்த ஜனங்களால் ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார். தாவீது அவர்களுக்கு நன்மை செய்திருந்தும் பதிலுக்கு அவர்கள் தீமையையே செய்தனர். ஒரு மனிதன் தனது சொந்த ஜனத்தால் ஏமாற்றப்படும்போது, ஜெபிக்க உட்காருவதும் ஆராதிப்பதும் மிகவும் கடினம்.
தேவனைத் துதிப்பதற்காக தாவீது தன் மனநிலை மாறுவதற்காகக் காத்திருக்கவில்லை. வாழ்க்கை தனக்கு அநீதி இழைத்தாலும் எவ்வேளையும் தேவன் "துதிக்குப் பாத்திரர்" என்பதை அவர் அறிந்திருந்தார்.
சங்கீதம் 109 என்பது தேவன் மீது ஆழமான விசுவாசத்தைக்கொண்ட ஒரு மனிதனின் அழுகை.
அவர் தேவனை "மவுனமாயுராதேயும்" என்று சொல்வதை கவனியுங்கள்: தேவனிடமிருந்து வரும் வார்த்தையே விசுவாசிக்கு அவசியம்.
"சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. அல்லேலூயா."
-சங்கீதம் 150:6
ஆண்டவரைக் குறித்து நம் உள்ளத்தில் ஏற்படும் இன்ப உணர்வுகளை வாயின் வார்த்தையினால் வெளிப்படுத்துவதே துதியாகும்! சகல சபை மக்களும் ஆராதனைகளில், ஜெபக் கூட்டங்களில் கரங்களைத் தட்டி, "அல்லேலூயா" (Hallelujah means "Praise the Lord") என்று பாடி தேவனை மகிமைப்படுத்துகின்றனர். இவ்வாறான துதி பலிகள் எங்கும் தொனிக்கட்டும். தேவனைக் கருத்துடன் பாடிப்போற்ற வேண்டியது அவசியம். கர்த்தருக்குப் பிரியமானதும் அதுவே.
"...தேவரீரே என் துதி."
- எரேமியா 17:14

ஏலோஹெ ஹரூஹொட் லேகொல் பசார்

பொருள்: மாம்சமான யாவருடைய ஆவிகளின் தேவன்

வசனம்: "அப்பொழுது அவர்கள் முகங்குப்புற விழுந்து: தேவனே, மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனே, ஒரு மனிதன் பாவம் செய்திருக்கச் சபையார் எல்லார்மேலும் கடுங்கோபங்கொள்வீரோ என்றார்கள்."
எண்ணாகமம் 16:22
மனிதன் ஆவி, ஆத்துமா மற்றும் சரீரத்தால் ஆனவன். மனிதன் ஒரு ஆவி, அவனுக்கு ஒரு ஆத்துமா உண்டு. தற்காலிகமாக ஒரு சரீரத்தில் வாழ்கிறான் என்று நாம் கூறலாம். தேவதூதர்கள் ஆவிகளாகப் படைக்கப்பட்டனர், அவர்களுக்கு நம்மைப்போல உடல் கிடையாது. ஆதாம் படைக்கப்பட்டபோது ஒரு ஆத்துமாவாக படைக்கப்பட்டான். அதனால்தான் தேவன் பெரும்பாலும் மனிதர்களை "ஆத்துமாக்கள்" என்று குறிப்பிடுவதை வேதத்தில் காணலாம்.
ஒரு மனிதனின் ஆத்துமா தேவனுக்குக் கீழ்ப்படிய விரும்பினால், ஆவி சரீரத்தைக் கட்டுப்படுத்தும். அவனுடைய ஆத்துமா தேவனை அறியாதபோது சரீரம் மேற்கொள்ளும். வாழ்க்கை என்பது ஆத்துமாவை வெல்வதற்கான மாம்சத்திற்கும் ஆவிக்கும் இடையிலான போராட்டமாகும்.
எல்லா ஆவிகளும் தேவனுக்கு சொந்தமானது. உலகில் உள்ள அனைத்து ஆவிகளுக்கும் அவர்தான் ஆதாரம். அவரில், நம் வாழ்க்கை தொடங்குகிறது, அவரில் அது முடிகிறது. நம் ஆவி தன்னைப் படைத்தவருக்காக தொடர்ந்து ஏங்குகிறது. நாம் இயேசுவை ஏற்றவுடன், நம் ஆன்மாவையும் ஆவியையும் மட்டுமல்ல, நம் சரீரத்தையும் அர்ப்பணிக்க வேண்டும்.
"இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர், என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?"
எரேமியா 32:27
நம் சரீரம் தேவனுடைய ஆலயம் என்று வேதம் சொல்கிறது. ஆவியானவர் நமக்குள் வாசம் செய்கிறார். உங்கள் சரீரத்தை தினமும் அவருக்கு அர்ப்பணிக்கிறீர்களா?

ஏலோஹெ ஹஸ்டி / ஹெசட்

பொருள்: தயவுள்ள தேவன்

("ஹெசட்" = அன்பு, கருணை, காருண்யம், கிருபை, இரக்கம், தயவு போன்ற கருத்துகளின் தொகுப்பைக் குறிக்கும்.)
"கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர், அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின்மேலுமுள்ளது."
-சங்கீதம் 145:9
இயேசுவின் வாழ்க்கையும் தியாகமும் தேவனின் தயவிற்கு சிறந்த எடுத்துக்காட்டு.
அநேகமாக, இயேசுவின் மிகக் குறைவாகப் புரிந்து கொள்ளப்பட்ட பண்புகளில் ஒன்று அவருடைய தயவு.
இயேசு ரோமர்களால் கைது செய்யப்பட்டு, தடிகளால் தாக்கப்பட்டு, சவுக்கால் அடிக்கப்பட்டார். அவர் மேல் துப்பினார்கள், அவரை கேலி செய்தார்கள். அவரது மரணத்தை இஸ்ரவேலர்கள் முரையிட்டனர். அவர் ரோமானியர்களின் சாபத்தின் அடையாளமாகிய சிலுவையில் அறையப்பட்டார்.
"நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கிவா" என்று யூதர்கள் அவருக்கு சவால் விடுத்தனர். இப்போது, அந்த நேரத்தில் அவர் செய்திருக்கக்கூடிய அனைத்து விஷயங்களையும் கற்பனை செய்வோம். அவர் கடும் புயலை ஒரே வார்த்தையால் கட்டுப்படுத்தினார், தண்ணீர் மீது நடந்தார், 5,000 குடும்பங்களுக்கு 5 அப்பம், 2 மீனைப் பெருக்கி போஷித்தார். இறந்தவர்களை உயிரோடெழுந்து வரச்செய்தார். அந்த சிலுவையில் அவர் 10,000 தேவதூதர்களை அழைத்து அவரை விடுவிக்கவும் அந்த நன்றியற்ற தலைமுறையை அழித்திருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. இயேசு எந்த பாவமும் செய்யவில்லை, அவருடைய வாயில் எந்த வஞ்சகமும் காணப்படவில்லை. அவர்கள் அவரை அவமானப்படுத்தியபோது, அவர் பழிவாங்கவில்லை; அவர் துன்பப்பட்டபோது, அவர் எந்த அச்சுறுத்தலும் செய்யவில்லை. மாறாக, நியாயமாக தீர்ப்பளிக்கும் தன் பிதாவிடமே தன்னை ஒப்படைத்தார். அப்பொழுது இயேசு: "பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்."
தேவன் நம்மீது அன்பு கொண்ட தயவு எவ்வளவு பெரியது!
நம்மைச் சுற்றியுள்ள அனைவரிடமும் தயவோடு இருப்போம்.
"ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்."
எபேசியர் 4:32

ஏல் யெஷூரன்

பொருள்: தம் நீதியுள்ள ஜனங்களின் தேவன்

"யெஷூரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை, அவர் உனக்குச் சகாயமாய் வானங்களின்மேலும் தமது மாட்சிமையோடு ஆகாய மண்டலங்களின் மேலும் ஏறிவருகிறார்."
- உபாகமம் 33:26
"யெஷூரன்" என்பது கவிதை நடையில் நீதிமான்களுக்கு வைக்கப்பட்ட ஒரு பெயர். இது எருசலேமையும் குறிக்கும். மெல்கிசேதேக் ராஜா ஆட்சி செய்தபோது இந்த நகரம் "சாலேம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது "ஷீலோ" என்றும் அழைக்கப்படுகிறது. (பொருள்: "சமாதானத்தின் நகரம்").
தாவீது தனது தலைநகராகத் தேர்ந்தெடுத்த நகரம் எருசலேம். இது யூத மக்களின் தாய் நகரம். இன்றுவரை அவர்களுக்கு மிகவும் புனிதமான இடமாகும்.
“எருசலேமின் தேவன்” என்பது யூதாவின் மக்களை கேலி செய்யும் போது அசீரியாவின் மன்னர் சனகெரிப்பின் ஊழியர்களால் தேவனுக்கு வழங்கப்பட்ட பெயர். அதே நேரத்தில் சனகெரிப் தேவனை "எசேக்கியாவின் தேவன்" என்றும் குறிப்பிட்டார்.
"மனுஷர் கைவேலையினால் செய்யப்பட்டதும், பூச்சக்கரத்து ஜனங்களால் தொழுதுகொள்ளப்பட்டதுமாயிருக்கிற தேவர்களைக் குறித்துப் பேசுகிறபிரகாரமாக எருசலேமின் தேவனையும் குறித்துப் பேசினார்கள்."
2 நாளாகமம் 32:19
யூதர்கள் பாபிலோனிற்கு நாடுகடத்தப்பட்டபோது, அர்தசஷ்டா ராஜாவும் எஸ்ராவுக்கு அதேப் பெயரை உள்ளடக்கிய ஒரு ஆணையை வெளியிட்டார். (எஸ்ரா 7:19)
தேவனை அறியாதவர்கள் மட்டுமே அவருக்கு ஒரு இடத்திற்கு வரையருக்கப்பட்ட பெயர்களைக் கொடுக்கிறார்கள். நம் தேவன் சர்வ பூமிக்கும் ஆண்டவர் என்பதை நாம் அறிவோம். மற்ற தெய்வங்களைப் போல அவருக்கு எல்லைகள் இல்லை. அவர் உலகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமான்களுக்கும் தேவன்.

ஏல் சிம்காட் கிலி

பொருள்: "எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கிற தேவன்"

("சிம்காட்" என்பது எபிரேய மொழியில் மகிழ்ச்சிக்கான வார்த்தை)
எல்லாப் பக்கங்களிலிருந்தும் எதிரிகளால் ஒடுக்கப்பட்டபோது தாவீது இந்த சங்கீதத்தை எழுதினார்:
"அப்பொழுது நான் தேவனுடைய பீடத்தண்டைக்கும், எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கிற தேவனிடத்திற்கும் பிரவேசிப்பேன். தேவனே, என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் துதிப்பேன்."
சங்கீதம் 43:4
அவர் துன்பத்தின் மத்தியில் உண்மையான மகிழ்ச்சியாகிய தேவனைத் தேடுகிறார்.
மகிழ்ச்சி இல்லாத வாழ்க்கை சுமையானது. எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார்கள். மகிழ்ச்சியைத் தேடி மனிதர்கள் எதை எதையோ இவ்வுலகில் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவை எல்லாம் தற்காலிகமானவை, வரும் போகும்! (The world can only give temporary Happiness)
துன்பமும் துயரமும் தவிர்க்க முடியாதவை என்பதை கிறிஸ்தவர்கள் புரிந்து கொண்டாலும், யாரும் துயரத்தை அனுபவிக்கவோ அல்லது துன்பத்தை எதிர்கொள்ளவோ விரும்பவில்லை. நாம் சந்தோஷத்திற்காக ஒவ்வொரு நாளும் ஏங்குகிறோம்.
இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி இந்த வாழ்க்கையில் நாம் மகிழ்ச்சியைக் காண முடியும் என்று உறுதியளிக்கிறது. எல்லாப் பக்கங்களிலும் பிரச்சனைகள் அழுத்தும் போதும் மனதையும் இதயத்தையும் ஒளிரச் செய்யும் மகிழ்ச்சி - இயேசுவால் நமக்குக் கிடைத்த தேவனுடைய பிரசன்னம் மட்டுமே.
"என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்."
யோவான் 15:11
இந்த வசனத்தின் அடிப்படையில், கிறிஸ்துவின் மகிழ்ச்சி "நமக்குள்" இருக்க முடியும் என்பதை கவனியுங்கள். அது தற்காலிகமானது அல்ல, நிறந்தரமானது! (Joy of Christ comes from within)
"சந்தோஷம் பொங்குதே!
சந்தோஷம் பொங்குதே!
சந்தோஷம் என்னில் பொங்குதே!
அல்லேலூயா
இயேசு என்னை இரட்சித்தார்
முற்றும் என்னை மாற்றினார்
சந்தோஷம் பொங்கிப் பொங்குதே...!"

ஏல் ஷடாய்

பொருள்: சர்வவல்லமையுள்ள தேவன்/ தாயின் அன்பை உடைய தேவன்.

"ஷடாய்" என்ற பெயர் வேதத்தில் 48 முறையும், 7 முறை "ஏல் ஷடாய்" என்றும் தோன்றுகிறது.
இப்பெயரின் முதல் இருப்பிடம் ஆதியாகமம் 17:1 இல் உள்ளது.
("...கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசினமாகி, நான் சர்வவல்லமையுள்ள தேவன். நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு.")
ஷடாய் போன்ற மற்றொரு வார்த்தை, "ஷட்". எபிரேயத்தில் “ஒரு மார்பகம்” என்று பொருள்படும். (சுவாரஸ்யமாக இவ்வார்த்தை பெண்பால் அல்ல, ஆண்பாலாகக் கருதப்படுகிறது.)
இது தேவன் முற்றிலும் ஊட்டமளிப்பதையும், திருப்தியளிப்பதையும், ஒரு தாய் தன் குழந்தையைத் தேற்றுவது போல அவருடைய ஜனத்தின் அனைத்து தேவைகளையும் வழங்குவதையும் குறிக்கிறது. "ஏல்" என்ற வார்த்தையுடன் "ஷடாய்" இணைக்கப்பட்டிருப்பது, ஊட்டச்சத்தையும் ஆசீர்வாதத்தையும் சுதந்திரமாக வழங்கும் தேவனைக் குறிக்கிறது.
அவரே நம்மை தக்கவைப்பவர். அவர் போதுமானவர். அவரே நமக்கு தாய், தந்தை, நண்பர், ஒரு சகோதரர்.
"ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும்
நாயனும் எனக்கன்பான ஞானமண வாளனும் — எல்லாம் இயேசுவே!"
"தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார். சர்வவல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர்கொடுத்தது."
யோபு 33:4

ஏல் ரோயி

பொருள்: என்னைக் காண்கிற தேவன்

சாராயின் எகிப்திய அடிமைப்பெண்ணாகிய ஆகார், இஸ்மவேலைப் பெற்றெடுத்த பிறகு தன்னைக் கடுமையாக நடத்திய தன் எஜமானியை விட்டு ஓடிவிட்டாள். அவநம்பிக்கையுடன், தனியாக வனாந்தரத்தில் அலைந்து திரிந்தாள். அப்பொழுது, கர்த்தருடைய தூதனானவர் அவள் முன் தோன்றி அவளுக்கு அறிவுறுத்தலையும் ஆறுதலையும் தந்தவுடன் அவள் தேவனுக்கு வைத்த பெயர்தான் "ஏல் ரோயி". (என்னைக் காண்கிற தேவன் - ஆதி 16:13)
கஷ்டமான நேரங்களில் நீங்கள் தனியாக இருப்பதாக ஒருபோதும் நினைக்காதீர்கள்.
"கர்த்தர் நல்லவர், இக்கட்டுநாளிலே அரணான கோட்டை. தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்."
நாகூம் 1:7
அடைக்கலான் குருவிகளைக்கூட கவனிக்கிற தேவன் நம்மைக் காணாமல் இருப்பாரா?
(மத் 10:29-31)
அவர் நம்மை ஆசீர்வதிப்பதற்கும் ஆறுதல்படுத்துவதற்கும் நம்மை இரவும் பகலும் தன் கண்மணியைப் போல பார்த்துக்கொள்கிறார்.
"நீர் என்னை காண்கிற தேவன் கண்களை திறந்தருளும்
வேதத்தின் அதிசயம் காணவே கண்களை திறந்தருளும்!"

ஏல் ராகூம் வெ'கானுன்

பொருள்: இரக்கமும் மன உருக்கமும் உள்ள தேவன்

(Rachum - இரக்கம், Chanun - கிருபை)
"நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவனென்று அறிவேன்."
யோனா 4:2
தேவன் தனது மக்கள் மீது இரக்கமும் கிருபையும் நிறைந்தவர். அவரிடம் தீய எண்ணங்கள் முற்றிலும் கிடையாது.
இரக்கம் என்பது தேவனின் குணாதிசயங்களில் ஒன்று. அவரது பிள்ளைகளாகிய நாம் அத்தகைய பண்பை வெளிக்காட்ட வேண்டும். அன்பே இரக்கத்தின் அடிப்படை. அன்பை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்துவின் அனைத்து பண்புகளும் நம்முடைய வாழ்க்கையிலும், வார்த்தையிலும் இருப்பதாலும் பரிசுத்த ஆவியானவரின் உதவியாலும் சுற்றியுள்ள நம் சகோதரர்களின் தேவைகளை நாம் புரிந்துக்கொள்கிறோம். கடந்த கால அனுபவங்களாலும், வளர்ப்பாலும், தேவனால் சந்திக்கப்படாத காரணத்தினாலும் கடினமான இதயம் கொண்ட ஒருவருக்கு மற்றவர்களின் வலிகளை உணர்வது கடினம். இரக்கம், கிருபை - இரண்டுமே தேவனுடைய ஈவு.
தகுதியில்லாத நமக்கு தேவன் தரும் ஈவு - கிருபை. நமக்குத் தகுதியான தண்டனையை தராமல் இருப்பது - இரக்கம்.
"கர்த்தர் கிருபையும் நீதியுமுள்ளவர், நம்முடைய தேவன் மனஉருக்கமானவர்."
சங்கீதம் 116:5

ஏல் கன்னா

 பொருள்: எரிச்சலுள்ள தேவன்

வசனம்: "கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, ஆகையால், அந்நிய தேவனை நீ பணிந்துகொள்ளவேண்டாம்."
யாத்திராகமம் 34:14
ஆங்கிலத்தில் இதை "பொறாமையுள்ள தேவன்" (Jealous God) என்று மொழிபெயர்த்துள்ளனர். மற்றொரு நபரிடம் உள்ள ஏதோ ஒரு காரியம் நம்மிடம் இல்லாதபோது நமக்கு பொறாமை ஏற்பட வாய்ப்புண்டு. "எனக்கு மட்டும் உரியது" என்று நாம் எதை நினைத்தாலும் அதை ஆங்கிலத்தில், "Possessiveness" என்று சொல்வார்கள்.
தேவனுடைய இந்த உணர்வு சற்று வித்தியாசமானது. தனக்குச் சொந்தமான ஒன்றை யாராவது இன்னொருவருக்குக் கொடுக்கும்போது தேவன் எரிச்சலடைகிறார். அவர் சிலை வழிபாட்டிற்கு எதிரானவர். தனது மக்களை அடிமைத்தனத்திலிருந்து காப்பாற்றி, வாக்களிக்கப்பட்ட தேசத்தில் தன் ஜனங்களைப் பாதுகாக்கிறார். ஒவ்வொரு யுத்தத்திலும் அவர் அவர்களுடன் இருந்தார்.
மற்ற தெய்வங்கள் நம் இதயத்திற்காக போட்டியிடுவார்கள் என்பது அவருக்குத் தெரியும். ஏவாள் எல்லாவற்றையும் கொண்டிருந்தும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தைப் புசிக்க ஆசைக் கொண்டாள். தாவீதுக்கு அதிகமான மனைவிகள் இருந்தும், பத்சேபாவை விரும்பினார்.
தேவனுடைய இந்த உணர்வு அவரைப் பற்றியது அல்ல, அது நம்மைப் பற்றியது. அவருடன் மட்டுமே நெருங்கிய உறவைக் கொண்டிருப்பதற்கான ஒரே நோக்கத்திற்காக அவர் நம்மை உருவாக்கினார். கணவனை வேறொரு பெண்ணிடம் பகிர்ந்து கொள்வது எந்த மனைவியாலாவது ஏற்றுக்கொள்ள முடியுமா? ஒரு கணவன் தன் மனைவி வேறு ஆணுடன் இருப்பதை எப்படி சகிக்க முடியும்? (ஓசியா புத்தகத்தின் மையப்பொருளே இதுதான்!) அதேப்போல், தேவன் உங்கள் மீது வைராக்கியம் கொண்டவர். நம் இதயத்தின் ஒவ்வொரு அங்குலமும் தன்னுடன் இணைக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நாம் அவருக்கு மட்டுமே சொந்தமானவர்கள், அவர் நமக்கு சொந்தமானவர்!
"நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாக கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காகத் தேவவைராக்கியங்கொண்டிருக்கிறேன்."
2 கொரிந்தியர் 11:2

ஏல் பிராசீம்

 பொருள்: தடைகளை உடைக்கும் தேவன் / திருப்புமுனைகளின் தேவன்

வசனம்: "தாவீது பாகால் பிராசீமுக்கு வந்து, அங்கே அவர்களை முறியடித்து: தண்ணீர்கள் உடைந்தோடுகிறதுபோல, கர்த்தர் என் சத்துருக்களை எனக்கு முன்பாக உடைத்து ஓடப்பண்ணினார் என்று சொல்லி, அதினிமித்தம் அந்த ஸ்தலத்திற்குப் பாகால்பிராசீம் என்று பேரிட்டான்."
2 சாமுவேல் 5:20
(இங்கே 'பாகால்' என்ற வார்த்தை கர்த்தரைக் குறிக்கிறது. பாகால் சிலையை அல்ல. குழப்பத்தைத் தவிர்க்க நாம் தேவனை "ஏல் பிராசீம்" என்று குறிப்பிடுகிறோம்)
"ராட்சதர்களின் பள்ளத்தாக்கு" என்று பொருள்படும் "ரெப்பாயிம் பள்ளத்தாக்கு" என்ற இடத்தில் தாவீது பெலிஸ்தியர்களுக்கு எதிராகப் போராடினார். தேவன் தாவீதுடன் நின்று அந்த ராட்சதர்களுக்கு எதிராக அவருக்கு வெற்றியைக் கொடுத்தார். அதனால்தான் தாவீது தேவனை திருப்புமுனைகளின் தேவனாக அங்கீகரித்து அவ்விடத்திற்கு "பாகால்-பிராசீம்" என்று பெயரிட்டார்.
நம் அனைவருக்கும் நம் வாழ்வில் ஒரு கட்டத்தில் ஒரு 'திருப்புமுனை' தேவைப்படுகிறது. நமது ஆவிக்குறிய வாழ்க்கையில், உலக வாழ்க்கையில், ஆரோக்கியத்தில், குடும்பத்தில் அல்லது உணர்ச்சிகளில் தேங்கி நிற்கும்போது நமது சொந்த பலத்துடன் ஒரு மாற்றத்தை தேடினால், அது விரக்தியைத்தான் ஏற்படுத்தும். ஆனால் தேவன் நம் வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை அவர் மூலம் பெற விரும்புகிறார். அவர் மட்டுமே நமக்குத் தேவையானதைத் தர முடியும். தாவீது கோலியாத்துக்கு எதிராகப் போரிட்டபோது தேவன் அவரது வாழ்க்கையை மாற்றினார். தாவீது தன்னிடம் இருந்த கூழாங்கற்களின் மீது நம்பிக்கை கொள்ளவில்லை, இஸ்ரவேலின் தேவன் மீது நம்பிக்கை வைத்திருந்தார். அதேபோல், ஏற்ற வேளையில் தேவன் நிச்சயமாக உங்கள் வாழ்க்கையையும் மாற்றுவார். சரியான தருணத்திற்காக காத்திருங்கள்!

ஏல் ஓலாம்

 பொருள்: சதாகாலமுமுள்ள தேவன் / நித்திய தேவன்

ஆதியாகமம் 21:33 இல், ஆபிரகாம் ஒரு தோப்பை உண்டாக்கி, தேவனை "சதாகாலமுமுள்ள தேவன்" என்று அழைக்கிறார்.
இது எபிரேய மொழியில் "ஏல் ஓலாம்" எனப்படும். நித்திய தேவன் என்றும் அழைக்கலாம்.
ஆதியும் அவரே, அந்தமும் அவரே; ஒருபோதும் வயதாகாத தேவன் அவர்.
கடவுளைப் பற்றிய நமது கற்பனை எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அவர் அதைவிடப் பெரியவர்.
தேவன் மட்டுமே உண்மையில் நித்தியமானவர். அவர் காலத்திற்கு கட்டுப்பட்டவர் இல்லை. அவருக்கு ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை. அவர் ஒருபோதும் அவசரப்படுவதுமில்லை,ஒருபோதும் தாமதிப்பதுமில்லை. கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் அனைத்தும் தேவனுக்கு ஒரே மாதிரியானவை. தேவனை யாரும் ஆச்சரியப்பட வைக்க முடியாது. அவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறதினால் எதையும் புதிதாக கற்றுக் கொள்ளத்தேவையில்லை.
"இந்தத் தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன், மரணபரியந்தம் நம்மை நடத்துவார்."
சங்கீதம் 48:14

ஏல் நோஸ் / எலோஹே செலீகொட்

பொருள்: மன்னிக்கிற தேவன்

"...நீர் அவர்கள் கிரியைகளினிமித்தம் நீதி சரிக்கட்டினபோதிலும், அவர்களுக்கு மன்னிக்கிற தேவனாயிருந்தீர்."
சங்கீதம் 99:8
('நோஸ்' என்றால் எபிரேயத்தில் 'மன்னிக்கிற' என்று பொருள்)
தேவன் அவருக்கு எதிரான நமது பாவங்களை முற்றிலும் அழிக்கிறவராய் இருக்கிறார். அவர் மூலம் மற்றவர்களை எப்படி மன்னிப்பது என்பதைக் கற்றுக்கொள்கிறோம். நம்மை தேவன் மன்னிப்பது போலவே, சக மனிதர்களை உண்மையாக மன்னித்தால், நாம் நம் எண்ணங்களிலிருந்து பாவத்தை அகற்றி, அன்பினால் நம் உறவுகளைத் தொடரலாம்.
"ஆகிலும் வெகுவாய் மன்னிக்கிறவரும், இரக்கமும், மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மகா கிருபையுமுள்ளவருமான தேவனாகிய நீர் அவர்களைக் கைவிடவில்லை."
நெகேமியா 9:17
ஏதேன் தோட்டத்தில் உண்டான முதல் பாவம் முதல் இன்றுள்ள ஜனங்களின் பாவங்கள் வரை, "ஏல் நோஸ்" மன்னித்துள்ளார். ஆனாலும் பாவத்திற்கு ஒரு விளைவு இருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ரோமர் 6:23 கூறுகிறது, “ பாவத்தின் சம்பளம் மரணம்” என்று. ஆவிக்குறிய மரணம் தான் நாம் நம் பாவங்களுக்காக பெறக்கூடிய தண்டனை. ஆயினும், மனந்திரும்புதலுடனும், மனவருத்தத்துடனும் நாம் தேவனிடம் வரும்போது, நம் பாவங்களை மன்னிப்பதற்கும், எல்லா அநீதிகளிலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவதற்கும் "எலோஹே செலீகொட்" தயாராக இருக்கிறார்.
"நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்."
1 யோவான் 1:9

ஏல் ஹன்னோரா / யேகோவா யாரே

ஏல் ஹன்னோரா / யேகோவா யாரே

பொருள்: பயங்கரமான தேவன்
(Awesome God)
"தேவனே, உமது பரிசுத்த ஸ்தலங்களிலிருந்து பயங்கரமாய் விளங்குகிறீர்..."
-சங்கீதம் 68:35
எபிரேய மொழியில் "நோரா" என்றால் "பயங்கரமான" என்றும் "மிகவும் பிரமிக்கத்தக்க" என்றும் அர்த்தம்.
தேவனை விட பிரமிக்கத்தக்கவர் யார்?
"நோரா" என்ற வார்த்தை பயத்திற்கான எபிரேய வார்த்தையாகிய
"யாரே"-உடன் தொடர்புடையது. கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் என்றால் நாம் சிங்கத்திற்கும் யானைக்கும் பயப்படும் பயத்தைப்போன்றது அல்ல. "ஃபோபியா" என்று நாம் அழைக்கும் பல பயங்கள் மனிதர்களுக்கு உள்ளன - உயரங்களுக்கு பயம், பாம்புகளுக்கு பயம், இருளுக்கு பயம்... ஆனால் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பயம் தேவனுக்குக் கீழ்ப்படிந்து அவருடைய சித்தத்தின்படி வாழ்வது. அதைத்தான் தேவன் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார். நாம் தேவனுக்கு பயபக்தியுடன் இருந்தால் வேறு எந்த பயத்தையும் மேற்கொள்ள முடியும்.
"உன் தேவனாகிய கர்த்தர் என்னும் மகிமையும் பயங்கரமுமான நாமத்திற்குப் பயப்படும்படிக்கு..." - உபாகமம் 28:58
இப்படிப்பட்ட தேவனை மற்றவர்களோடு எப்படிப் பகிர்ந்துக்கொள்ளாமல் இருக்கமுடியும்? உங்களிடம் உள்ள எதையாவது பற்றி நீங்கள் எப்போதாவது பெருமை பேசப் போகிறீர்கள் என்றால், ஏல் ஹன்னோராவைப் பற்றிப் பேசுங்கள்!
"உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்."
யாத்திராகமம் 34:10

ஏல் ஹானெ எமான் / ஏல் எமுனா

பொருள்: உண்மையுள்ள தேவன்

நீங்கள் எதை அல்லது யாரை நம்பியிருக்கிறீர்கள்? உங்கள் சொந்த திட்டங்கள், திறமை அல்லது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மீது நம்பிக்கை வைப்பது எளிதாக இருக்கும். ஆனால் அவை எவ்வளவு நன்றாக இருந்தாலும், இறுதியில் நம்மை கைவிட்டுவிடும். ஆனால் தேவன் அப்படி இல்லை.
"...அவர் ஆயிரம் தலைமுறைமட்டும் உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன்..."
-உபாகமம் 7:9
தேவன் யார் என்பதன் சாராம்சம் இதுதான் - அவர் உண்மையுள்ளவர். அவரது வாக்குறுதிகள் "ஆம் மற்றும் ஆமென்” என்றும் உள்ளது. இந்த வார்த்தை பழைய ஏற்பாடு முழுவதும் உள்ளது.
நாம் தேவனை மட்டுமே நம்ப முடியும். அவரே நம்மை ஆதரிக்கிறார், நிலைநிறுத்துகிறார்.
இந்த உலகத்தில் நமக்கு நிச்சயம் ஏதோ ஒரு உபத்திரவம் இருக்கும். நாம் தடுமாறி விழுவோம். ஆனால் நம்மைப் பாதுகாக்க ஒருவர் இருக்கிறார். அவர் ஒருபோதும் கைவிடமாட்டார். அவருடைய வாக்குறுதிகளை எப்போதும் நிறைவேற்றுவார்.
"நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார். அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்."
-
2 தீமோத்தேயு 2:13



ஏல் எரேக் அபாயிம் அவி- ஹா தங்குமிம்

 பொருள்: பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன்

"பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ்செய்வாராக." - ரோமர் 15:6
இந்த நாமத்தின் முதல் பகுதியின் பொருள் "பொறுமையுள்ள தேவன்". "எரேக் அபாயிம்" என்பது ஒரு எபிரேய மொழிச்சொல் ஆகும், இது "நீடிய சாந்தம்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது (யாத் 34:6).
ஒருவருக்கு பொறுமை இருக்கிறது என்று சொல்லும்போது, அவர்கள் பொறுமையிழந்திருக்கக்கூடிய சூழ்நிலையில் அவர்கள் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தார்கள் என்று அர்த்தம். எந்த சூழ்நிலையிலும் தேவனை அவசரப்படுத்த முடியாது! தேவன் சரியான நேரத்தில் நேர்த்தியாய் எல்லாவற்றையும் செய்வார்.
"ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்..."
ஏசாயா 66:13
இந்த நாமத்தின் இரண்டாம் பகுதி தேவன் தனது ஜனத்திற்கு வழங்கும் ஆறுதலையும் தேற்றுதலையும் விளக்குகிறது. ஆறுதல் என்பது ஒரு பாரத்தை முற்றிலும் அகற்றுவதைக் குறிக்காது. நாம் தனிமையாக இல்லை, இந்த வலியைத் தாங்க நம்முடன் ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கையை தருவதே ஆறுதல். "ஏல் தங்குமிம்" என்றால் ஆறுதலின் தேவன் என்று அர்த்தம்.
"அவர்கள் வழிகளை நான் பார்த்து, அவர்களைக் குணமாக்குவேன், அவர்களை நடத்தி, திரும்பவும் அவர்களுக்கும் அவர்களிலே துக்கப்படுகிறவர்களுக்கும் ஆறுதல் அளிப்பேன்."
ஏசாயா 57:18



Wednesday, March 6, 2024

ஏல் எமெட்

 பொருள்: "சத்திய தேவன்"

"உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன், சத்தியபரனாகிய கர்த்தாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர்." -சங்கீதம் 31:5
தேவன் தம்முடைய எல்லா செயல்களிலும் உண்மையுள்ளவர். அவருடைய வாக்குறுதிகள் சத்தியமானவை. அவரால் பொய் சொல்ல முடியாது. அவர் நீதியின்படி தீர்ப்பளிக்கிறார். வெளிப்புற தோற்றத்தின் அடிப்படையில் அல்ல, உள்ளதை உள்ளபடி பேசுகிறார். அவரிடமிருந்து வெளிப்படும் அனைத்தும் பரிசுத்தமானவை, எந்த குறையும் இல்லாதவை. அவருடைய நியாயத்தீர்ப்பு, பிரமாணம், கட்டளைகள் மற்றும் அவருடைய வார்த்தைகள் யாவும் உண்மையானவை; அநீதியையும் குற்றங்களையும் எதிர்க்கிறவை.
"பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்: உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்."-
நீதிமொழிகள் 12:22
பத்து கட்டளைகளில் ஒன்று "பொய் சொல்லாதிருப்பாயாக!" என்பது. நாம் ஒருபோதும் பொய் சாட்சிகளாக இருக்கக்கூடாது. வேதம் சாத்தானை "பொய்க்குப் பிதா" என்றும் பொய்யர்களை அவனுடைய பிள்ளைகள் என்றும் அழைக்கிறது. வதந்திகளையும், கட்டுக்கதைகளையும் நம்பாதீர்கள். கிசுகிசுக்களை பரப்பும் ஒருவராக இருக்காதீர்கள். நம்முடைய உணர்ச்சிகளின் அடிப்படையிலோ, தவறான தகவல்களின் அடிப்படையிலோ இல்லாமல், சத்தியத்தின் அடிப்படையில் தீர்மானம் எடுக்க வேண்டும் என்று தேவனிடம் வேண்டுவோம். பொய் சொல்வோருக்கு எதிராக தேவனுடைய உதவியைக் கேட்போம்.
"சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்."
யோவான் 8:32




ஏல் எல்யோன்

 பொருள்: உன்னதமான தேவன்

"உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னான்..."
ஆதியாகமம் 14:20
“ஏல்” என்பது "ஏலோஹீம்"-ன் சுருக்கம். அது தேவனின் வல்லமையைக் குறிக்கும். "எல்யோன்" என்றால் "மிகவும் உயர்ந்தவர்" என்று அர்த்தம்.
எனவே "ஏல் எல்யோன்" என்றால் "கர்த்தாதி கர்த்தர், மிக உன்னதமான தேவன்" என்று பொருள்.
நம் ஏல் எலியோன் தேவனே இந்த வானம், பூமி ஆகியவற்றின் உரிமையாளர்.
இந்த பெயரை முதன்முதலில் சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கும், ஆபிரகாமும் ஆதியாகமம் 14 இல் பயன்படுத்தியுள்ளனர்.
பூமியில் உருவாக்கப்பட்ட எந்த சிலையையும் எந்த பொருளையும் தேவனுக்கு மேல் உயர்த்தக்கூடாது, ஏனென்றால் அவர் எல்லாவற்றிற்கும் மேலாக உயர்ந்தவர்.
நம் தேவன் எந்த மலையையும் விட உயர்ந்தவர், நாம் கற்பனை செய்யக்கூடிய எதையும் விட பெரியவர். அவரை எதுவும் கட்டுப்படுத்த முடியாது. வானம் அவருடைய சிங்காசனம்; பூமி அவருடைய பாதப்படி. அரசர்கள், ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், ஜனாதிபதிகள், அமைச்சர்கள் யாரும் தேவனுடைய சித்தம் இல்லாமல் தங்கள் பதவிகளைப் பெற முடியாது.
"எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்." - சங்கீதம் 57:2




ஏல் எல்லோகே இஸ்ரவேல்

 பொருள்: "தேவன், இஸ்ரவேலின் தேவன்”

ஆதியாகமம் 28:20-21 இல், யாக்கோபு தேவனுடன் ஒரு ஒப்பந்தம் செய்திருப்பதைக் காணலாம்:
“அப்பொழுது யாக்கோபு: தேவன் என்னோடே இருந்து, நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்து, என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திரும்பிவரப்பண்ணுவாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்."
தேவனை யாக்கோபு இன்னும் அவரது தந்தை ஈசாக்கின் தேவனாகவும் அவரது தாத்தா ஆபிரகாமின் தேவனாக மட்டுமே அழைக்கிறார்... தன்னுடைய தேவனாக குறிப்பிடவில்லை. தேவனுக்கும் யாக்கோபுக்கும் எந்த உறவும் இல்லை. யாக்கோபு தன் சிருஷ்டிகருடன் பேரம் பேசும் மனநிலையுடன் இருப்பதை நாம் இங்கே காண்கிறோம்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, யாக்கோபு தேவனுடன் போராடி, அவர் தேவனுக்கு இந்தப் பெயரைக் கொடுத்ததைக் காணலாம். "எத்தன்" என்ற அர்த்தம் உடைய யாக்கோபு, 'இஸ்ரவேல்' என்று தேவனால் மாற்றப்பட்டார். அதாவது "தேவனுடன் போராடுபவன்" என்று அழைக்கப்பட்டார். (ஆதி 22)
"யாக்கோபு...அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு ஏல்எல்லோகே இஸ்ரவேல் என்று பேரிட்டான்."
ஆதியாகமம் 33:20
யாக்கோபு ஒரு ஏமாற்றுக்காரர், சுயநலமுடையவர். தேவனுடன் தனிப்பட்ட உறவைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் நாட்கள் செல்ல செல்ல, அவர் தனது வாழ்க்கையை மாற்றிய மூன்று முக்கியமான விஷயங்களைச் செய்தார்.
• அவர் தன்னை ஒரு பாவி என்று ஒப்புக்கொண்டார்.
• அவர் தேவனின் வார்த்தையை விசுவாசித்தார்.
• அவர் தேவனுடைய நாமத்தை அழைத்து அவரை தன் ஆண்டவராக ஒப்புக்கொண்டார்.
இப்போது தேவன் ஆபிரகாம், ஈசாக்கின் தேவன் மட்டுமல்ல, யாக்கோபின் (இஸ்ரவேலின்) தேவன் என்றும் குறிப்பிடப்படுகிறார்!




ஏல் டியட்

பொருள்: ஞானமுள்ள தேவன்

வசனம்: "...கர்த்தர் ஞானமுள்ள தேவன். அவர் செய்கைகள் யதார்த்தமல்லவோ?"
1 சாமுவேல் 2:3
கர்த்தரே எல்லா ஞானத்திற்கும் ஆரம்பமானவர். மனிதன் பெற்ற அறிவு அனைத்தும் அவரிடமிருந்து வந்தவை.
நம் தேவன் "சர்வ ஞானி", அதாவது அவருக்கு சகலமும் தெரியும்.
"நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்."
1 யோவான் 3:20
தேவன் நம்மைப் பற்றி மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ள அனைத்தை பற்றியும் அறிந்திருக்கிறார். ஒரு குருவிக்குக்கூட எப்போது என்ன தேவை என்று அவருக்குத் தெரியும். கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் அனைத்தையும் அவர் அறிவார். அவர் நம் இருதயங்களின் ஆழத்தை அறிந்திருந்தும் நம்மை நேசிக்கிறார்.
தேவனுக்கு மர்மம் என்று ஒன்றுமே இல்லை.
நாம் பேசுவதற்கு முன்பே அவர் நம் எண்ணங்களை அறிவார். சங்கீதம் 139-இல், தாவீது தேவனுடைய சர்வ ஞானத்துவத்தை மிக அழகாக வெளிப்படுத்துகிறார்.
தேவனுக்குத் தெரியாத இடத்திற்கு நாம் செல்ல முடியாது, அவருக்கு தெரியாத எதையும் நாம் செய்ய முடியாது. நம் நினைவுகளில் தேவனுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை.
மனிதன் தேவனைத் தவிர்த்து ஞானியாக மாற முயற்சிக்கிறான், ஆனால் அது முட்டாள்த்தனத்தில் முடிகிறது. நாம் தேவனுக்கு அஞ்சி அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, ஒருவரையொருவர் நேசிக்கும்போது, நாம் அவரை அறிந்து கொள்வோம். அவருடைய ஞானம் நமக்கு வழிகாட்டும்.
"இந்தப்படி, தேவனுடைய பைத்தியம் என்னப்படுவது மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது; தேவனுடைய பலவீனம் என்னப்படுவது மனுஷருடைய பலத்திலும் அதிக பலமாயிருக்கிறது."
1 கொரிந்தியர் 1:25



Friday, March 1, 2024

ஏல் கையாய் / யேகோவா காய்

பொருள்: என் ஜீவனுடைய தேவன்

வசனம்: "...என் ஜீவனுடைய தேவனை நோக்கி விண்ணப்பஞ்செய்கிறேன்."
சங்கீதம் 42:8

எபிரேய வார்த்தையான “ஃகாய்” என்பது ‘வாழ்க்கை’யைக் குறிக்கிறது. தேவன் நம் நித்திய வாழ்வை மட்டுமல்ல, இந்த தற்காலிக வாழ்வையும் பார்த்துக்கொள்கிறார். அவரே நம் வாழ்வின் ஆதாரம்.
விஞ்ஞானிகள் நீண்ட காலமாக கட்டுப்படுத்தப்பட்ட ஒரு சூழலில் தங்கள் ஆய்வகங்களில் ஜீவனை (உயிர்) 'உருவாக்க' முயற்சித்துள்ளனர். ஆனால் தோல்வியைத்தான் அடைந்துள்ளனர், ஏனென்றால் ஒரு உயிரை ஏற்கனவே இருக்கும் ஒரு உயிரிலிருந்து மட்டுமே உருவாக்க முடியும்.
"சகல பிராணிகளின் ஜீவனும், மாம்சமான சகல மனுஷரின் ஆவியும் அவர் கையிலிருக்கிறது." - யோபு 12:10
கர்த்தரின் விருப்பத்தை நிறைவேற்றுவதே நம் வாழ்வின் முக்கிய நோக்கம். ஒரு 'ரோபோ'வை அதன் கையேட்டைப் படிக்காமல் இயக்க முடியாது. நம் வாழ்வின் கையேடு தேவனுடைய வார்த்தை. நம் வீட்டில் ஏதேனும் ஒரு மின்சார சாதனம் வேலை செய்யவில்லை என்றால், அதை பழுது பார்க்க உற்பத்தியாளரை அழைப்போமல்லவா? அதேப்போல, நமக்கு ஏதாவது பிரச்சனை இருந்தால், முதலில் நம் படைப்பாளரை, நமக்கு ஜீவன் தந்தவரை அழைக்க வேண்டும். அதனால் தான், தற்கொலை செய்தவர்கள் நிச்சயமாக நரகத்திற்குச் செல்வார்கள் என்று நம்புகிறோம். உயிரை மாய்த்துக் கொள்ள யாருக்கும் அதிகாரம் இல்லை, ஏனென்றால் நம் வாழ்வின் உரிமையாளர் நாம் அல்ல!
வாழ்வும் மரணமும் தேவனுக்கும் நமக்கும் இடையிலான தனிப்பட்ட விஷயம். வாழ்வை விரும்புகிறவர்கள் தேவனைத் தேடுவார்கள், மரணத்தை விரும்புபவர்கள் தேவனிடமிருந்து விலகிச் செல்வார்கள். நம் தேவன் மரித்தோருக்குத் தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்குத் தேவனாயிருக்கிறார்.
"குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்." -1 யோவான் 5:12




ஜீவவிருட்சம்

ஜீவவிருட்சம் Tree of Life Heb: Etz Chaim பழைய ஏற்பாட்டில், "ஜீவவிருட்சம்" ஆதியாகமம் 2:9 இல் முதன்முதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின...