ஜீவவிருட்சம்
Tree of Life
Heb: Etz Chaim
பழைய ஏற்பாட்டில், "ஜீவவிருட்சம்" ஆதியாகமம் 2:9 இல் முதன்முதலாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர் புதிய ஏற்பாட்டில், "நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும், அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்." என்று
வெளி 22:2 கூறுகிறது.
ஏதேன் தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சம் இருந்தது. அதினருகே இருந்த நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிக்க வேண்டாம் என்று தேவன் ஆதாம், ஏவாளுக்கு கட்டளையிட்டிருந்தார்.
ஆனால் அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படியாமல், அதை புசித்து, பாவம் செய்தனர். ஆவிக்குரிய ரீதியீல் மறித்து, நித்திய ஜீவனை இழந்தனர். அவர்கள் ஜீவவிருட்சத்திலிருந்தும் சாப்பிட்டு விட்டால், இந்த பாவத்துடன் என்றென்றும் வாழ்ந்துவிடுவார்கள். எனவே, தேவன் மனுஷனை ஏதேனிலிருந்து துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியைக் காவல்செய்ய கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்.
அந்த ஜீவவிருட்சத்தைத் தேடி, ஸ்திரீயாகிய ஏவாள் எத்தனை முறை கேரூபீன்களிடம் சென்று நித்திய ஜீவனுக்காக ஏங்கி அழுதிருப்பாள் என்று கற்பனை செய்து பாருங்கள்! ஆனால் பின்னர் யோவான் 20 இல், வேறொரு தோட்டத்தின் நடுவில் மகதலேனா மரியாள் என்ற வேறொரு ஸ்திரீ இரண்டு தேவதூதர்களிடம் அழுதுகொண்டிருந்தாள். அவளிடம் ஜீவவிருட்சமானவரே வந்து, "ஏன் அழுகிறாய்" என்று கேட்டார்! ஏனென்றால் அவர்தான் ஏற்கனவே நித்திய ஜீவனுக்கு வழியை உருவாக்கிவிட்டாரே!
"...ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்குத் தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப்புசிக்கக்கொடுப்பேன்..."
வெளி 2:7
ஆவிக்குரிய "ஜீவவிருட்சம்” என்பது கிறிஸ்துவைக் குறிக்கும் ஒரு அடையாளம். கிறிஸ்து "...இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார்". (யோ 6:58)
நாம் அவருடைய பந்தியில் பங்கேற்கும் ஒவ்வொறு முறையும், ஜீவவிருட்சத்திலிருந்து புசிக்கிறோம். அவருடைய வார்த்தையை தியானித்து அதன்படி நடக்கும்போதெல்லாம், நாம் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ந்து செழித்து, நித்திய ஜீவனைப் பெறுகிறோம்.
"அது (ஞானம்) தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவவிருட்சம், அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்."
நீதிமொழிகள் 3:18
~ ரேமா ஜாய் ஷரத்
[Strong's Hebrew:
6086. ets - Tree, wood, timber
2416. chay - Alive, living, life]
No comments:
Post a Comment