Tuesday, July 30, 2024

யேகோவா உசி

யேகோவா உசி

Jehovah Uzzi
பொருள்: கர்த்தரே என் பெலன்
God is my strength
துக்கமான நேரங்களில் நாம் விடுதலைக்காகவும், சகிப்புத்தன்மைக்காகவும், மிகவும் கடினமான ஒன்றைச் செய்வதற்கான திறனுக்காகவும் ஜெபம் செய்கிறோம். பின்னர் விஷயங்கள் மோசமாகத் தோன்றும்போது, அல்லது நாம் வலுவாக உணராதபோது, தேவனுடைய அன்பை சந்தேகிக்கிறோம், நாம் செய்த ஜெபம் உண்மையில் செயல்படுகிறதா என்று கேள்வி எழுப்புகிறோம். துக்கம் மனதில் இருக்கும்போது, சரீரத்திலும் பெலன் இருக்காது. ஆனால் கர்த்தருக்குக் காத்திருக்கும் போது, புதுபெலன் அடைகிறோம் என்று வேதம் கூறுகிறது! சோர்ந்துபோகிறவர்களுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவர்களுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.
"கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருங்கள், அதுவே உங்கள் பெலன்." - (நெகே 8:10)
அவருடைய மகிழ்ச்சி நம்மை நிரப்பும்போது, நாம் பெலனடைந்து கடினமான நாட்களையும் எளிதாய் கடந்து செல்ல முடியும்.
இந்தக் கிறிஸ்தவ வாழ்க்கையை நம்முடைய சொந்த பெலத்தில் நாம் வாழ முடியாது, தேவனுடைய பெலத்தில்தான் முடியும். தேவனுடைய பெலனே நம்மை எதையும் மேற்கொள்ள வைக்கிறது.
"கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார், கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்."
- சங்கீதம் 29:11
Strong's Hebrew:
5797. oz - strength, might
5818. Uzziyyah or Uzziyyahu
3966. meod
4581. maoz
3581b. koach
[Jehovah Uzzi, Jehovah Ezlami, Jehovah Maozi, Jehovah Chatsahi all mean the same. Uzziah or Uzziel means "my strength is Yah", the name of several Israelites.]

Thursday, July 25, 2024

யேகோவா கரோப்

 யேகோவா கரோப்

Jehovah Karob
பொருள்: "சமீபமாயிருக்கிற தேவன்"
The Lord is near
"நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம் அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது?"
உபாகமம் 4:7
ஒரு குழந்தையோ, செல்லப்பிராணியோ, எப்போதும் தங்கள் பெற்றோருக்கு, குறிப்பாக அம்மாவிற்கு அருகிலேயே இருக்கும். படுக்கையறைக்குள் பின்தொடரும், இடுப்பில் தொங்கும், சோபா-வில் அருகில் அமரும், மேசைக்கு அடியில் பாதத்திற்கு அருகிலேயே விளையாடும். இவை அனைத்தும் தன் தாயை அது நேசிப்பதற்கான வெளிப்பாடு, தாய்மார்களுக்கும் அது குழந்தையை பாதுகாக்க எளிதாக இருக்கும். அருகிலேயே இருப்பது அவர்களின் காதல் மொழி.
நம் தேவனும் ஏதோ தொலைவான இடத்தில் இல்லை! இயற்கையை ரசிக்கும்போதோ அல்லது மகிழ்ச்சியான தருணங்களில் நாம் பிரமிப்பில் இருக்கும்போது தேவன் நமக்கு மிக சமீபமாக உள்ளார் என்று சிலர் கூறுவார்கள்... ஒரு அதிசயம் நிகழும்போது சிலர் தேவனை மிக நெருக்கமாகக் காண்கிறார்கள் என்பது உண்மைதான்! ஆனால் இந்த வசனம் நமக்கு வித்தியாசமான ஒன்றை அளிக்கிறது: "நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்."
- சங்கீதம் 34:18
தேவன் நம்முடன் இருப்பதை நாம் உணர்வது மகிழ்ச்சியான தருணங்களை விட நாம் மனம் உடைந்து, நொறுக்கப்பட்டு, தனிமையாக இருக்கும் நேரங்களில் தான் அதிகம். உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார் என்று வேதம் கூறுகிறது.
"உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்."
ஏசாயா 57:15
[Strong's Hebrew: 7138. qarob - near]

யேகோவா கேரன் யீஷி

யேகோவா கேரன் யீஷி

Jehovah Keren Yishi
பொருள்: “கர்த்தரே என் ரட்சண்ணியக் கொம்பு.”
Lord, my horn of salvation
"தேவன் நான் நம்பியிருக்கிற துருக்கமும், என் கேடகமும், என் ரட்சண்ணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமும், என் புகலிடமும், என் ரட்சகருமானவர். என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி ரட்சிக்கிறவர் அவரே."
2 சாமுவேல் 22:3
தேவனால் தான் நம்மை நித்திய அழிவிலிருந்து காப்பாற்ற முடியும். யூத வழிபாட்டில், பாவத்திற்குப் பரிகாரம் செய்ய பலிபீடத்தின் கொம்புகளிலும், தூப பீடத்தின் கொம்புகளிலும் பலியிடப்பட்ட மிருகத்தின் இரத்தம் பூசப்படும். (லேவி 8:15; 4:7). அவை தேவனுடைய இரட்சிப்பின் வல்லமையைக் குறிக்கின்றன.
கொம்புகள் மிருகங்கள் சண்டையிடுவதற்கும், பாதுகாப்பிற்கும் பயன்படுத்தப்படுகின்றன. அவை வலிமை, ஆற்றல், சக்தி மற்றும் வெற்றியின் இலக்கியச் சின்னங்கள். இஸ்ரவேலில் புதிய ராஜாக்களை எண்ணெயால் அபிஷேகிக்கவும், கொம்பு எக்காளங்களாகவும் பயன்படுத்தப்பட்டன. (சோஃபார்)
லூக்கா 1:74,75 இல் "...நம்முடைய சத்துருக்களினின்றும், நம்மைப் பகைக்கிற யாவருடைய கைகளினின்றும், நம்மை இரட்சிக்கும் படிக்கு, தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்திலே நமக்கு இரட்சணியக்கொம்பை ஏற்படுத்தினார்" என்று சகரியா கூறுகிறார்.
தன் குடும்பத்தில் மிகவும் சிறுமையாகக் கருதப்பட்ட தாவீது, இஸ்ரவேலின் மீது அபிஷேகம் செய்யப்பட்ட ராஜாவாக கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேவன் மட்டுமே நம் புகலிடமாக இருந்தால், அவர் நம்மை அபிஷேகம் செய்து நம்மைப் பாதுகாப்பார். அவர் மீது விசுவாசம் கொண்ட அனைவருக்கும் அவரது நாமமே இரட்சண்ணிய கொம்பு.
"என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது. என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது. என் பகைஞரின் மேல் என் வாய் திறந்திருக்கிறது. உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன்."
1 சாமுவேல் 2:1
[Strong's Hebrew:
7161. கெரன் - ஒரு கொம்பு
3468. யேஷா - இரட்சிப்பு]

யேகோவா கபோத்

யேகோவா கபோத் | ஏல் ஹா-கபோத்

Jehovah Kabod • El Hakkavod
பொருள்: மகிமையுள்ள தேவன்
God of Glory
வசனம்: "கர்த்தருடைய சத்தம் தண்ணீர்களின்மேல் தொனிக்கிறது, மகிமையுள்ள தேவன் முழங்குகிறார், கர்த்தர் திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார்."
சங்கீதம் 29:3
தேவனுடைய மகிமை அவரது மகத்துவம், மேன்மை மற்றும் பரிபூரணத்தைக் குறிக்கும். ஓரேப் மலையில், மோசே மகிமையின் தேவனாகிய ஏல் ஹா-காவோதைச் சந்தித்தார்! மோசே தேவனை இஸ்ரவேலர்களுடன் இருக்கச் சொன்னார். தேவன் அவ்வாறு செய்வதாக உறுதியளித்தபோது, மோசெ, மேலும் தைரியமாக "உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும்" என்றான்.
(யாத் 33:18)
எபிரேய வார்த்தையான 'kabowd'-திற்கு முதலில் “கனமான, எடையுள்ள,” என்று பொருள், இது போரில் பயன்படுத்தப்படும் கவசத்தைக் குறிக்கிறது. காலப்போக்கில் இந்த வார்த்தை ஐசுவரியம், மகத்துவம், பரிசுத்தம் மற்றும் அதிகாரத்துடன் இணைக்கப்பட்டது. இறுதியில் அது “மகிமை”யைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது.
"...அவர்கள் கர்த்தருடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள்."
ஏசாயா 35:2
தேவனுடைய பிரசன்னத்தைக் கண்டு மோசே திருப்தி அடையவில்லை; அவருடைய முகத்தைப் பார்க்க விரும்பினார். ஆனால் தேவனுடைய மகிமையின் கனம், அவரது பரிபூரண பரிசுத்தம் காரணமாக, தேவனுடைய சமூகத்தைக் கண்டு ஒரு மனுஷனும் உயிரோடிருக்க முடியாது.
அப்படியிருந்தும் தேவன், தான் கடந்து சென்ற பிறகு மோசே அவருடைய பின்பக்கத்தை மட்டும் காண அனுமதித்தார். இன்று இயேசு கிறிஸ்து மூலம் நாம் தேவனுடைய மகிமையைக் காணலாம்.
"சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது, அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்."
- ரோமர் 11:36

யேகோவா யீரே

யேகோவா யீரே

Jehovah Jireh
பொருள்: கர்த்தர் பார்த்துக்கொள்வார்
God who provides
"ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான். அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது."
ஆதியாகமம் 22:14
மோரியா மலைக்கு ஆபிரகாம் தேவனுடைய கட்டளையின்படி தனது ஒரே மகன் ஈசாக்கை பலியிடச் சென்றார். மலையில் ஏறும் போது ஆபிரகாம் அனுபவித்திருக்கக்கூடிய வலியை கற்பனை செய்து பாருங்கள்! அவர் நினைத்திருந்தால் தேவனிடமிருந்து தப்பி ஓடியிருக்கலாம்! வயதானாலும் அவர் அநேக கால்நடைகள், வேலையாட்கள், நிலம், புகழ் போன்ற அனைத்து ஐசுவரியத்தையும் அவர் வைத்திருந்தார்: ஆனால் அவர் தேவனை விசுவாசித்ததால் அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்தார். அன்று தேவன் ஈசாக்குக்கு பதிலாக ஒரு ஆட்டுக்கடாவை பலியிடச் சொல்லிவிட்டார். ஆபிரகாமுக்கு உயிரே போய் வந்தது போலிருந்திருக்கும்!
பரலோகத்தில் உள்ள நம் பிதா தனது ஒரே குமாரனை கல்வாரியில் நமக்காக பலியிடப்பட்டது போல, ஆபிரகாம் தனது மகனைப் பலியிடத் தயாராக இருந்தார்.
"... இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி."
யோவான் 1:29
நமது அன்றாடத் தேவைகளைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை என்றும், ஆகாயத்து பட்சிகளுக்கு உணவளித்து, காட்டுப் புஷ்பங்களை உடுத்தும் தேவனுக்கு நமக்கு வேண்டியவை என்னவென்று தெரியும்!
"ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன், ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?"
மத்தேயு 6:25

ஈஷி

"ஈஷி"

"அக்காலத்தில் நீ என்னை இனி பாகாலி என்று சொல்லாமல், ஈஷி என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்."
ஓசியா 2:16
தேவன் தன்னை இஸ்ரவேலின் கணவராக ஓசியா புத்தகத்தில் உவமையாக வெளிப்படுத்துகிறார். உவமை என்பது ஒரு கதை அல்லது கருத்தை கொண்டு இன்னொரு காரியத்தை விளக்குவதாகும்.
எபிரேயத்தில் "ஈஷி" என்றால் "புருஷன்" என்று பொருள். தன் மனைவியை சமமாக எண்ணும் ஒரு மனிதனைக் குறிக்கும் பதம். ஆனால் "எஜமான்/உரிமையாளர்" என்று பொருள்படும் "பாகாலி" என்ற வார்த்தை திருமணமான ஒரு ஆணைக் குறிக்கும், ஆனால் அவன் மனைவியை சமமாகப் பார்க்கமாட்டான். "ஈஷி" அன்பான கணவன், ஆனால் "பாகாலி" மனைவியை அடிமையாக நடத்துபவன்.
"ஈஷி” என்பது திருமண உறவு மற்றும் அன்பின் வெளிப்பாடாகும், அதே சமயம் “பாகாலி” என்பது உரிமை மற்றும் பயத்தின் வெளிப்பாடாகும். கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான உறவு அன்பும் நட்பும் நிறைந்து இருக்க வேண்டும், ஆதிக்கம் நிறைந்ததாக இருக்கக்கூடாது என்று கர்த்தரே விரும்புகிறார். ஒரு மனிதன் தன் மனைவியை விரும்புகிறது போல, தேவன் இஸ்ரவேலை விரும்புகிறார். அவரை நாம் சார்ந்து இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். நம் தேவைகளை சந்தித்து, பாதுகாத்து, ஆறுதல் அளித்து நம் நண்பராக இருக்க விரும்புகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த பூமியில் "நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை" என்று உண்மையாகச் சொல்லக்கூடிய ஒரே ஒருவர் தேவன் மட்டுமே. (எபி 13:5)
நம் தேவன் கானானிய தெய்வமான பாகால் போன்றவர் அல்ல. அவர் நம் தேவன், நாம் அவருடைய ஜனம்!
"உன் சிருஷ்டிகரே உன் நாயகர்..." - ஏசாயா 54:5
தேவன் தம்மை ஒரு கணவனாக காண்பிக்க வேண்டிய அவசியம் என்ன? ஆண்டவர் சபைக்கு மணவாளனே தவிர தனிப்பட்ட நபருக்கு அல்ல. 'Jesus is my husband' என்று சொல்வது தவறானது. ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வரும்போதுதான் மனைவி என்ற வார்த்தையே வருகிறது. அதற்கு முன்பு வரை மணவாட்டிதான்.

Thursday, July 18, 2024

யேகோவா ஓசேனு

யேகோவா ஓசேனு

Jehovah Hosenu
பொருள்: நம்மை உருவாக்கின கர்த்தர்
God our maker
"நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்கால்படியிடக்கடவோம் வாருங்கள்."
- சங்கீதம் 95:6
"ஓசேனு" என்பது சிருஷ்டிப்பைக் குறிக்கும் "ஏலோஹிம்" என்ற பெயரிலிருந்து வேறுபட்டது. தேவன் முதலில் எல்லாவற்றையும் எந்தப்பொருளும் இல்லாமல் சிருஷ்டித்தார். ஆனால் "ஓசேனு" என்பது ஏற்க்கனவே படைக்கப்பட்ட பொருட்களிலிலிருந்து புதிய விஷயங்களை உருவாக்குகிறதைக் குறிக்கும். இது மாற்றத்தைக் குறிக்கிறது. தேவன் மனிதனை பூமியின் மண்ணிலிருந்து உருவாக்கினார்.
ஏசாயா 45:9 - ல் உள்ளபடியே, களிமண் தன்னை உருவாக்கினவனை நோக்கி: என்ன செய்கிறாய் என்று சொல்ல முடியுமா?
இல்லை, அது வெறுமனே குயவனிடம் தன்னை சமர்ப்பிக்கிறது. அதேப்போல் நாமும் தேவனிடம் நம்மை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்.
"இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண், நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை."
- ஏசாயா 64:8
வாழ்க்கையில் நாம் குழப்பமாகவும், உடைந்தவர்களாகவும், பயனற்றவர்களாகவும், தோற்றவர்களாகவும், அங்கீகரிக்கப்படாதவர்களாகவும் இருக்கலாம். ஆனால் நாம் தேவனுடைய கரங்களில் முழுமையாக நம்மை அர்ப்பணிக்கும்போது, அவர் நம்மை வடிவமைத்து, நம்மிடமிருந்து அழுக்குகளை அகற்றி, நம்மை மறுவடிவமைத்து, அவர் பயன்படுத்தக்கூடிய பாத்திரமாக மாற்றுவார். தேவனால் மாற்ற முடியாத காரியம் ஒன்றுமில்லை.
"இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின."
- 2 கொரிந்தியர் 5:17
[Osenu / Yatsar / Bara என்றால் எபிரேயத்தில் படைத்தவர், உருவாக்கியவர் அல்லது குயவனைக் குறிக்கும்.]
Strong's Hebrew:
3335. yatsar
6213. asah
1254. bara

யேகோவா ஹாஷோபெட்

யேகோவா ஹாஷோபெட்

Jehovah Hashopet
பொருள்: கர்த்தர் நம் நியாயாதிபதி
God is our judge
"தேவன் நீதியுள்ள நியாயாதிபதி..."
- சங்கீதம் 7:11
அநேக நியாயாதிபதிகளைப் பற்றி வேதம் பேசுகிறது. இன்றும் Judge Frank Caprio போன்ற ஒரு சில நீதிபதிகள் சிறிய வழக்குகள் முதல் மிகக் கடுமையான வழக்குகள் வரை மக்களுக்கு நீதி வழங்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள். எவ்வாறாயினும், ஒரு நீதிபதி ஒரு கட்டத்தில் தனது தீர்ப்பில் பிழை செய்து பாதிக்கப்பட்டவர் அல்லது குற்றம் சாட்டப்பட்டவருக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கஷ்டத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு. ஒரு மிகச்சிறந்த நீதிபதியால் கூட நம் மனதை முழுமையாக புரிந்துக்கொள்ள முடியாது, உண்மையை வெளிவர வைக்க முடியாது, சில சமயங்களில் பாரபட்சமாகக்கூட இருக்கலாம். தவறான தீர்ப்புகளால் எத்தனை அப்பாவிகளின் வாழ்க்கை வீணானதைக் கேள்விப்பட்டிருப்போம்!
நம் தேவன் ஒரு நீதியுள்ள நியாயாதிபதி. அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல. தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார் என்று வேதம் கூறுகிறது.
"நீர் என் நியாயத்தையும் என் வழக்கையும் தீர்த்து, நீதியுள்ள நியாயாதிபதியாய்ச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறீர்."
-சங்கீதம் 9:4
• Strong's Hebrew: 8199 - SHAPHAT என்றால் நியாயம், நீதியைக் குறிக்கும் சொல்.
• யோசபாத் (Jehoshapat) என்றால் 'யேகோவா தீர்ப்பளித்தார்' என்று அர்த்தம்.
• "தானியேல்" என்ற பெயருக்கும் "கர்த்தர் என் நியாயாதிபதி" என்று பொருள்.

யேகோவா மெலேக்

யேகோவா மெலேக்

Jehovah Melek
பொருள்: “தேவனே என் ராஜா”
God is my King
"பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்துவருகிற தேவன் பூர்வகாலமுதல் என்னுடைய ராஜா."
- சங் 74:12
'மெலேக்' என்றால் எபிரேய மொழியில் 'ராஜா' என்று பொருள். அபிமெலேக், மெல்கிசேதேக், மல்கியா போன்ற பெயர்களுக்கான மூலச் சொல் இதுதான்.
இந்த நவீன உலகில், வரலாற்றுப் புத்தகங்கள், கதைகள் மற்றும் திரைப்படங்கள் மூலம் மட்டுமே நம்மால் மன்னர் ஆட்சியைப்பற்றிப் புரிந்துக்கொள்ள முடியும். சவுதி அரேபியா, ஓமன் போன்ற ஒரு சில நாடுகளில் மட்டுமே இன்றும் மன்னர் ஆட்சி இருக்கிறது. ஆனால் இயேசு கிறிஸ்துவின் காலத்தில், பல ராஜாக்களும் ராஜ்யங்களும் இருந்தன. அவர் அடிக்கடி தனது உவமைகள் மூலம் பரலோக ராஜ்யத்தைக் குறிப்பிட்டார்.
"மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது..." - மத்தேயு 3:2
சர்வவல்லமையுள்ள பிதாவின் குமாரனாகிய ராஜாதி ராஜாவாகிய இயேசு, தன்னைத் தாழ்த்திக் கொண்டு எளிய மனிதனாகப் பிறந்தார். அவர் நினைத்திருந்தால் அரண்மனையில் ஒரு இளவரசராக பிறந்திருக்கலாம்! ஆனால் அன்று அவரது பிறப்பு மக்களால் கொண்டாடப்படவில்லை. தேவதூதர்கள் அவருடைய பிறப்பை அறிவித்ததையும், மேய்ப்பர்கள் அவரை வணங்குவதையும், சாஸ்த்திரிகள் அவருக்கு விலையுயர்ந்த பரிசுகளை தூரத்திலிருந்து கொண்டு வந்ததையும் காண்கிறோம்.
இந்த ராஜா, தனது மக்களுக்காக தன் ஜீவனைக் கொடுத்தார். சிலுவையில் தொங்கவிடப்பட்டார். அதில் "யூதர்களுடைய ராஜா" என்றெழுதி, ரோமானியர்கள் அவரை கேலி செய்வதாக நினைத்தார்கள், ஆனால் அது உண்மை என்பதை பின்னர் உணர்ந்தனர். அவர் எல்லைகளைக் கொண்ட ராஜா அல்ல, அவரே இப்பிரபஞ்சத்தின் ராஜா!
"கர்த்தர் சதாகாலங்களாகிய என்றென்றைக்கும் ராஜரிகம் பண்ணுவார்."
- யாத்திராகமம் 15:18
[Strong's Hebrew:
4427 - malak
4428 - melek]

யேகோவா கோயல்

யேகோவா கோயல்

Jehovah Goel
பொருள்: கர்த்தரே என் மீட்பர்
God is my redeemer
"என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்."
- யோபு 19:25
யூத பாரம்பரியத்தில், ஒரு சுதந்தரவாளி (Kinsman redeemer) என்பவர், ஒருவரின் நெருங்கிய உறவினராக இருக்கும் ஒரு நபர். அடிமையாக விற்கப்பட்ட உறவினரை திரும்ப வாங்கும் உரிமை அவருக்குத்தான் உண்டு. ரூத் புத்தகத்தில், போவாஸ் நகோமியின் நெருங்கிய உறவினராக இருந்ததால், அவர் சுதந்தரவாளியாக செயல்பட்டதைக் காணலாம். மற்றொரு உறவினர் இருந்தார், ஆனால் அவர் அந்த விதவைகளைக் காப்பாற்றும் கடமையை நிராகரித்துவிட்டார். போவாஸின் கதாப்பாத்திரம் நமது மீட்பராகிய தேவனைக் குறிக்கிறது. அவர் ரூத்தை திருமணம் செய்து கொள்ள தயங்கவில்லை. அவரது பொறுப்பை உணர்ந்து, சரியானதைச் செய்தார். இதைச் செய்ததன் மூலம் போவாஸ் தாவீதின் மூதாதையராகவும் இறுதியில் இயேசுவின் மூதாதையராகவும் ஆனார்.
நகோமி மற்றும் ரூத்தைப் போலவே, உலகில் உள்ள அனைவருக்கும் ஒரு மீட்பர் தேவை. பாவம் என்ற அடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுவிப்பதற்கு ஒரு சுதந்தரவாளி தேவை. நாம் எந்த காலகட்டத்தில் வாழ்ந்தாலும், பாவத்திலிருந்து நம்மை மீட்பவராகிய இயேசுவை நம்பலாம். அவர் உங்களையும் என்னையும் தனது சொந்த இரத்தத்தையே விலைக்கிரயமாக செலுத்தி தன் சொந்தமாக்கிக்கொண்டார்.
"...பயப்படாதே, உன்னை மீட்டுக்கொண்டேன், உன்னைப்பேர்சொல்லி அழைத்தேன், நீ என்னுடையவன்."
- ஏசாயா 43:1
Strong's Hebrew: 1350 - gaal

யேகோவா கெமூலா

யேகோவா கெமூலா / எல் ஆசிப்

பொருள்: சரிக்கட்டுகிற தேவன் /மீட்டெடுக்கும் தேவன்
எபிரேய மொழியில் கெமூலா என்றால் சரிகட்டுவது, ஆசிப் என்றால் மீட்டெடுப்பது என்று பொருள்.
"...சரிக்கட்டுகிற தேவனாகிய கர்த்தர் நிச்சயமாகப் பதில் அளிப்பார்."
- எரேமியா 51:56
கண்ணீரின் தீர்க்கதரிசியாகிய எரேமியா, தனது மக்களை சிறைப்பிடிக்க தேவன் பாபிலோனியர்களை அனுமதித்தாலும், அவர் அவர்களை பழிவாங்குவார் என்று இஸ்ரவேலை ஆறுதல்படுத்துகிறார்.
இழந்துபோனதை தேவன் மீட்டுக்கொடுப்பவர். இன்று நாம் சிந்தும் ஒவ்வொரு கண்ணீரும் இறுதியில் மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் நூறு மடங்கு திருப்பித் தரப்படும். நாம் உண்மையுள்ளவர்களாக இருந்தால், நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு அநீதிக்கும் தேவன் நமக்கு ஈடு செய்வார் என்பதை அறியவேண்டும். அவர் யோசேப்பு, நகோமி, ரூத், யோபு, லாசரு மற்றும் பலரின் வாழ்க்கையை இரட்டிப்பாக ஆசீர்வதித்த தேவன்.
நோய்க்குப் பதிலாக ஆரோக்கியத்தையும், வறுமைக்குப் பதிலாக ஐசுவரியத்தையும், துக்கத்திற்குப் பதிலாக ஆறுதலையும், நம்பிக்கையற்றவர்களுக்கு நம்பிக்கையையும், விசுவாசமற்றவர்களுக்கு விசுவாசத்தையும் கொடுக்கிறார்.
தேவனால் மீட்க முடியாத காரியம் எதுவும் இல்லை. முன்பு இருந்ததை விட நம்மை சிறந்தவர்களாக ஆக்குகிறார்.
"உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்."
- சங்கீதம் 51:12

Wednesday, July 10, 2024

யேகோவா கிப்போர்

யேகோவா கிப்போர்

Jehovah Gibbor /
கடோர் மில்காமா
Gador Milchamah
பொருள்: வல்லமையுள்ள தேவன் /
யுத்தத்தில் பராக்கிரமமுள்ள கர்த்தர்
The Lord mighty in Battle
"யார் இந்த மகிமையின் ராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமமுமுள்ள கர்த்தர், அவர் யுத்தத்தில் பராக்கிரமமுள்ள கர்த்தராமே."
சங்கீதம் 24:8
கிப்போர் என்ற எபிரேய வார்த்தை வல்லமை அல்லது பராக்கிரமத்தைக் குறிக்கும். நிம்ரோத் "பராக்கிரமசாலியானான்... கர்த்தருக்கு முன் ஒரு பலத்த வேட்டைக்காரனாயிருந்தான்" என்றும், இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீதையும் சில போர்வீரர்களையும் விவரிக்க "கிப்போர்" என்ற வார்த்தை வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது வீரம், தைரியம் மற்றும் விவேகத்தைக் குறிக்கும் சொல்.
பல போர்வீரர்களையும் வலுவான ஆயுதங்களையும் கொண்ட இஸ்ரவேலர்களின் எதிரிகளுடன் ஒப்பிடும்போது, சில வீரர்களையும் ஆயுதங்களையும் கொண்ட இஸ்ரவேலுக்காக தேவனே போராடி வெற்றிப்பெறுவதை நாம் காணலாம். ஆனால் அவர்கள் தங்கள் சொந்த பலத்தை நம்பும் போதெல்லாம், அவர்கள் தோல்வியடைந்தனர்.
அதேபோல், நமது ஆவிக்குறிய யுத்தங்களில் நாம் அடிக்கடி போராட்டங்களை நம் கைகளில் எடுத்துக்கொண்டு இறுதியில் தோல்வியடைவதைக் காண்கிறோம். அவர் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளார் என்பதை அறிந்து தேவனை நமது தளபதியாக ஆக்கும்போது, நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். நாம் கிறிஸ்துவினாலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோம்!
"...உன்னைப் பராக்கிரமசாலியின் பட்டயத்துக்கு ஒப்பாக்குவேன்."
சகரியா 9:13
Strong's Hebrew:
1368 - gibbor

யேகோவா மிஸ்கபி / மக்சி

யேகோவா மிஸ்கபி / மக்சி

Jehovah Misgabi / Machsi
பொருள்: தேவன் என் அடைக்கலம் / தஞ்சம்
The Lord is my refuge
"சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர், நெருக்கப்படுகிறகாலங்களில் அவரே தஞ்சமானவர்." - சங்கீதம் 9:9
Misgab / MACH'SEH என்றால் அடைக்கலம் அல்லது தஞ்சம்.
பழைய ஏற்பாட்டில், தேவன் இஸ்ரவேலர்களை ஆறு பட்டணங்களைக் குறிக்கக் கட்டளையிடுகிறார் - கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றுபோட்டவன் அங்கே ஓடி, சரியான தீர்ப்பு வழங்கப்படும் வரை தப்பிப்போயிருக்க முடியும். (எண் 35:11)
இந்த மனிதன் ஊருக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்டு, தன் சகோதரனைக் கொன்றதற்காக இரத்தப்பழிவாங்குபவன் இவனைக் கொன்றால், இவனைக் கொன்றதற்காக அவன் குற்றவாளி அல்ல. ஆதலால், இந்த மனிதன் வாழக்கூடிய ஒரே பாதுகாப்பான இடம் - இந்த அடைக்கலப்பட்டணம்.
தஞ்சம் தேவைப்படும் அனைவருக்கும் கர்த்தர் மறைவிடமாக இருக்கிறார். சிறுவயதில் நாம் அனைவரும் "கண்ணாம்பூச்சி" விளையாடியிருப்போம், மற்றவர்களைப் பிடிக்கும் நபரிடமிருந்து நம்மை மறைத்துக் கொள்ள வேண்டும். நாம் வளரும்போது, எப்படியோ இன்னும் அதே விளையாட்டை விளையாடுகிறோம், ஆனால் நிஜ வாழ்க்கையில். நாம் அனைவரும் பயம், பாதுகாப்பின்மை, வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள், பொறுப்புகள் போன்றவற்றிலிருந்து தப்பி ஓட முயற்சிக்கிறோம். உடல்நோய்கள், மனநலன் மற்றும் ஆவிக்குறிய இடறல்களுக்கு நாம் பயப்படுகிறோம்.
இன்று நான் உங்களை அதே விளையாட்டை விளையாட அழைக்கிறேன்! வித்தியாசம் என்னவென்றால், நாம் ஒளிந்துக்கொள்ளவோ அல்லது ஒருவரையொருவர் தேடவோ போவதில்லை, நாம் தேவனைத் தேடப் போகிறோம். உலகத்திற்கு மறைந்து, தேவனைத் தேடுங்கள்! பிரச்சனையின் போது அவர் மட்டுமே மெய்யான அடைக்கலம்.
"நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்."
- சங்கீதம் 91:2
[Strong's Hebrew
4869 - misgab
4733 - miqlat
4268 - machaseh or machseh]

யேகோவா மாகென்

யேகோவா மாகென்

Jehovah Magen
பொருள்: கர்த்தரே என் கேடகம்
God is my shield
'மாகென்' (மௌகனே) என்றால் கேடகம் / கவசம். தேவன் உத்தமமாய் நடக்கிறவர்களுக்கும், அவரை நம்புகிற அனைவருக்கும், அவருக்கு பயப்படுபவர்களுக்கும் கேடகமாயிருக்கிறார் என்று வேதாகமம் சொல்கிறது.
வேதத்தில் ஆபிரகாம் தேவனாகிய கர்த்தரால், தான் இதுமுன் அறிந்திராத ஒரு தேசத்துக்கு புறப்படும்படி அழைக்கப்பட்டார். கர்த்தருடைய வார்த்தைக்கு இணங்கி ஆபிரகாம் தன் குடும்பத்தை இடம் பெயர்த்துக் கொண்டு வாக்குத்தத்தத்தின் தேசத்தை நோக்கி புறப்படுகிறார். அங்கு அவருடைய குடும்பம் கடலின் மணலைப்போல பெருகுகிறார்கள்.
அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமுக்கு தரிசனமாகி
"ஆபிராமே நீ பயப்படாதே. நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார்." ( ஆதி 15:1)
பெலிஸ்தனாகிய கோலியாத்தை வீழ்த்த தாவீதுக்கு பட்டயமோ, ஈட்டியோ, சவுலின் கவசமோ தேவைப்படவில்லை, இஸ்ரவேலின் இராணுவங்களின் தேவனுடைய நாமமே போதுமானதாக இருந்து. தாவீது போன இடத்திலெல்லாம் கர்த்தரே அவனைக் காப்பாற்றினதுபோல நம்மையும் காப்பாராக!
"செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிடத்தில் என் கேடகம் இருக்கிறது."
சங்கீதம் 7:10

யேகோவா ஏலோஹிம் அப்

யேகோவா ஏலோஹிம் அப்

Jehovah Elohim Ab
முற்பிதாக்களின் தேவன்
God of our forefathers
"மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக. என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்."
யாத் 3:15
தேவன் ஏன் தன்னை ஆதாமின் தேவன்/ஆபேலின் தேவன் அல்லது வேறு ஒருவரின் தேவன் என்று மோசேயிடம் அறிவிக்கவில்லை? ஏனென்றால், ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு எல்லோரிடமிருந்தும் வேறுபட்டவர்கள். பலவிதமான மனிதர்களின் முன்னோடிகள்.
• ஆபிரகாம் ஒரு அசாதாரண மனிதர். ஆபிரகாம் உயர்ந்த நற்பெயரைக் கொண்டிருந்த தனது தேசத்தை விட்டு வெளியேறி தேவனைப் பின்பற்றினார். அவர் கண்மூடித்தனமாக தேவனை விசுவாசித்தார். அவர் தனது சொந்த மகனையே பலியிடத் தயாராக இருக்கும் அளவிற்கு தேவன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். உலகில் உள்ள அனைத்து அசாதாரண மனிதர்களுக்கும் - வெற்றியாளர்கள், தலைவர்கள், மருத்துவர்கள் - தங்கள் துறையில் தனித்து நிற்கும் அனைவருக்கும் நம் தேவனே கர்த்தர்.
• ஈசாக்கு தீய எண்ணங்கள் இல்லாத ஒரு சாதாரண மனிதர். ஈசாக்கு பலரைப் போல ஒரு எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். அவர் தகப்பன் சொன்ன பெண்ணை மணந்தார். அவருக்குத் தேவையானது உணவு, தங்குவதற்கு இடம் மற்றும் உடுத்திக்கொள்ள உடைகள் மட்டுமே. உங்களையும் என்னையும் போன்ற அனைத்து சாதாரண மக்களுக்கும் - பாடுபடும் நடுத்தர வர்க்கம், கூலிக்கு வேலை செய்யும் ஊழியர்கள், தங்கள் அன்றாட வாழ்க்கையை சாதாரணமாக வாழ்பவர்களுக்கும் தேவனே கர்த்தர்.
• யாக்கோபு ஒரு தந்திரமான மனிதன். யாக்கோபு பிறப்பிலிருந்தே துரோகியாக இருந்தார். அவர் ஏமாற்றி, உழைத்து, ஓடிப்போய் ஒளிந்து கொள்ள வேண்டிய வாழ்க்கையை வாழ்ந்தார். உலகில் திருடர்கள், கொலைகாரர்கள், ஏமாற்றுபவர்களுக்கும் நம் தேவனே கர்த்தர். தேவன் பாவிகளுக்காகவே வந்தார்.
நம் தேவன் அசாதாரண மனிதர்கள், சாதாரண மனிதர்கள் மற்றும் தீய மனிதர்களுக்கும் தேவன்.

யேகோவா எசேர்

யேகோவா எசேர்

Jehovah Ezer
கர்த்தரே என் சகாயர்
God is my helper
"தனக்குத்தானே உதவி செய்பவர்களுக்கு கடவுள் உதவுகிறார்" என்பது அடிக்கடி உலகத்தார் கூறும் பழமொழி. ஆனால் வேதம் இதற்கு எதிர்மறையாகக் கற்பிக்கிறது. நம் தேவன் உதவியற்றவர்களுக்கு உதவுகிறார்!
"...ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான், திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே."
- சங் 10:14
'எசேர்'/ 'அசார்' என்றால் உதவி/ஒத்தாசை என்று பொருள். இதிலிருந்துதான் எலியேசர், அசரியா, அஸரியேல், (எபெனேசர்) ஆகியோர் தங்கள் பெயர்களைப் பெறுகிறார்கள்.
சங்கீதம் 121:1,2 - ல் தாவீது இவ்வாறு பாடுகிறார்: "எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்".
தேவன் நமக்கு உதவி செய்வதில்லை என்று சில இக்கட்டான நேரங்களில் நாம் நினைக்கிறோம். தேவன் தொலைவில் இருப்பதாக உணரும்போது நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்: பரீட்சையின் போது ஆசிரியர் எப்போதும் அமைதியாகத்தான் இருப்பார்! நாம் அவருடைய வார்த்தையை நம்பும்போது, அவர் நம் உதவியாளராக மட்டுமல்லாமல், நம் பாதுகாவலராகவும் இருப்பார்.
அதற்காக நாம் ஒன்றும் செய்யாமல் இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. நாம் வெறுமனே ஜெபத்தை மட்டும் செய்துவிட்டு சும்மா இருக்கக்கூடாது. உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு வேலைக்காக வேண்டும்போது – வல்லமை தேவனுடைய கரங்களில் இருந்தாலும், நீங்கள் தீவிரமாக வேலையைத் தேட வேண்டும். இந்த அடிப்படையில், முதல் வாக்கியம் இங்கே ஓரளவு அர்த்தமுள்ளதாகத்தான் இருக்கிறது!
"அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான் என்று சொல்லலாமே."
எபிரேயர் 13:6
[Strong's
5826 - azar
5827 - Ezer]

யேகோவா ஏலி

யேகோவா ஏலி

Jehovah Eli
பொருள்: கர்த்தரே என் தேவன்
The Lord is my God
"நீர் என் தேவன், நான் உம்மைத் துதிப்பேன், நீர் என் தேவன், நான் உம்மை உயர்த்துவேன்."
சங்கீதம் 118:28
எலியா, எலிசா, எலியேசர், எலிமெலேக், எலிசபெத், எலியாசாப் போன்ற எபிரேயப் பெயர்களில் "எல்" என்ற அடிச்சொல் உள்ளது. அதன் பொருள் “தேவன்” என்று பொருள். "ஏலி" என்பது அராமிக் (Aramaic) மொழியில் 'என் தேவன்'.
சாமுவேலுக்கு வழிகாட்டியாக இருந்த பிரதான ஆசாரியரின் பெயர்கூட "ஏலி" தான். இதன் பொருள் 'உயர்ந்த/ஏற்றப்பட்ட' என்று பொருள். (இதை 'ஈலை' என்று ஆங்கிலத்தில் உச்சரிப்பார்கள்)
மரணத்தின் விளிம்பில், "இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்: அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்."
மாற்கு 15:34
(எலோயீ என்பது "எல்"-இன் அராமிக் சொல். அரபி மொழியில் "அல்லா" ஆகும்)
இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு அவரைக் கண்டபோது, தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.
அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.
யோவான் 20:29
சில நேரங்களில் நம் தேவன் யார் என்று யோசிக்க வேண்டும்! நீங்கள் தேவாலயத்திலிருந்து வெளியே வரும்போதும், இயேசுதான் உங்கள் தெய்வமா? அவர் உங்கள் நாவைக் கட்டுப்படுத்துகிறாரா? உங்கள் எண்ணங்கள் கிறிஸ்துவின் அன்பினால் நிரப்பப்பட்டிருக்கிறதா அல்லது உலக இச்சையால் நிரப்பப்பட்டிருக்கிறதா?
[Strong's Hebrew: 410 - el
Strong's Greek: 1682 - elói]

யேகோவா ஏல் பேலெ

யேகோவா ஏல் பேலெ

Jehovah El Peley
பொருள்: அதிசயங்களின் தேவன்
"அதற்குக் கர்த்தருடைய தூதனானவர்; என் நாமம் என்ன என்று நீ கேட்கவேண்டியது என்ன? அது அதிசயம் என்றார்."
நியா 13:18
'பேலெ' என்றால் எபிரேயத்தில் 'அதிசயம்' என்று பொருள். அதிசயம் என்ற சொல் பொதுவாக சாத்தியமற்ற அல்லது இயற்கைக்கு அப்பார்ப்பட்ட எந்த நன்மையான நிகழ்வையும் விவரிக்கப் பயன்படுகிறது. பரிசுத்த வேதாகமம் பல அற்புதங்களையும் அதிசயங்களையும் உள்ளடக்கியது.
🔹️தேவன் மன்னாவைக் கொடுத்து இஸ்ரவேலர்களுக்கு அற்புதமாக உணவளித்தார்.
🔹️மேகஸ்தம்பம் மற்றும் அக்கினிஸ்தம்பத்தினால் அவர்களை வழிநடத்தினார்.
🔹️செங்கடலையும் யோர்தானையும் பிளந்தார்.
🔹️உலர்ந்த எலும்புகளை உயிர்ப்பித்தார்.
🔹️எலியா வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.
🔹️எல்லா அதிசயங்களிலும் மிகப் பெரிய அதிசயம்: இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார்.
🔹️ஏசாயா 9:6 இல் அவர் 'அதிசயமானவர்' என்றும் பெயரிடப்பட்டுள்ளார்.
🔹️தோராயமாக இயேசு செய்த எண்ணற்ற அற்புதங்களில் 37 மட்டுமே புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எரே 32:27-இல் “இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?” என்கிறார். தேவன் நம் வாழ்வில் அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்து மகிமைப்பட விரும்புகிறார்.
[Strong's:
6382 - pele
4159 - mopheth
6383 - pili or pali]

ஜீவவிருட்சம்

ஜீவவிருட்சம் Tree of Life Heb: Etz Chaim பழைய ஏற்பாட்டில், "ஜீவவிருட்சம்" ஆதியாகமம் 2:9 இல் முதன்முதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின...