Monday, October 28, 2024

அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமானவர்

அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமானவர்
Image of the invisible God
[கிரேக்கம்: eikon tou Theou tou aoratou]
வசனம்: "அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்."
கொலோசெயர் 1:15
மனிதன் தேவனுடைய சாயலாகவும் அவருடைய ரூபத்தின்படியேயும் உண்டாக்கப்பட்டான் என்று ஆதியாகமம் 1:26 கூறுகிறது. தேவன் தனது வார்த்தையால் மற்ற அனைத்தையும் படைத்தார், ஆனால் அவர் தனது சொந்த கைகளால் நம்மைப் படைத்தார். இரண்டு கண்கள், வாய், இரண்டு கைகள், இரண்டு கால்கள், மற்றும் பல உள்ளுறுப்புகளைப் படைத்து நமக்கு ஜீவசுவாசத்தை தந்தார். அவனுக்கு சிந்திக்கும் திறனை அளித்து, பூமியின்மேல் அதிகாரம் கொடுத்தார். தனக்கு இருப்பது போல, சொந்தமாக முடிவெடுக்கும் தன்மையை தேவன் மனிதனுக்குக் கொடுத்தார். ஏதேன் தோட்டத்தில் தேவன் ஆதாமைக் கண்டபோது, அவர் தன்னுடைய பிரதிபலிப்பை மனிதனிடம் கண்டார். தேவன் மனிதனுடன் ஒன்றாக நடந்தார், பேசினார், அவனை மிகவும் நேசித்தார்.
ஆனால் அவர்கள் சாத்தானுடைய சூழ்ச்சியால் பாவத்தில் விழுந்தபோது, தேவனுடன் இருந்த உறவு சிதைந்தது. உலகத்தில் பாவம் பெறுக பெறுக, மனிதன் அதற்கு அடிமையானான். அது நம்மை தேவனிடமிருந்து பிரித்தது. ஆனால் இயேசுவிடம் அப்படிப்பட்ட பாவம் ஒன்றும் இல்லை; மாறாக, "அவர் தேவனுடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராக இருக்கிறார்."
(எபி 1:3)
பிதாவைக் கண்டிறாத நமக்கு, அவரே பிதாவின் வெளிப்பாடாக இருக்கிறார். இயேசு, "என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்" என்றும், "நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்" என்றார்.
(யோவான் 14:9, 10:30)
இயேசு மனிதர்களுக்கு வெளிப்புறமாக ஒரு மனிதனாகத் தோன்றினார், ஆனால் கடவுளாக அவர் பிதாவின் ரூபமாக வெளிப்பட்டார். தேவனுக்கு நம்மைப்போல் சரீரம் கிடையாது, அவர் ஆவியாக இருக்கிறார். மற்றவர்கள் கிறிஸ்தவர்களாகிய நம்மைக் காணும்போது நமக்குள் இருக்கும் இயேசுவைக் காணும்படி நடந்துக்கொள்வோம். அவருடைய மேன்மை உங்கள் வழியாக மற்றவர்களுக்கு பரவட்டும், அவருடைய மகிமையான ரூபம் உங்கள் மூலம் பிரகாசிக்கட்டும்!
"...அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்."
1 யோவான் 3:2
~ ரேமா ஜாய் ஷரத்
[Strong's concordance:
Hebrew: 6754. tselem [சாயல்]- image
1823. demuth [ரூபம்] - likeness
Greek:
1504. eikón - an image, likeness, bust.]
May be an image of 2 people, temple and text
All reactio

தாவீதின் வேரும் சந்ததியுமானவர்

தாவீதின் வேரும் சந்ததியுமானவர்

The root and offspring of David
"... நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்."
வெளி 22:16
கர்த்தராகிய இயேசு மனிதனாக பூமிக்கு வருவதற்கு முன்பாகவே தாவீது இயேசுவால் படைக்கப்பட்டார், ஆனால் பிற்பாடு இயேசு அவர் வம்சத்தில் மனிதனாக தோன்றினார். இயேசுவின் தகப்பனாகிய யோசேப்பு, தாவீதின் குமாரனாகிய சாலமோனின் வம்சத்தில் பிறந்தார். மரியாளும், தாவீதின் மற்றொரு மகனாகிய நாத்தானினா வம்சத்தில் பிறந்தார். ஆதலால், இயேசு தாவீதின் சந்ததியாக உலகில் தோன்றினார்.
தாவீது கீழ்வரும் வசனத்தில் இயேசுவை ஆண்டவராக அங்கீகரித்தார்:
"கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்."
சங்கீதம் 110:1
தாவீது இயேசுவுக்கு சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தாலும், இயேசு சுவிசேஷங்களில் பல முறை "தாவீதின் குமாரன்" என்று அழைக்கப்படுகிறார். இருவருக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருப்பதைக் காணலாம்:
• தாவீது ஒரு மேய்ப்பன், இயேசுவும் "நல்ல மேய்ப்பர்" என்று அழைக்கப்படுகிறார்.
• இருவரும் பெத்லகேம் ஊரில் பிறந்தவர்கள்.
• தாவீது 30 வயதில் ராஜாவானார், இயேசு 30 வயதானபோது அவருடைய ஊழியத்தைத் தொடங்கினார்.
• தாவீது கோலியாத்தை வென்றார், இயேசு சாத்தானை ஜெயித்தார்.
• தாவீது கர்த்தருடைய இதயத்திற்கு ஏற்ற ஒரு மனிஷனாக இருந்தார், இயேசு பிதாவின் சித்தத்தையே செய்தார்.
• வெகு நாட்கள் குழந்தை இல்லாமல் இருந்த அன்னாளுக்குப் பிறந்த சாமுவேல் தீர்க்கதரிசியால், தாவீது இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டார். அதேபோல், வெகு நாட்கள் குழந்தை இல்லாத எலிசபெத்திற்கு பிறந்த யோவான் ஸ்நானகன், இயேசுவிற்கு ஞானஸ்நானம் கொடுத்தார். இப்படி பல ஒற்றுமைகள் உள்ளது.
எருசலேமை தலைநகரமாகக் கொண்டு, தாவீது பல ஆண்டுகள் இஸ்ரவேலின் ராஜாவாக இருந்தார். இயேசுவும் "ராஜாதி ராஜன்" என்று அழைக்கப்படுகிறார். புதிய எருசலேமை தலைநகரமாகக் கொண்டு, இயேசு ஆயிரமாண்டு உலகின் ராஜாவாக ஆட்சி செய்வார்.
~ ரேமா ஜாய் ஷரத்
[Strong's concordance:
Greek
4491. rhiza - root
1085. genos - offspring]

மகா பிரதான ஆசாரியர்

மகா பிரதான ஆசாரியர்

Great High Priest
Greek: Megan archierea
எபிரேயருக்கு எழுதின நிரூபத்தில், இயேசு "மகா பிரதான ஆசாரியர்" என்று அழைக்கப்படுகிறார் (எபி 2:17; 4:14).
அவர் லேவியின் கோத்திரத்தில் பிறக்கவில்லை...ஆதலால் அவர் ஆரோனின் முறைமைப்படி இல்லாமல், மெல்கிசேதேக்கினுடைய முறைமையின்படி அழைக்கப்பட்ட ஆசாரியராக இருக்கிறார். (எபிரெயர் 7:11-22).
"மெல்கிசேதேக்கு" என்பவர் ஆதியாகமம் 14-இல் அறிமுகப்படுத்தப்பட்டவர். அவர் சாலேமின் ராஜாவாகவும் ஆசாரியராகவும் இருந்தார் என்று கூறப்படுகிறது. மெல்கிசேதேக்கு ஆபிராமை ஆசீர்வதித்தார். ஆபிராம் அவருக்கு எல்லாவற்றிலும் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார், இதனால் மெல்கிசேதேக்கின் ஆசாரியத்துவத்தையும் அதிகாரத்தையும் உறுதிப்படுத்தமுடியும். அவர்கள் ஆபிரகாமின் காலத்திற்கு முன்பே மெய்யான தேவனை வணங்கினார்கள். சிலர் யோபுவும் எத்திரோவும் மெல்கிசேதேக்கைப் போன்றவர்கள் என்று நம்புகிறார்கள், அவர்கள் நியாயப்பிரமாணம்
எழுதப்படுவதற்கு முன்பே தேவனுக்கு பலியிட்டார்கள். இயேசு இந்த ஆசாரியர்களின் வரிசையைச் சேர்ந்தவர் என்று வேதம் கூறுகிறது – அவர் மாம்ச சம்பந்தமான நியாயப்பிரமாணத்தின்படி அல்லாமல், அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியரானார்.
இஸ்ரவேலில், பாவ நிவிர்த்தி நாளில் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழையத்தக்கவர் பிரதான ஆசாரியர் ["Kohen Gadol": "கொஹென் கடோல்"] மட்டுமே. அவர் மட்டும்தான் உள்ளே நுழைந்து தன் பாவத்திற்காக பலி செலுத்த முடியும். அதற்குப்பின்பு தான் அவர் மற்ற ஜனங்ளுக்கு சுத்திகரிப்பின் பலிகளை வழங்க முடியும். (லேவி 16)
இயேசு ஒரு பிரதான ஆசாரியராக, நமக்காக தேவனிடம் மத்தியஸ்தராக செயல்படுகிறார். நமக்கும் தேவனுக்கும் இடையே இருந்த தேவாலயத்தின் திரைச்சீலையைக் கிழித்தார். ஆண்டுதோறும் பாவநிவிர்த்தி செய்வதற்குப் பதிலாக, இயேசு அனைவருக்கும் ஒரே முறை தன்னையே பலியிட்டார். அவர் மற்ற எல்லா ஆசாரியர்களிடமிருந்தும் வேறுபட்டவர்.
"நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்."
எபிரேயர் 4:15
~ ரேமா ஜாய் ஷரத்
[Strong's concordance:
Heb: 3548. kohen - priest
1419. gadol - great
Greek: 749. archiereus - high priest, chief priest.
3173. megas - great]

மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறானவர்

"மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறானவர்"

THE FIRSTBORN FROM THE DEAD
[Greek: prototokos ek ton nekron]
"...எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்."
கொலோசெயர் 1:18
இயேசு மரித்தோரிலிருந்து முதலில் எழுந்தவராவார். இந்த தலைப்பு இயேசுவின் உயிர்த்தெழுதலையும், மரணத்திற்கு உட்படாத ஒரு புதிய ஜனக்கூட்டத்தின் தலைவராக அவரது அதிகாரத்தையும் குறிக்கிறது. ஆனால், ஏற்கனவே பழைய ஏற்பாட்டில் எலியா, எலிஷா மரணத்திலிருந்து ஒரு சிலரை எழுப்பினார்கள் அல்லவா?
லாசரு, நாயீன் ஊராளாகிய ஒரு விதவையின் மகன் மற்றும் ஜெப ஆலயத்தலைவராகிய யவீருவின் மகள் என்ற 3 பேரை மரணத்திலிருந்து இயேசுவே எழுப்பினார் என்று சுவிசேஷ புத்தகங்களில் வாசிக்கிறோமே!
அப்போஸ்தலருடைய நடபடிகள் புஸ்தகத்தில், பேதுரு தொற்காள் என்ற தபீத்தாளை உயிர்ப்பித்தார், மேலும் அப்போஸ்தலனாகிய பவுல் ஐத்திகு என்ற வாலிபனை உயிர்ப்பெறச் செய்தார். இவர்களுக்கும் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. அவர்கள் அனைவரும் பின்பு ஒருநாள் மரித்தனர், ஆனால் இயேசு உயிர்த்தெழுந்த பின் மீண்டும் மரிக்கவில்லை. அவர் இன்றும் உயிருடன் இருக்கிறார், நம்முடன் பேசுகிறார். அவரது சரீரம் அழியவில்லை, இன்று வரை அவர் கல்லறை காலியாகத்தான் உள்ளது! இதுவே மெய்யான உயிர்த்தெழுதல்.
"மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம், மரணம் இனி அவரை ஆண்டுகொள்வதில்லை."
ரோமர் 6:9
மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த இயேசு, மறுபடியும் வரும்போது அவரைப் போலவே நாமும் உயிர்த்தெழ வழிவகுத்துள்ளார். நம் ஆத்துமா பரலோக்கத்திற்குச் செல்வது மட்டுமல்ல, நம் சரீரமும் இயேசுவைப் போலவே மறுரூபம் ஆகும். அந்நாளில் கிறிஸ்துவுக்குள் இறந்தவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்; அவர்களுடைய சரீரம் பூரணமாகும், அவர்கள் இனி ஒருபோதும் மரிக்க மாட்டார்கள். நித்திய ஜீவனேயன்றி, நித்திய மரணம் அவரை நம்பினோருக்கு இல்லை!
[Strong's Greek:
4416. prototokos - firstborn
3498. nekros - dead]

சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறானவர்

சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறானவர்

The firstborn over all creation
Greek: prōtotokos pasēs ktiseōs
வசனம்: "அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்."
- கொலோ 1:15
கிரேக்க வார்த்தையான “Prototokos” என்பது "முதலில் பிறந்த" அல்லது "முதலில் தோன்றிய" – என்று பொருள்படும். இந்த மூல வார்த்தையிலிருந்து தான் அறிவியலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் "Prototype" (மாதிரி வடிவம்) என்ற வார்த்தை வந்தது.
புறஜாதியாரான நமக்கு, முதற்பேறானவர் என்பது அவ்வளவு முக்கியமாகத் தெரியவில்லை. ஆனால் யூதர்களுக்கு அது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் முதற்பேறான குமாரனுக்குப் பல உரிமைகளும், சலுகைகளும் உண்டு. யூத கலாச்சாரத்தில், முதலாகப் பிறந்த மகன் [bekor] தனது தந்தையின் இடத்தை எடுத்துக்கொண்டு, அந்த குடும்பத்தின் தலைவனாகவும் இருப்பார். தந்தையின் ஆசீர்வாதத்தில் இரட்டிப்பான சேஷ்ட புத்திர பாகத்தையும் பெறுவார். ஆனால், வேதாகமத்தில் எப்போதும் அப்படி நடக்கவில்லை. உதாரணமாக, யாக்கோபு, யோசேப்பு போன்றவர்கள் முதலாக பிறந்த குழந்தையாக இல்லாவிட்டாலும் இரட்டிப்பான ஆசீர்வாதம் இவர்களுக்கே சென்றது.
Prototokos என்ற வார்த்தை "காலத்தில் முந்தினவர்" என்றும் "தரத்தால் உயர்ந்தவர்" என்னும் இரு அர்த்தங்களைக் கொண்டுள்ளது. யேகோவாவின் சாட்சிக்காரர்கள் இதை வைத்துக்கொண்டுதான் இயேசு தேவன் இல்லை என்கிறார்கள். நித்திய சிருஷ்டிக்கராகிய இயேசு சிருஷ்டிக்கப்பட்டவர் அல்ல என்பது கீழ்வரும் வசனம் மூலம் தெளிவாகின்றது.
"ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது. பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும், அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது."
கொலோசெயர் 1:16
நீங்கள் உங்கள் குடும்பத்தில் முதலாக பிறந்தவராக இருந்தாலும் சரி, நடுவில் பிறந்தவராக இருந்தாலும் சரி, அல்லது கடைக்குட்டியாக இருந்தாலும் சரி உங்கள் பிறப்பு வரிசை முக்கியமில்லை. நீங்கள் உங்களை தேவனுக்கென்று அர்ப்பணித்தால் நீங்களும் தேவனுக்கு முக்கியத்துவமானவர் தான். கடைசி மகனாக இருந்த தாவீதை உயர்த்தின தேவன் உங்களையும் உயர்த்துவார்.
"தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்."
ரோமர் 8:29
~ ரேமா ஜாய் ஷரத்
[Strong's numbers:
Heb: 1060. bekor - firstborn
Greek: 4416. prototokos - first-born, eldest.
2937. ktisis - creation]

மனுஷகுமாரன்

மனுஷகுமாரன்

SON OF MAN
[Heb: Ben-adam
Aramaic: Bar-enash
Greek: Ho huios tou anthrōpou]
"அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார்."
மத்தேயு 25:31
"மனுஷகுமாரன்" என்பது பொதுவாக மனிதனாக இருப்பதைக் குறிக்கும். தேவனுடைய வல்லமைக்கு முன்பாக மனிதர்களுடைய பலவீனத்தை வெளிக்காட்ட இது உதவுகிறது. இயேசு தன்னைத்தானே குறிப்பிடும் போது அதிகமாக பயன்படுத்திய தலைப்பு இதுவே. இது புதிய ஏற்பாட்டில் 88 முறைக்கு மேல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இயேசுவைத் தவிர, முதல் இரத்த சாட்சியாக மறித்த ஸ்தேவான் மட்டுமே இந்த வாக்கியத்தைப் பயன்படுத்தினார்.
"அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான்."
அப்போஸ்தலர் 7:56
இந்த தலைப்பு இயேசுவின் தெய்வீகத் தன்மையை விட அவரது மனிதத் தன்மையை அதிகமாக வெளிப்படுத்துகிறது. இயேசு ஒரு சாதாரண மனிதனாக வந்ததால், அவர் இப்படி அழைக்கப்படுகிறார். பரலோகத்தில் தன் அரியணையை விட்டு, மனிதர்களில் ஒருவராக வாழ்ந்த இயேசு கிறிஸ்துவின் தாழ்மையையும் பணிவையும் இது காட்டுகிறது. அவருக்கும் நம்மைப்போலவே தூக்கம், பசி, தாகம் இருந்தது. தன் தந்தை செய்த வேலையை அவரும் செய்தார், சோர்வடைந்தார்...நமக்கு ஏற்படும் எல்லா கஷ்டங்களும் தேவனாகிய அவருக்கும் வந்தது.
ஒரு மனிதன் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்தது மட்டுமல்லாமல், மனிதர்கள் எப்படி இருக்கவேண்டும் என்று தேவன் நினைத்தாரோ, இயேசு அப்படியே நமக்கு ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டினார். அவரால் மற்றவர்களின் பாவங்களை மன்னிக்கவும், இறந்தவர்களை எழுப்பவும், பிதாவின் சித்தத்தை நிறைவேற்றவும் முடிந்தது.
"மனுஷகுமாரன் கெட்டுப்போனதை ரட்சிக்க வந்தார்."
- மத்தேயு 18:11
"மனுஷகுமாரன்" தொடர்புடைய அனைத்து தீர்க்கதரிசனங்களையும் இயேசு நிறைவேற்றினார். (தானியேல் 7:13-14).
இயேசு 100% தேவனாக இருந்தாலும், அவர் 100% மனிதனாகவும் இருந்தார் (யோவான் 1:1, 14). தேவக்குமாரனாகவும், மனுஷகுமாரனாகவும், அவர் இரண்டு பட்டங்களுக்கும் தகுதியானவர். அவர் மறுபடி மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்போம்!
(லூக்கா 21:27)
~ ரேமா ஜாய் ஷரத்
[Strong's Hebrew:
1123. ben; 1247 bar - son
120. adam; 606. enash - man, mankind
Strong's Greek:
5207. huios - son
444. anthrópos - a man, mankind]

நீதியின் சூரியன்

நீதியின் சூரியன்

Sun of Righteousness

[Heb: Shemesh Tsedaqah]
"...என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும். அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும். நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்."
மல்கியா 4:2
இந்த வசனம் கர்த்தருடைய நாளைக் குறிக்கிறது. இயேசுவினுடைய வருகை உதிக்கின்ற சூரியனாக சித்தரிக்கப்படுகிறது. வானத்தில் இருக்கும் சூரியன், அவருடைய மகிமையின் நிழல் மட்டுமே. இயேசு கிறிஸ்துவே மெய்யான நீதியின் சூரியன்.
தன்னை நம்புபவர்களுக்கு நீதியை வழங்குவதே தேவனுடைய விருப்பம். பல இடங்களில் தேவ பிள்ளைகளை நீதிமான்கள் என்று வேதம் கூறுகிறது. மல்கியா 4:2 தேவ ஜனம் நீதியின் சூரியன் உலகம் முழுவதும் உதிப்பதைக் காண்பார்கள் என்கிறது. இது இயேசு கிறிஸ்துவின் ஆயிரமாண்டு அரசாட்சியின் உவமையாகும். அந்திகிறிஸ்து ஆட்சியின் இருள் மறைந்து, கிறிஸ்துவின் ஒளி அந்த இடத்தைப் பிடிக்கும். இது ஒரு புதிய ஆரம்பம். தேவனுடைய மக்கள் தங்கள் சுதந்திரத்தில் மகிழ்ச்சியடைந்து, கொழுத்த கன்றுகளைப்போல வளருவார்கள்.
அதிகாலையில் சூரியன் உதிக்கும்போது, இருளையும் மேகங்களையும் விரட்டி, பூமிக்கு ஒளியையும் மகிழ்ச்சியையும் தருகிறது. அதேபோல், நீதியின் சூரியனாகிய கிறிஸ்து அடிமைத்தனம், துக்கம், அநீதி போன்றவற்றை அகற்றுவார்.
அந்த நாள் வரும்போது கண்ணீர், வறுமை, போராட்டம், யுத்தம் போன்ற பொல்லாத காரியம் எதுவும் இருக்காது.
மிகவும் இருண்ட இடங்களில்தான் ஒளி நன்றாக பிரகாசிக்கும். தேவனிடமிருந்து எந்த வார்த்தையும் இல்லாத 400 வருட ஆவிக்குறிய இருண்ட காலத்திற்குப் பிறகு இஸ்ரவேலில் நீதியின் சூரியன் உதித்தார். இன்றும் உலகம் ஆழமான ஆவிக்குறிய இருளில் மூழ்கியிருக்கிறது... அவர் இரண்டாவது முறையாக வருவார், ஆயத்தமாக காத்திருப்போம்!
"As the sun is full of light, the ocean full of water, Heaven full of glory, so may our hearts be full of Thee, O Sun of Righteousness." (A Puritan Prayer)
~ ரேமா ஜாய் ஷரத்
[Strong's Hebrew:
8121. shemesh - sun
6666. tsedaqah - righteousness]

ஸ்திரீயின் வித்து

"ஸ்திரீயின் வித்து"

Seed of the woman
Heb: Zera ha'Isha
ஆதியாகமம் மூன்றாம் அதிகாரத்தில், ஆதாமையும் ஏவாளையும் அவர்கள் செய்த பாவத்திற்காக தேவன் தண்டிக்கிறார். சர்ப்பத்தையும் நோக்கி, "உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்" என்றார்.
(ஆதியாகமம் 3:15)
ஏதேன் தோட்டத்தில் இருந்த ஆதாம் ஏவாளுக்கு தேவன் தாமே பழைய ஏற்பாட்டில் கிறிஸ்துவைப் பற்றிக் கூரும் முதல் தீர்க்கதரிசனம் இதுவாகும். இந்த வசனம் சர்ப்பத்துக்கும் ஸ்திரீக்கும் மட்டுமின்றி சாத்தானுக்கும் மனிதர்களுக்கும் இடையே நடந்து வரும் ஆவிக்குறிய போராட்டத்தைப் பற்றி பேசுகிறது. இந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வித்து மனிதகுலத்திற்கு "முதல் நற்செய்தி" [protoevangelium] ஆகும்.
"காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார்."
கலாத்தியர் 4:5
இயற்கையாக ஸ்திரீகளுக்கு வித்து இருக்காது, ஆனால் இது மனிதகுலத்தின் தாயாகிய ஏவாளின் சந்ததியாகிய மரியாள் என்ற கன்னியின் மூலமாகப் பிறந்த இயேசுவைக் குறிக்கிறது.
[மரியாளுக்கு இயேசுவுக்குப் பின்பாக யோசேப்பு மூலம் மற்ற குழந்தைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.] இயேசுவுக்குப் பூமிக்குரிய தந்தை இல்லை, மாறாக பரிசுத்த ஆவியின் மூலமாகவே மரியாள் கர்ப்பவதியானாள். "அவர்" என்று ஒருமையில் எழுதப்பட்டுள்ளதால், அவர் ஒருவரே மேசியா என்று புரிந்துக்கொள்ள முடிகிறது.
"அப்பொழுது வலுசர்ப்பமானது ஸ்திரீயின்மேல் கோபங்கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம்பண்ணப்போயிற்று."
வெளி 12:17
இயேசு ஸ்திரீயின் வித்தாக இருக்கலாம், ஆனால் அவரைப் பின்பற்றுபவர்களாகிய நாமும் சாத்தானுக்கு எதிரான யுத்ததில் உள்ளோம். அவனை எதிர்க்கும் சக்தியை தேவன் தாமே நமக்குத் தருவார்.
"சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின்கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்."
ரோமர் 16:20
~ ரேமா ஜாய் ஷரத்
[Strong's concordance:
2233. zera - a sowing, seed, offspring
802. ishshah - woman, wife, female]

ஏலோஹிம் ஷமா

ஏலோஹிம் ஷமா

Elohim Shama
பொருள்: (ஜெபத்தைக்) கேட்கும் தேவன்
"கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது..."
1 பேதுரு 3:12
தேவன் நம் ஜெபங்கள் உட்பட அனைத்தையும் கேட்கிறார். நாம் தினமும் ஜெபிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நாம் அவரை அனுபவிக்கவும், நம் பாவங்களை அறிக்கையிடவும், நம்முடைய தேவைகளை அவரிடம் கேட்கவும், அவருடைய சித்தத்துடன் நம் விருப்பங்களை சீரமைக்கவும் ஜெபம் உதவுகிறது. நம்மைப் போன்றவர்கள் படைப்பாளரிடம் பேசுவதும், அவர் நம்மைக் கேட்டு நமக்குப் பதிலளிப்பதும் எவ்வளவு பெரிய பாக்கியம்!
நம் துயரத்தையும் வேதனையையும் யாரும் கவனிக்காதது போல் தோன்றினாலும், தேவன் நம்மை முழுமையாக அறிந்திருக்கிறார். நம் மனதின் குமுரல்களைக்கூட கவனமாகக் கேட்டு, நம் கண்ணீரைத் துடைத்து நமக்காகச் செயல்படுவார். ஆகாரின் மகன் "இஷ்மவேல்" என்ற பெயருக்கு "தேவன் கேட்பார்" என்று பொருள், அன்னாளின் ஜெபத்தைக் கேட்டுப் பிறந்த "சாமுவேல்" என்ற பெயருக்கும் "தேவன் கேட்டார்" என்று அர்த்தம்.
தேவன் எல்லா ஜெபங்களைக் கேட்டாலும், அவர் ஒரு சில விண்ணப்பங்களுக்கு செவி சாய்ப்பதில்லை:
• நாம் பாவத்தில் வாழ தேர்ந்தெடுக்கும்போது. (எ.கா: பாவத்தில் வாழும் ஒருவரையோ அல்லது ஒரு தம்பதியையோ தேவன் ஆசீர்வதிக்கும்படி கேட்பது.)
• சுயநலமான ஆசைகளை நிறைவேற்றும்படி கேட்கும்போது. (எ.கா: தமையன் இருக்க தன் தகப்பனின் சொத்து தனக்கு மட்டுமே வேண்டும் என்று கேட்பது.)
• தேவ சித்தமில்லாத ஒன்றைக் கேட்கும்போது. (எ.கா: ஒரு வாலிபன் ஒரு புதிய வேலையைக் கேட்கிறான். ஆனால் தேவன் அவன் ஏற்கனவே வேலை செய்யும் இடத்தில் இருக்கவே விரும்புகிறார்.)
• விசுவாசமில்லாத ஜெபம் (எ.கா: ஜெபத்தில் பொருளாதார சுதந்திரத்தை கேட்பது, ஆனால் எப்போதும் கவலைப்பட்டு அதைப் பற்றி எதிர்மறையாக கருத்து தெரிவிப்பது.)
கிறிஸ்துவில் நிலைத்திருந்து அவருடைய வார்த்தையின் படி கேட்பதே உத்தமமான ஜெபம்.
"எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன், தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று."
சங்கீதம் 18:6
~ ரேமா ஜாய் ஷரத்
[Strong's Hebrew concordance:
8085. shama - to hear
8605. tephillah - prayer]

Thursday, October 17, 2024

பரிசுத்த ஆவியானவர்

பரிசுத்த ஆவியானவர்

The Holy Spirit

Hebrew: Ruach Hakodesh (ரூ-ஆக் ஹாக்கோடேஷ்)
Greek: Pneumatos Hagiou
"தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார். சர்வவல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர்கொடுத்தது."
யோபு 33:4
"ரூ-ஆக்" என்றால் எபிரேயத்தில் ஜீவ சுவாசம் என்று அர்த்தம். (Breath of Life) சுவாசமுள்ள அனைத்தையும் படைத்தவர் நம் தேவன்.
"ரூ-ஆக் ஹாக்கோடேஷ்" இப்பிரபஞ்சத்தின் படைப்பாளரான பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிறது. அப்போஸ்தலர் 2:1-13 இல் வரும் பெந்தெகொஸ்தே நாளில்தான் பரிசுத்த ஆவியானவர் பூமிக்கு வந்தார் என்று பல கிறிஸ்தவர்கள் நினைக்கிறார்கள், ஆனால் அவர் ஆதியில் இருந்தே கிரியை செய்து கொண்டிருக்கிறார்.
"பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது. ஆழத்தின்மேல் இருள் இருந்தது. தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்."
ஆதியாகமம் 1:2
வேதாகமத்தில் முதல் முறை "தேவ ஆவியால்" நிரப்பப்பட்டவர் ஆசரிப்புக் கூடாரத்தின் விநோதமான வேலைகளை செய்த பெசலயேல் ஆவார். தேவன் யுத்தத்தில் எதிரியை மேற்கொள்ளும் பலத்தாலும் சங்கீதங்களை எழுதும் ஞானத்தினாலும் தாவீதை நிரப்பினார். எலியா, எலிசா, ஏசாயா போன்ற பழைய ஏற்பாடு தீர்க்கதரிசிகளை தீர்க்கதரிசன வார்த்தையாலும் அதைப் பிரசங்கிக்கும் தைரியத்தாலும் நிரப்பினார்.
‘ரூ-ஆக்’ [ruach/pneuma] என்ற வார்த்தைக்கு காற்று, சுவாசம், மனம், ஆவி என்று பல பொருட்கள் உள்ளன. காற்று எப்போதும் நகர்ந்து அசைந்துகொண்டே இருக்கும். பரிசுத்த ஆவியானவரும் எப்போதும் நகர்ந்து, ஏதாவது செய்துகொண்டே இருப்பார். நம் சரீர கண்களால் காற்றைப் பார்க்க முடியாவிட்டாலும், அது நகர்வதை நாம் உணர முடியும், அதன் ஒலியைக் கேட்க முடியும். பரிசுத்த ஆவியானவரும் அப்படித்தான். நமக்குப் புரியாததை அவர் தெளிவு படுத்துகிறார். நாம் காணமுடியாததைக் காண்கிறார்.
"கர்த்தரே ஆவியானவர். கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு."
(2 கொரி 3:17)
நாம் நம்முடைய ஆவிக்குரிய கண்களைத் திறந்து அவர் காண்பிப்பதைப் பார்க்க வேண்டும், நம் காதுகளைத் திறந்து, அவர் சொல்வதைக் கேட்க வேண்டும்.
"பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்."
அப்போஸ்தலர் 1:8
~ ரேமா ஜாய் ஷரத்
[Strong's concordance:
Hebrew:
7307. ruach - breath, wind, spirit
6944. qodesh - apartness, sacredness (holy)
Greek:
4151. pneuma - wind, breath, spirit.]

Tuesday, October 15, 2024

சாரோனின் ரோஜா

சாரோனின் ரோஜா

Rose of Sharon

[Hebrew: ḥăḇaṣṣeleṯ ha-sharon]
"நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன்."
உன்னதப்பாட்டு 2:1
இந்த வசனத்தில், சாலமோன் ராஜா தன்னை 'சாரோனின் ரோஜா' என்று அழைக்கிறார், இதனை கிறிஸ்தவர்களாகிய நாம் இதை இயேசுவுடன் தொடர்புபடுத்துகிறோம். "சாரோன்" என்பது பெரும்பாலும் பெண்களுக்கு வழங்கப்படும் ஒரு பொதுவான கிறிஸ்தவ பெயர்.
இது இஸ்ரவேலின் மேற்குப் பகுதியில் ஹைஃபா மற்றும் ஜோப்பா இடையே உள்ள ஒரு பள்ளத்தாக்கு ஆகும். சாலமோனின் காலத்தில், இது ஒரு வளமான சமவெளியாக இருந்தது. அதில் பல அழகான பூக்கள் இருந்தன. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள "சாரோன் ரோஜா" (Chabatstseleth) வனாந்தரத்தில் முட்களுக்கு மத்தியில் காணப்படும் ஒரு மலர். முழு இடத்தையும் அழகாகவும் மணமாகவும் தோற்றமளிக்க வைக்கும். வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த தாவரத்தின் அடையாளம் தெளிவாக இல்லை. விவிலிய அறிஞர்கள் இது ஒரு ரோஜா அல்ல, ஆனால் ஒரு புல்வெளி குங்குமப்பூ அல்லது ஒரு வகை துலிப் அல்லது குரோக்கஸாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.
ஆடுகளும், செம்மறி ஆடுகளும் புதர்கள் வழியாக அலைந்து திரியும்போது, இந்த மலர் அவற்றின் தோலில் சிக்கி, சில சமயங்களில் அவற்றின் உடம்பில் ஊடுருவி வெட்டுக்களையும் காயங்களையும் ஏற்படுத்தும். மேய்ப்பர்கள் தங்கள் ஆடுகள் மேல் சிக்கியிருக்கும் இந்த பூக்களை எடுத்து, அவற்றின் காயங்களைக் குணப்படுத்தவும், தொற்றுநோயைத் தடுக்கவும் தங்கள் காயங்களிலும் இந்த மலரைக் கசக்கி தேய்த்துக் கொள்வார்களாம்.
இந்த மலரைப் போலவே, இயேசு பாலைவனம் போன்ற நம் வாழ்க்கையில் வரும்போது, அவர் அதை அழகாகவும் மணமாகவும் ஆக்குகிறார். அவருடைய இரத்தம் எல்லா பாவத்திலிருந்தும் நம்மை குணப்படுத்துகிறது. இன்னும் நம் வாழ்வில் தேவனிடம் அர்ப்பணிக்காத காரியங்கள் இருந்தால், இன்றே சரணடைவோம்! சாரோனின் ரோஜாவாகிய கிறிஸ்து நம்மை மேன்மைப்படுத்துவார்.
"வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போலச் செழிக்கும்."
ஏசாயா 35:1
[Strong's Hebrew:
2261. chabatstseleth - meadow saffron or crocus
8289. Sharon - a plain on the Mediterranean Sea, perhaps also a region East of the Jordan]

புடமிடுகிறவர்

புடமிடுகிறவர்

Refiner
"அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார். அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர் பொன்னைப் போலவும் வெள்ளியைப் போலவும் புடமிடுவார்."
மல்கியா 3:3
ஒரு பொற்கொள்ளரின் தீ, காட்டுத் தீயில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. காட்டுத்தீ எல்லாவற்றையும் முற்றிலுமாக அழித்துவிடும். தேவன் காட்டுத்தீயைப் போல இருக்கத் தேர்ந்தெடுத்திருந்தால், பரலோகத்திற்கு நிச்சயமாக நாம் ஒருவர் கூட போகமுடியாது. மிக அதிக வெப்பநிலையில் இருக்கும் புடமிடுபவரின் நெருப்பு, தனிமத்தை உருக்கி, அதன் மதிப்பைக் கெடுக்கும் அசுத்தங்களை அகற்றி, அதன் தரத்தை உயர்த்துகிறார்.
இந்த செயல்முறை தேவன் நம்மை நீதியின் பாதையில் நடக்க வைப்பதைப் போன்றது. இந்த சுத்திகரிப்பின் நெருப்பின் தாக்கத்தை நாம் அனுபவிக்க வேண்டியிருப்பதால் இந்த பாதை எளிதானது அல்ல. தேவனால் தூய்மைப்படுத்தப்படாத ஒருவராலும் அவருடைய நாளில் நிலைநிற்க முடியாது.
"ஆனாலும் அவர் வரும் நாளைச் சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப் போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப் போலவும் இருப்பார்."
மல்கியா 3:2
மல்கியா புடமிடுகிறவனுடைய அக்கினியைப் பற்றி மட்டுமல்ல, ஒரு வண்ணாருடைய சவுக்காரத்தை (சலவை சோப்பு) பற்றியும் பேசுகிறது. கிறிஸ்து திரும்பி வரும்போது, அவர் உலகத்தை எல்லா அசுத்தங்களிலிருந்தும் சுத்தப்படுத்துவார். பாவத்தின் ஒவ்வொரு கறையும் வெண்மையாக கழுவப்படும்.
(ஏசாயா 1:18)
நம்முடைய வழியை சுத்தம் செய்ய தேவனுடைய வசனத்தின்படி நம்மைக் காத்துக்கொள்வோமாக!
"கர்த்தருடைய சொற்கள் மண் குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது."
சங்கீதம் 12:6
- ரேமா ஜாய் ஷரத்
[Strong's Hebrew:
6884. tsaraph - to smelt, refine, test
2891. taher - to be clean or pure]

ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து தோன்றின துளிர்

ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து தோன்றின துளிர்

Rod out of the stem of Jesse
"ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்."
ஏசாயா 11:1
இது பழைய ஏற்பாட்டில் இயேசுவைக் குறிக்கும் தீர்க்கதரிசனங்களில் ஒன்றாகும். ஈசாய் என்பவர் இயேசு கிறிஸ்துவின் மூதாதையரான தாவீது ராஜாவின் தகப்பன். (ரூத் 4:22)
சாமுவேல் தீர்க்கதரிசியின் மூலம் தேவன் தாவீதுக்கு அவருடைய சந்ததி ஒரு நித்திய ராஜ்யத்தை நிறுவும் என்று உறுதியளித்தார். (1 சாமு 16:12)
“அடிமரம்” என்பது ஒரு வெட்டப்பட்ட மரத்தின் மீதிப்பகுதியைக் குறிக்கிறது. பெரும்பாலும் அந்த மரம் இறந்துவிடும், மிக அரிதாக துளிர் விடும். தீர்க்கதரிசனத்தைப் போலவே, தாவீதின் வம்சத்தினர் பிற்காலத்தில் பிளவுபட்டு அசீரியா மற்றும் பாபிலோனுக்கு அடிமைகளாக எடுத்துக்கொள்ளப்பட்டனர். தேவன் அவருடைய வாக்குத்தத்தை மறந்துவிட்டதுபோல் தோன்றியது. ஒரு காலத்தில் பெரிய தேசமாக இருந்த இஸ்ரவேலில் எஞ்சியிருந்தது ஒரு அடிமரம் மட்டுமே. பட்ட மரம் போல் தோன்றின அந்த அடிமட்டும் வெட்டப்பட்ட அடிமரத்திலிருந்து மேசியா என்ற இயேசு கிறிஸ்து துளிராகத் தோன்றினார். இயேசு, ஒரு மனிதனாக, ஈசாயின் சந்ததியில் தோன்றினவர்; ஆனால் தேவனாக, அவரே ஈசாயை படைத்தவர்!
அதே வசனத்தில் இயேசு, ஈசாயின் "வேர்களில்" இருந்து எழும்பும் "கிளை" என்று குறிப்பிடப்படுகிறார். இன்று அசீரியர்களோ, பாபிலோன் ராஜ்யமோ பூமியில் இல்லை, ஆனால் இஸ்ரவேல் தேசம் இன்றும் செழித்தோங்குகிறது! அவரே தாவீதின் வேரும், சந்ததியுமானவர்!
"இஸ்ரவேலில் தப்பினவர்களுக்கு அந்நாளிலே கர்த்தரின் கிளை அலங்காரமும் மகிமையுமாயிருக்கும், பூமியின் கனி அவர்களுக்குச் சிறப்பும் அலங்காரமுமாயிருக்கும்."
ஏசாயா 4:2
நம் நம்பிக்கை யாவும் அற்றுப்போனாலும், எதிர்பாராதவிதத்தில் நமது வாழ்வில் தேவன் துளிர் தோன்றப் பண்ணுகிறவராகவே இருக்கிறார்.
~ ரேமா ஜாய் ஷரத்
[Strong's Hebrew:
2415. choter - branch or twig, a rod
1503. geza - a stock, stem
5342. netser - a sprout, shoot
8328. shoresh - a root]

ஜீவவிருட்சம்

ஜீவவிருட்சம் Tree of Life Heb: Etz Chaim பழைய ஏற்பாட்டில், "ஜீவவிருட்சம்" ஆதியாகமம் 2:9 இல் முதன்முதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின...