Friday, June 21, 2024

யேகோவா எல் நெகாமொட்

 யேகோவா எல் நெகாமொட்

JEHOVAH EL NEKAMOTH
பொருள்: நீதியைச் சரிக்கட்டுகிற தேவன் / பழிவாங்கும் தேவன்
"கர்த்தர் எரிச்சலுள்ளவரும் நீதியைச் சரிக்கட்டுகிறவருமான தேவன்..."
நாகூம் 1:2
NAQAM என்றால் எபிரேயத்தில் பழிவாங்குதல்/பதிலளித்தல் ஆகும். மனிதர்கள் குற்றம் செய்தால், தேவன் அவர்களை தண்டிக்காமல் விடமாட்டார். எப்போது, எப்படி என்று நமக்குத் தெரியாது, ஆனால் அவர் என்ன செய்ய வேண்டும் என்று அவருக்குத் தெரியும்.
"பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்."
ரோமர் 12:19
எந்தவொரு நபரும் ஏமாற்றப்பட்டாலோ, அல்லது யாரோ ஒருவர் தன்னை பயன்படுத்தியதாக உணர்ந்தாலோ, அவர்கள் நிச்சயமாக துரோகிகளிடமிருந்து தங்கள் நியாயத்தைப் பெற நினைப்பார்கள். நீங்களும் கூட இப்போது அவர்களில் ஒருவராக இருக்கலாம். ஆனால் தேவன் உங்கள் கைகளில் விஷயங்களை எடுத்து அதை உங்கள் வழியில் செய்ய வேண்டாம் என்று கூறுகிறார். எல்லாவற்றையும் தேவனுடைய கைகளில் விட்டு விடுங்கள், அவர் பார்த்துக்கொள்வார்.
இயேசு சிலுவைக்குச் செல்வதற்கு முன் அவரை கேலி செய்து, சபித்து, அடித்தவர்களைத் தாக்கியிருந்தால், கதை எப்படி மாறியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்! அவர் அதைச் செய்திருக்க முடியும் என்றாலும், அந்த நேரத்தில் பழிவாங்கியிருந்தால் தேவனுடைய திட்டம் முழுவதும் வீணாகியிருக்கும். ஆகவே, தேவனையும், அவருடைய திட்டத்தையும் நம்பினால், சரியான நேரத்தில் அவர் பழிவாங்குவார். தேவனுடைய சித்தத்தைச் செய்து அவர்களின் மனந்திரும்புதலுக்காக ஜெபிப்பதே நம் வேலை.
"நீதியைச் சரிக்கட்டுகிற தேவனாகிய கர்த்தாவே, நீதியைச் சரிக்கட்டுகிற தேவனே, பிரகாசியும்."
சங்கீதம் 94:1
[Strong's
5359 naqam
5360 neqamah]

யேகோவா எகாட்

 யேகோவா எகாட்

Jehovah Echad
பொருள்: தேவன் ஒருவரே கர்த்தர்
"இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்."
உபாகமம் 6:4
'எகாட்' என்றால் எபிரேயத்தில் "ஒன்று". தேவன், தான் ஒருவர் என்றும், அவரைத் தவிர வேறு யாரும் தேவன் இல்லை என்றும் கூறுகிறார். இதே வார்த்தை ஆதியாகமம் 2:24 இல் பயன்படுத்தப்பட்டுள்ளது:
இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான். அவர்கள் "ஒரே" மாம்சமாயிருப்பார்கள்.
பிசாசுகள் கூட தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசித்து நடுங்குகின்றன என்று யாக்கோபு 2:19 கூறுகிறது. உலகம் வணங்கும் பல பொய்க் கடவுள்கள் உண்டு. தேவனை அறியாதவர்கள், அவருடைய படைப்புகளையோ அல்லது பிற மனிதர்களையோ வணங்குகிறார்கள்.
ஒரு பள்ளியை ஒரு முதல்வருக்கு பதிலாக, பலர் நடத்தினால் எப்படி இருக்கும் கற்பனை செய்து பாருங்கள். ஒரு ஒழுங்கு இருக்காது, குழப்பம் மட்டுமே இருக்கும்.
அதேபோல், பல தெய்வ வழிபாடுள்ள மதங்களும் – குழப்பத்தில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளன. கல்விக்கு ஒரு கடவுள், செல்வத்திற்கு ஒரு கடவுள், பாதுகாப்பு, பிறப்பு, இறப்பு, அழிவு, தீர்ப்பு, அன்பு, திருமணம் ஆகியவற்றிற்கெல்லாம் தனித்தனி கடவுள். ஒவ்வொரு கடவுளும் ஒருவருக்கொருவர் சண்டைப்போட்டுக்கொண்டிருப்பார்கள். அவர்களின் கருத்துக்கள் மாறுபாடாக இருக்கும். ஆனால் நம் தேவன் ஒருவர் மட்டுமே, கலகத்திற்குத் தேவனாயிராமல், சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார்.
"உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு,
ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும், எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு. அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறார்."
எபேசியர் 4:4-6
[Strong's 259]

யேகோவா செரேப்

 யேகோவா செரேப்

Jehovah Chereb
பொருள்: கர்த்தரே என் பட்டயம்
நீங்கள் எப்போதாவது தேவனை ஒரு பட்டயமாக நினைத்தடுண்டா? ஆம், அவரை வேதம் பட்டயம் என்று உருவகப்படுத்துகிறது.
நீங்கள் ஒரு பட்டயத்தை வன்முறைக்கான ஒரு ஆயுதமாகப் பார்க்கலாம். அது உங்களுக்காக சிறந்த திட்டங்களைக் கொண்ட அன்பான தேவனிடம் வர பயத்தையும் தயக்கத்தையும் உண்டாக்கலாம். பயப்படாதீர்கள்! இஸ்ரவேலர்களை மட்டுமல்ல, உங்களையும் தேவன் எவ்வாறு பாதுகாக்கிறார், தேற்றுகிறார், காப்பாற்றுகிறார் என்பதை நீங்கள் விரைவில் காண்பீர்கள்.
"...உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமைபொருந்திய பட்டயமும் அவரே..."
உபாகமம் 33:29
"செரேப்" என்றால் பட்டயம். (Sword) செரேபின் எபிரேய வேர் "சராப்" ஆகும், இது அழித்தலைக் குறிக்கும்.
THE BEST SWORD OF GOD IS THE WORD OF GOD ITSELF. தேவனுடைய சிறந்த பட்டயம் தேவனுடைய வார்த்தையே.
"தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது."
எபிரேயர் 4:12
[Strong's Hebrew
2719. chereb
2717c. charab]

யேகோவா பி'கெரேவ் ஹாரெட்ஸ்

 யேகோவா பி'கெரேவ் ஹாரெட்ஸ்

JEHOVAH B'KEREV HA'ARETS
பொருள்: பூமியின் நடுவில் இருக்கும் தேவன்
"பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்துவருகிற தேவன் பூர்வகாலமுதல் என்னுடைய ராஜா."
சங்கீதம் 74:12
நீங்கள் தேவனை நினைக்கும் போது என்ன நினைக்கிறீர்கள்? தேவன் தூரமாக பரலோகத்தில் ஒரு சிங்காசனத்தில் அமர்ந்து, ஒரு வயதானவரைப்போல் இருப்பதாக பலர் கற்பனை செய்கிறார்கள். ஞாயிறு பள்ளிகளில் அல்லது ஓவியங்கள் மூலம் நாம் குழந்தைகளாக இருந்தபோது நமக்குக் காட்டப்பட்ட படங்கள் காரணமாக இருக்கலாம். தேவன் பழமையானவரோ , வயதானவரோ அல்ல, அவர் நித்தியமானவர். அவர் பூமியின் நடுவே இருக்கிறார். அவர் இஸ்ரவேல் ஜனங்களோடு பாலைவனத்தில் இருந்ததுபோல, இன்று நம்மோடும் இருக்கிறார்.
"பூமியின் நடுவில் நானே கர்த்தர்..."
யாத்திராகமம் 8:22
எகிப்தின் வாதைகளின் போது தேவன் இதைக்கூறுகிறார். இஸ்ரவேலர்கள் வாழ்ந்த கோசேனைத் தவிர, எகிப்து முழுவதும் கொள்ளை நோய்களால் பாதிக்கப்பட்டது. தேவன் வெகு தொலைவில் இல்லை என்பதற்கு இது சான்றாகும். அவர் இங்கே , இப்போது, நம்முடன் இருக்கிறார்.
தேவன் மக்களுடன் இருந்தது மட்டுமல்லாமல், அவர் தனது சொந்த மகனை மனித ரூபத்தில் அனுப்பி மனிதர்களிடையே வசிக்கும் அளவிற்கு தன்னைத் தாழ்த்தினார். இயேசுவைப் பார்த்தவர்கள், அவரைத் தொட்டவர்கள், கூட நடந்து அவருடன் பேசியவர்கள் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருந்திருக்க வேண்டும்! கர்த்தர் நம்மை இன்று வரை உலகில் தனியாக விடவில்லை. அவர் நம்முடன் இருக்கிறார், தினமும் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். நாம் ஒருபோதும் தனியாக இல்லை!
[Strong's Hebrew: 7130 qereb; 776 haares]

Friday, June 14, 2024

யேகோவா பக்பூக்

யேகோவா பக்பூக்

Jehovah Bakbuk
பொருள்: தன்னை வெறுமையாக்கின தேவன்
எபிரேயத்தில் "பக்பூக்" என்றால் "குப்பி" (Bottle). 'பக்பக்கா' என்றால் ஒரு பாட்டிலில் இருந்து தண்ணீரை ஊற்றும் போது ஏற்படும் சத்தத்தைக்குறிக்கும் ஒரு வார்த்தை. (தமிழில் 'லபக் லபக்' மாதிரி)
நெகேமியா 11:17 இல், "பக்பூக்கியா" என்ற ஒரு லேவியனைக் காணலாம்.
பக்பூக்கியா என்றால் தன்னை வெறுமையாக்கின தேவனைக் குறிக்கும் பெயர்.
"தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்."
பிலிப்பியர் 2:7
இயேசு கடவுளாக இருப்பதை விட்டுவிட்டு பூமிக்கு வந்தார் என்று அர்த்தமல்ல.
இந்தியாவில், சில சமயங்களில் காவல்துறையினர் 'மஃப்டி' (Off Duty) – இல் ஒரு வழக்கைக் கைக்கொள்வார்கள். அவர்கள் சீருடை அணிவதற்குப் பதிலாக மற்றவர்களைப் போல சாதாரண ஆடைகளை அணிவார்கள். பணி நிறைவேறும் வரை Police என்ற தங்கள் அடையாளத்தைக் காட்ட மாட்டார்கள். அவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் தங்கள் சீருடையை மட்டுமே அகற்றுகிறார்கள், காவல்துறை வேலையை அல்ல.
அதேபோல், இயேசு பரலோகத்தில் தம்முடைய தெய்வத்துவத்தை வைத்துவிட்டு ஒரு சாதாரண மனிதனைப்போல செயல்பட்டார். நம்மை இரட்சிக்க இயேசு தன்னை வெறுமையாக்கினதற்கு தேவனுக்கு நன்றியுடன் வாழ்வோம்!

யேகோவா அவினு

யேகோவா அவினு

Jehovah Avinu
பொருள்: தேவனே நம் பிதா
வசனம்: "தேவரீர் எங்கள் பிதாவாயிருக்கிறீர்...கர்த்தாவே, நீர் எங்கள் பிதாவும், எங்கள் மீட்பருமாயிருக்கிறீர், இது பூர்வகாலமுதல் உம்முடைய நாமம்."
ஏசாயா 63:16
"அவினு" என்ற வார்த்தைக்கு எபிரேய மொழியில் "எங்கள் பிதா" என்று பொருள்.
பொதுவாக அப்பாக்கள் உலகில் துன்பப்பட்டாலும், தங்கள் குடும்பத்தினரின் தேவைகளை எப்போதும் சந்திக்கிறார்கள், நம்மை பாதுகாக்கிறார்கள், நேசிக்கிறார்கள்..
அது எல்லா தகப்பன்களுடைய கடமை!
மத்தேயு 7:9-11 - ல் நாம் வாசிக்கிறோம்: "உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா?
மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?"
ஒரு தந்தை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு கர்த்தரே சிறந்த முன்னுதாரணம்.
ஒருவேளை உங்களுக்கு ஒரு அன்பான அப்பா இல்லாமல் இருக்கலாம்...கவலைப்படாதீர்கள். தேவன் தந்தையற்றவர்களுக்கு தந்தையாக இருக்கிறார். ரோமர் 8:15 கூறுகிறது, "அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்."
ரோமர் 8:15
இயேசு "பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே.." என்று நம் ஜெபங்களைத் தொடங்க கற்றுக் கொடுத்தார். வேறு எந்த மதமும் தங்கள் கடவுளை "அப்பா, பிதா, தந்தை" என்று அழைக்க அனுமதிக்கவில்லை.
இயேசு ஒருவரே தேவனுடைய குமாரன். அவர் மட்டுமே தேவனை அப்பா என்று உரிமையுடன் அழைக்க முடியும். அவர் தனது மகத்துவத்தை தனது கிருபையால் நம்முடன் பகிர்ந்து கொண்டதால் மட்டுமே நாமும் அவ்வாறே செய்யத் துணிகிறோம். கர்த்தரை நம் தந்தை என்று அழைப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்!
[Strong's: 1: ab, 1e: abinu]

யேகோவா அஹாவா

யேகோவா அஹாவா

Jehovah Ahavah
பொருள்: "தேவன் அன்பாகவே இருக்கிறார்"
வசனம்: "தேவன் அன்பாகவே இருக்கிறார். அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்."
- 1 யோ 4:16
தேவனை ஒரே வார்த்தையில் விவரிக்க வேண்டுமென்றால் அன்பைத் தவிற வேறு சிறந்த வார்த்தையே இல்லை.
"அஹாவா" என்றால் எபிரேயத்தில் அன்பு. உலகம் "அன்பே கடவுள்" என்று கூறுகிறது, ஆனால் வேதம் அதற்கு மாறாக "தேவனே அன்பு" என்று கூறுகிறது.
ஒரு பெண்ணிற்காக அவள் கணவனைக் கொன்ற தாவீது, பல பெண்களைக் கொண்டிருந்த சாலொமோன் போன்றவர்களையும் கூட தேவன் மன்னித்துள்ளார். இவ்வளவு பெரிய பாவங்களை மனிதர்கள் செய்தாலும் தேவனால் எப்படி நம்மை நேசிக்க முடியும் என்று நான் ஆச்சரியப்படுவேன்! புதிய ஏற்பாட்டிலும் பல பாவிகளைப் பார்க்கிறோம். "நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்." (ரோ 5:8)
வேதத்தில் நான்கு வகையான அன்பு காணப்படுகிறது. அவை:
• "அகாப்பே": தன்னலமற்ற, நிபந்தனையற்ற அன்பு
• "ஸ்டோர்ஜ்": குடும்பத்தினர் இடையே உள்ள அன்பு
• "ஃபிலியா": நண்பர்களுக்கு இடையேயான அன்பு
• "எராஸ்" : காதலர்கள் இடையே உள்ள அன்பு
தேவன் பின்வரும் வசனங்களில் அவருடைய "அகாப்பே அன்பை" விளக்குகிறார்:
"அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது. அன்புக்கு பொறாமையில்லை. அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது. அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது.
அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். அன்பு ஒருக்காலும் ஒழியாது..."
- 1 கொரிந்தியர் 13:4-8
தேவன் உங்களை எங்கு வைத்திருந்தாலும் தேவனுடைய நிபந்தனையற்ற அன்பு உங்களிடமிருந்து பரவட்டும்.
"அன்பில்லாதவன் தேவனை அறியான். தேவன் அன்பாகவே இருக்கிறார்."
1 யோ 4:8
[Strong's: 160]

Tuesday, June 11, 2024

யேகோவா அடோன் கொல் ஹாரெட்ஸ்

 யேகோவா அடோன் கொல் ஹாரெட்ஸ்

[Jehovah Adon Kol Haarets]
பொருள்: "சர்வ பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறவர்"
வசனம்: "இதோ, சர்வ பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய உடன்படிக்கைப் பெட்டி உங்களுக்கு முன்னே யோர்தானிலே போகிறது..."
- யோசுவா 3:11
உலகை இயக்குவது யார்? யார் இந்த பூமியின் அதிபதி? அமெரிக்க ஜனாதிபதியா? இங்கிலாந்து ராணியா? இந்தியப் பிரதமரா? பூமியில் யாருடைய சக்தி என்றும் மாறாதது? நம் தேவனாகிய கர்த்தர் ஒருவரே!
கிறிஸ்தவர்கள் சில சமயங்களில் சாத்தானை "இந்த பிரபஞ்சத்தின் தேவன்" என்று கருதுகிறார்கள் (2 கொரிந்தியர் 4:4). உலகம் சாத்தானுடைய கட்டுப்பாட்டில் இயங்குவதாக சிலர் நம்புகின்றனர்.
இது வாழ்க்கையைப் பற்றிய ஒரு அவிசுவாசமான கண்ணோட்டத்தை விளைவிக்கிறது. கிறிஸ்து சாத்தானை முற்றிலுமாகக் கைப்பற்றி அவனை நரகத்தில் தள்ளி, பூமியில் தனது ஆட்சியை நிறுவும் வரை, நம்பிக்கையுடன் நாம் கிறிஸ்துவிற்காகக் காத்திருக்க வேண்டும்.
சங்கீதம் 24 இந்த வசனத்துடன் தொடங்குகிறது:
“பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது."
நம் ஒவ்வொருவருக்காகவும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு கிறிஸ்து எப்படி பூமிக்கு வந்தார் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவர் ஒரு நாட்டின் தேவன் மட்டுமல்ல, ஒரு இனத்தின் தேவன் மட்டுமல்ல - அவர் சர்வ பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறார்.

Monday, June 10, 2024

யேகோவா அடிர்

யேகோவா அடிர்

[Yahweh addir]
பொருள்: மகிமையுள்ள கர்த்தர்
"மகிமையுள்ள கர்த்தர் அங்கே நமக்கு மகா விசாலமான நதிகளும் ஆறுகளுமுள்ள ஸ்தலம்போலிருப்பார்..."
ஏசாயா 33:21
அடிர் என்றால் மகிமை / மேன்மை / மகத்துவம் / உன்னதம் என்று பொருள். இது ஒரு கனம் பொருந்திய பெயர். அதிகாரமுள்ள சில மனிதர்களுக்கும் வைக்கப்படும் தலைப்புகளில் இதுவும் ஒன்று.
எந்தவொரு துறையிலும் நமக்கு அதிகாரம் வழங்கப்படும் போது, நாமும் "அடிர்" ஆகிறோம். நாம் தேவனுடன் இணைந்திருக்கும்போது, அவர் செய்யும் காரியங்களையே நாமும் செய்கிறோம். இக்கட்டாண சூழ்நிலையில் என்ன செய்யவேண்டும் என்று உங்களுக்குத் தெரியாதபோது, அதே சூழ்நிலையில் இயேசு எவ்வாறு செயல்பட்டிருப்பார் என்று சிந்தியுங்கள். (WWJD?)
நம்மை விட உயர் அதிகாரத்தில் இருப்பவரின் செயல்கள் நாம் அவருடன் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோம் என்பதைப் பொருத்து நமக்கு சாதகமாக இருக்கும். நம் தேவனை விட உயர்ந்தவர் வேறு யாரும் இல்லை. நாம் அனுதினமும் அவருடன் பேசும்போதும் நடக்கும்போதும் அவர் எல்லாவற்றையும் நமக்கு சாதகமாக மாற்றுவார்.
"எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது! உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர்."
சங்கீதம் 8:1
addir [Strong's:117]

யேகோவா சத்தார்

யேகோவா சத்தார்

பொருள்: என் மறைவிடமாயிருக்கும் தேவன்
"தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்."
சங்கீதம் 27:5
(Sathar / cether என்றால் மறைவிடம் / மறைப்பது [Strong's:5643] )
தேவனுடைய சிறகுகளின் நிழலின் கீழ் ஒளிந்துகொள்வதை வேதாகமம் அடிக்கடி பயன்படுத்துகிறது.
தேவன் தனக்கு பிரியமான அனைவரையும் எதிரிகளிடமிருந்து மறைத்தார். அரண்மனைக்கு வருவதற்கு முன்பு தேவன் யோசேப்பை சிறையில் மறைத்து வைத்தார். எகிப்திலிருந்து இஸ்ரவேலரை விடுவிப்பதற்கு முன் மோசேயை பாலைவனத்தில் மறைத்து வைத்தார். தாவீது ராஜாவாவதற்கு முன்பு வனாந்தரத்தில் சவுலிடமிருந்து மறைத்து வைத்தார்.
புயல்களின் போது, நாம் குகைகளுக்கு அல்லது ஏதோ ஒரு பாதுகாப்பான இடத்திற்கு ஓடுவோம். ஆனால் மனதில் ஏற்படும் புயல்களின் போது நாம் எங்கே ஓடுவோம்?
பாவம் செய்த பிறகு ஆதாம் தேவனிடமிருந்து ஒளிந்ததுபோல் இல்லாமல், இப்போது நாம் தேவனிடம் ஓடி பாதுகாப்பாக இருக்க முடியும் என்பது என்ன ஒரு ஆசீர்வாதம்!
"நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர், என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர்."
சங்கீதம் 32:7
நீங்கள் தனிமையாக இருப்பதுபோல உணர்ந்தீர்களென்றால், தேவன் உங்களை மறைத்துவைத்துள்ளார் என்று புரிந்துக்கொள்ளுங்கள்.

மத்தியஸ்தராகிய இயேசு

மத்தியஸ்தராகிய இயேசு

"தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே..."
1 தீமோத்தேயு 2:5, 6
மத்தியஸ்தர்‌ என்பதற்கான கிரேக்க வார்த்தை 'மெஸிடஸ்‌'; இது 'மெஸோஸ்‌' எனும்‌ வார்த்தையிலிருந்து வந்தது. இதற்கு ‘நடுவில்‌’ என்று பொருள்‌. மத்தியஸ்‌தர்‌ என்றால்‌ நடுவில்‌ நிற்பவர்‌ அல்லது நடப்பவர்‌ என்று அர்த்தம்‌.
தேவனையும் மனிதர்களையும் பிரிப்பது நம்முடைய பாவம் தான். பழைய ஏற்பாட்டில் மோசே மத்தியஸ்தராக செயல்பட்டார். புதிய ஏற்பாட்டில் இயேசுவே மத்தியஸ்தர்.
இயேசு ‘மத்தியஸ்தர்‌’ என்பதால்‌ அவர்‌ பிதாவுக்கும்‌ மனிதர்‌களுக்கும்‌ இடையேயுள்ள பிரச்சனையைத்‌ தீர்த்துவைக்கிறார்‌ அல்லது பிரிந்துநிற்கும்‌ இரு சாராரைச்‌ சமாதானம்பண்ணி ஒப்புரவாக்குகிறார்‌ என்று அர்த்தமல்ல. மாறாக, அவர்‌ புது உடன்படிக்கையின்‌ பிணையாளியாக அல்லது உறுதிசெய்கிறவராக இருக்கிறார்‌.
"புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்."
எபிரேயர் 12:24
தேவதூதர்களோ, மறித்தவர்களோ, அல்லது புனிதர்களோ அல்ல, தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து ஒருவரே மத்தியஸ்தர்!

நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்

 "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்"

புத்தர், தனது வாழ்க்கையின் முடிவில், "நான் இன்னும் சத்தியத்தைத் தேடிக்கொண்டிருக்கிறேன்“ என்றார்.
யோவான் 14:6 - ல் இயேசு, "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்" என்று கூறுகிறார்.
இரட்சிப்பிற்கு வேறொரு வழி இருந்திருந்தால், இயேசு சிலுவையில் அறையப்பட்டிருக்க மாட்டார். "பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும், ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது" என்று இயேசுவே ஜெபம்பண்ணினார். ஆனால் பதில் பரலோகத்திலிருந்து வரவில்லை, ஏனென்றால் பிதாவுக்கும் வேறு வழியில்லை என்று தெரியும். இயேசு மட்டும் சிலுவையை ஏற்றுக்கொள்ளாமல் இருந்திருந்தால், நம் பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற்றிருக்கவே முடியாது.
மனிதனை அப்பத்தினால் மட்டும் காப்பாற்ற முடியாது. நல்ல செயல்களாலோ, மதத்தாலோ அல்லது அவனது சொந்த படைப்புகளாலோ காப்பாற்ற முடியாது. நித்திய வாழ்கைக்கு ஒரே ஒரு வழி இருக்கிறது, அது ஒரு குறுகிய வழி, எல்லோராலும் அந்த வழியில் எளிதாக நடக்க முடியாது. அது கிறிஸ்துவின் சிலுவையினாலும் அவருடைய பரிசுத்த இரத்தத்தினால் கழுவப்பட்டால் மட்டுமே முடியும்!
• இயேசு வழியைக் காட்டிவிட்டுப் போகவில்லை; அவரே வழி என்றார்.
• அவர் சத்தியத்தைப் பேசுவது மட்டுமல்லாமல், அவரே சத்தியத்தின் அவதாரம் என்றார்.
• அவரே ஜீவன், ஜீவன் இல்லாமல் நாம் பிதாவை அடைய முடியாது.

நானே திராட்சச்செடி

 "நானே திராட்சச்செடி"

யோவான் 15:5 இல் இயேசு கூறுகிறார், "நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான், என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது" என்று.
பிதாவாகிய தேவன் திராட்சத் தோட்டக்காரர் என்பதை நாம் அறிவோம். திராட்சக்கொடிகளைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான காரியம் என்னவென்றால், திராட்சை எந்த மரத்திலிருந்து வந்தது என்பதை கண்டுபிடிக்க முடியாது. அதேபோல், நீங்கள் எந்த சபையைச் சேர்ந்தவர் அல்லது எந்த 'Denomination'-ஐ சேர்ந்தவர் என்பது முக்கியமல்ல. தேவனுக்கு நீங்கள் அவருடைய சபையின் ஒரு அங்கத்தினர் என்பதுதான் முக்கியம். சபையின் உறுப்பினர்கள் அனைவரும் கிளைகள். கனிகொடாதவர்கள், ஆழமற்ற விசுவாசம் இல்லாதவர்கள், கொஞ்ச நாட்களில் கிறிஸ்துவைப் பின்பற்றுவதைக் கைவிடுபவர்கள், கைவிடப்படுவார்கள் அல்லது செடியிலிருந்து துண்டிக்கப்படுவார்கள்.
"நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர். என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ, அதை அவர் அறுத்துப்போடுகிறார், கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்".
-யோவான் 15:1, 2
கலாத்தியர் 5:22-23 இல், "ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்" என்று வாசிக்கிறோம்.
இவை அனைத்தும் உங்கள் ஆவி, ஆத்துமா, சரீரத்தில் உள்ளதா?

நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்

 "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்"

யோவான் 11:25-26 இல் இயேசு, "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான், உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்..." என்கிறார்.
அவர் 'என்னால் உயிர்த்தெழமுடியும்' என்று கூறவில்லை, அவர் 'நானே உயிர்த்தெழுதல்' என்கிறார்.
“Resurrection” என்பது கிரேக்க வார்த்தையான ‘anastasis’ என்பதிலிருந்து வந்தது. “மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டது” என்று பொருள்.
ஒரு மரணம் நிகழும்போது, அது ஒரு நண்பராக இருந்தாலும் சரி, குடும்ப உறுப்பினராக இருந்தாலும் சரி, மிகவும் வேதனையும் கஷ்டமும் நமக்கு ஏற்படும். இது போன்ற கடினமான காலங்களில், அனைத்தையும் நேர்மறையாக (positive-ஆக) சமாளிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.
"மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது: அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்."
- யோவான் 5:25
இருள், வெறுமை மற்றும் தனிமையைக் கண்டு அஞ்ச வேண்டாம். இயேசு நம்மோடு இருப்பதனால், நாம் மரணத்தைப் பற்றி பயப்படத் தேவைல்லை. கிறிஸ்து வரும்போது நாம் மீண்டும் உயிர்த்தெழுவோம்.
"அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்."
ரோமர் 8:11

நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்

"நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்"

யோவான் 8:12 இல் இயேசு "நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்" என்றார்.
நீங்கள் ரசித்த ஒரு சூரிய உதயம் அல்லது சூரிய அஸ்தமனத்தைப் பற்றி சிந்தியுங்கள். நான் கன்னியாக்குமரியில் பார்த்த Sunrise & Sunset மிகவும் அழகாக இருந்தது! சிலர் ஏன் சூரியனை கடவுளாக வணங்குகிறார்கள் என்பது அப்போதுதான் புரிந்தது.
உண்மையான கடவுள் சூரியன் அல்ல, சூரியனை உருவாக்கினவர் என்பதை நாம் அறிவோம். பல குழந்தைகள் தங்கள் ஞாயிறு பள்ளி ஆசிரியர்களிடம், படைப்பின் நான்காவது நாளில் சூரியன் படைக்கப்பட்டால், முதல் மூன்று நாட்களுக்கு பூமி அதன் ஒளியை எங்கிருந்து பெற்றது? என்று கேட்பார்கள்!
தேவனே ஒளியாக இருந்தார். அவரே ஒளியைப் படைத்தவர். 1 தீமோத்தேயு 6:16 - ல் "ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர். அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக" என்று பவுல் கூறுகிறார்.
ஒளி என்பது ஞானத்திற்கு உவமையாக இருக்கிறது. அன்பின் அடிப்படையில் செய்யும் கிரியைகள் மூலம் ஞானம் பெறப்படுகிறது.
இயேசு மேலும் "நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்" என்றார். அவர் பரமேறியதும், அப்போஸ்தலர்கள் அந்த ஒளியைப் பரப்பத் தொடங்கினர். அவர்கள் உருவாக்கிய தேவாலயங்களுக்கு அவர்கள் வெளிச்சமாக இருந்தார்கள்.
அதேபோல், நம் அனைவருக்கும் ஒரு ஒளி இருக்கிறது, மற்றவர்கள் அதைக் காணும்படி உங்கள் ஒளி பிரகாசிக்கட்டும். அதை மறைக்க வேண்டாம். உங்களுக்கு வழங்கப்படும் திறமையை புதைக்காதீர்கள். இந்த இருளடைந்த உலகில் ஒரு ஒளியாக இருங்கள். தேவன் உங்களை எங்கு வைத்தாலும் எழும்பி பிரகாசியுங்கள்!

நானே நல்ல மேய்ப்பன்

நானே நல்ல மேய்ப்பன்

யோவான் 10:11 இல் இயேசு "நானே நல்ல மேய்ப்பன், நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்" என்றார்.
தேவன் தனது ஜனத்துடன் வைத்திருக்கும் உறவை விவரிக்க எந்த விலங்கை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்திருக்கலாம், ஆனால் அவர் ஒரு காரணத்திற்காகத்தான் ஆடுகளைத் தேர்ந்தெடுத்துள்ளார்!
ஒரு நல்ல மேய்ப்பனின் கடமை என்ன?
• ஒரு நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளை முற்றிலுமாக அறிவான்.
நமக்கு நம்மைப்பற்றித் தெரிந்ததை விட தேவனுக்குதான் அதிகம் தெரியும்!
• ஒரு நல்ல மேய்ப்பன் ஆடுகளைக் கவனித்து, உணவளித்து, செல்ல வேண்டிய வழியில் வழிநடத்துவான்.
• ஒரு நல்ல மேய்ப்பன் ஆடுகளை அவற்றின் நலனுக்காகத் தேவைப்படும்போது ஒழுங்குபடுத்தி சரிசெய்வான்.
• ஒரு நல்ல மேய்ப்பன் நோயுற்றவைகளையும் காயப்பட்ட ஆடுகளையும் தன் தோளில் சுமப்பான்.
• ஒரு நல்ல மேய்ப்பன் வழிதவறிச் சென்ற ஆடுகளைக் கண்டுபிடிப்பான். ஒரு ஆட்டுக்குட்டியைக் காப்பாற்ற தேவன் மற்ற 99ஐ விட்டுப்போகிறார்.
• ஒரு நல்ல மேய்ப்பன் தனது ஆடுகளைப் பாதுகாத்து எதிரிகளை எதிர்த்துப் போராடுவான்.
ஒரு நல்ல மந்தையின் வேலை என்ன?
• மேய்ப்பனை நன்கு அறிந்திருக்க வேண்டும்
• மேய்ப்பனின் குரலை மட்டும் கேட்க வேண்டும்.
• மேய்ப்பனைப் பின்தொடற வேண்டும்.
"மந்தையில் சேரா ஆடுகளே
எங்கிலும் கோடி கோடி உண்டே
சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே
தேடுவோம் வாரீர் திருச்சபையே
மந்தையில் சேரா ஆடுகளே
அழைக்கிறார் இயேசு
அவரிடம் பேசு
நடத்திடுவார்..."

நானே ஆடுகளுக்கு வாசல்

"நானே ஆடுகளுக்கு வாசல்"

யோவான் 10:7 இல், இயேசு "நானே ஆடுகளுக்கு வாசல்" என்று கூறுகிறார், "நானும் ஒரு வாசல்" என்றல்ல!
இயேசு ஆடுகளாகிய நம்மை ஆட்டுத்தொழுவத்திற்கு அழைத்துச் செல்லும் மேய்ப்பன் மட்டுமல்ல, நாம் அதற்குள் உட்பிரவேசிக்கத்தக்கதான ஒரே வாசலும் அவர்தான் (யோவான் 10:9).
நித்திய ஜீவனைப் பெறுவதற்கு இயேசு மட்டுமே வழி. வேறு வழியே இல்லை.
மனிதன் வளர்க்கும் அனைத்து விலங்குகளிலும், ஆடுகள் மிகவும் திக்கற்றவை. ஆடுகள் காலை முழுவதும் மேய்ச்சலில் நேரத்தை செலவிடும், இடம் விட்டு இடம் அலைந்து திரியும், ஒருபோதும் சுற்றிப் உள்ள ஆபத்தைப் பார்க்காது. இதன் விளைவாக, அவை அடிக்கடி வழித்தவறி போகும். மற்ற விலங்குகளைப் போல ஆடுகளுக்கு “உள்ளுணர்வு” இருக்காது.
ஆடுகளுக்கு தங்கள் தொழுவம் கண் பார்வையில் இருக்கும்போது கூட அதைக் கண்டுபிடிக்கத் தெரியாது. இயல்பிலேயே ஆடுகள் மற்ற ஆடுகளை பின்பற்றுபவைகள். முன்னிருக்கும் ஆடு ஒரு குன்றிலிருந்து இறங்கினால், மற்றவைகள் அப்படியே பின்தொடரும். ஆடுகள் அடிக்கடி காயங்களுக்கு ஆளாகின்றன, மேலும் அவைகள் எளிதில் எதிரிகளால் தாக்கப்படலாம்.
கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களுக்கு, இயேசுவே மேய்ப்பனாகவும், வாசலாகவும் இருக்கிறார். அவர் நம் எல்லாத் தேவைகளையும் சந்திக்கிறார்.
இவ்வுலகம் நம் ஆத்துமாவை வேட்டையாடுபவர்களால் நிரம்பியுள்ளது. நம்மை அழிப்பதே அவர்களின் ஒரே நோக்கம் என்பதை அறிந்து, நாம் எப்போதும் அவருடைய பாதுகாப்பில் இருக்கவேண்டும்.
சபையின் மேய்ப்பர்களுக்கு தேவன் கூறும் அறிவுரை 1 பேதுரு 5:2-4 இல் உள்ளது:
"உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள்.
அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படுத்தும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்."

பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரம்

பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரம்

"நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்."
வெளிப்படுத்தின விசேஷம் 22:16
தேவதூதர்கள் பெரும்பாலும் வேதாகமத்தில் 'நட்சத்திரங்கள்' என்று குறிப்பிடப்படுகிறார்கள். யோவான் பார்த்த ஏழு நட்சத்திரங்கள் ஏழு தூதர்கள் என்று வெளி 1:20 இல் இயேசு கூறுகிறார்.
யோபு புத்தகத்தில் பூமி சிருஷ்டிப்பின்போது, "விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே" (யோபு 38:7) என்று எழுதப்பட்டுள்ளது.
ஏசாயா 14:12 இல் சாத்தான் அதிகாலையின் மகனாகிய "விடிவெள்ளி" என்று அழைக்கப்படுகிறான். அதிலிருந்துதான் அவன் 'லூசிஃபர்' என்ற லத்தீன் பெயரைப் பெற்றான்.
சாத்தான் ஒரு விடிவெள்ளி நட்சத்திரமாக இருக்கலாம், ஆனால் அவன் மெய்யான பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமாகிய இயேசு கிறிஸ்துவின் ஒரு பொய்யான சாயல் மட்டுமே.
வானவியலில், "விடிவெள்ளி நட்சத்திரம்" என்ற சொல் "வெள்ளி" கிரகத்தைக் [Venus] குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது கிழக்கில் சூரியனுக்கு முன்பாகவே தோன்கிறது, குறிப்பாக மத்திய கிழக்கில் இருண்ட நேரங்களில் இதைக் காணலாம். அந்த நட்சத்திரமாக, இயேசு நம் எதிர்காலத்திற்கான நம்பிக்கையைத் தருகிறார்.
பழைய ஏற்பாடு கிறிஸ்துவை நீதியின் சூரியன் (மல். 4:2) என்று அடையாளப்படுத்தி முடிவடைகிறது.
அவர் பிறப்பை அறிவிக்க வானத்தில் ஒரு நட்சத்திரம் சாஸ்திரிகளை வழிகாட்டியது. புதிய ஏற்பாடும் இந்த அற்புதமான தலைப்புடன் முடிவடைகிறது.
இது இயேசுவின் கடைசி "நானே" அறிக்கை, வேதாகமத்தின் கடைசி பக்கத்தில் காணப்படுகிறது. இது அவரது இரண்டாவது வருகையுடன் தொடர்புள்ள நாமம். விடியற்காலையில் எழுந்து, அவர் வரும் நாளுக்காக ஏங்குகிறவர்களுள் நாமும், பிரகாசமான விடிவெள்ளி நட்சத்திரமாகிய அவரைத் தேடுவோமா?

ஜீவஅப்பம் நானே

 ஜீவஅப்பம் நானே

"ஜீவஅப்பம் நானே" என்பது இயேசுவின் ஏழு “நானே” அறிக்கைகளில் ஒன்றாகும். அவை அனைத்தும் யோவான் எழுதின சுவிசேஷத்தில் காணப்படுகின்றன.
சுவாரஸ்யமாக, இயேசுவின் பிறப்பிடம் பெத்லகேம் ஆகும். இது 'அப்பத்தின் வீடு' என்று அழைக்கப்படுகிறது.
("lechem" என்றால் அப்பம் மற்றும் "beit" என்றால் வீடு).
அப்பம் இஸ்ரவேலின் பிரதான உணவாகும், மேலும் இஸ்ரவேல் நாட்டின் சிறந்த அப்பத்தை பெத்லகேம் உற்பத்தி செய்தது.
யோவான் 6:35 கூறுகிறது, “...ஜீவஅப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்."
திரளான ஜனக்கூட்டம் இயேசுவுக்குப் பின்னால் வந்தது அவருக்காக அல்ல, மாறாக அவர் அளித்த இலவச உணவுக்காக. இயேசு அவர்களைக் குற்றம் சாட்டி, பரலோகத்திலிருந்து வருகிற உண்மையான மன்னாவைத் தேடச் சொன்னார். நாம் தேடும் அப்பம் மண்ணிலிருந்து வருவதால், நம்மை கடைசியில் மண்ணில் சேர்த்துவிடும். இயேசு தரும் மெய்யான அப்பமோ, விண்ணிலிருந்து வருவதால், நம்மை
விண்ணுலகத்திற்கே கொண்டுபோய் சேர்க்கும்.
ஆத்துமாவுக்குத் தேவையான உணவை உண்பவதை விட, சரீரத்திற்கான உணவு உண்பதில் சில சமயங்களில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
இயேசு 'I am the cake of life' என்று சொல்லவில்லை, அதற்கு பதிலாக அவர் தினமும் சாப்பிடும் உணவைக் குறிப்பிட்டுள்ளார் (bread). தேவனுடைய வார்த்தையை தினமும் உண்ணவேண்டும். இது சிறப்பு சந்தர்ப்பங்களுக்கானது மட்டுமல்ல.
"அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்: அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்..."
யோவான் 6:27

அல்பாவும் ஓமெகாவும் ஆனவர்

அல்பாவும் ஓமெகாவும் ஆனவர்

வெளிப்படுத்தல் 22:13 இல் இயேசு : "நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்." என்று கூறுகிறார்.
"அல்பா" & "ஓமெகா" ஆகியவை கிரேக்க மொழியில் முதல் மற்றும் கடைசி எழுத்துக்கள். அவர் ஆங்கிலத்தில் 'A' & 'Z', எபிரேயத்தில் 'Aleph' & 'Tau'.
பைபிளின் முதல் வசனத்தில் இந்த பெயர் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? - ஆதியாகமம் 1:1: இந்த வசனத்தின் மையத்தில் நான்காவதாக மொழிபெயர்க்க முடியாத எபிரேய வார்த்தை, "et". இது உண்மையில் இரண்டு எபிரேய எழுத்துக்களைக் கொண்டுள்ளது: "அலெஃப்" மற்றும் "டவ்". அலெஃப் என்பது எபிரேய அகரவரிசையின் முதல் எழுத்து, மற்றும் டவ் கடைசியாக உள்ளது. ஆதியாகமம் முதல் வெளிப்படுத்துதல் வரை வேதாகமத்தில் இயேசு இருக்கிறார்!
இயேசு கிறிஸ்துவே அல்பா மற்றும் ஓமெகா. இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் படைத்தவர், ஆதியும் அவர், அந்தமும் அவர்.
தேவன் எல்லாவற்றையும் படைத்தார் என்றால் பின்னர் தேவனைப் படைத்தவர் யார்? என்று சிலர் நம்மிடம் கேட்கிறார்கள்.
இந்த கேள்விக்கு விஞ்ஞானப்பூர்வமாக பதிலளிக்க முடியாது. தேவன் காலத்துக்கு கட்டுப்பட்டவர் அல்ல. அவர் உருவாக்கப்படவில்லை, அவர் ஏற்கனவே இருந்தார். நமது சிறிய மூளையால் காலத்துக்கு அப்பால் சிந்திக்க முடியாது. அப்போஸ்தலனாகிய பவுல் கொலோசெயர்களுக்கு எழுதிய புத்தகத்தில், "அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது." என்று எழுதியுள்ளார். தேவனுக்கு நேரம், காலம், இடம் என்றெல்லாம் கிடையாது.
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு"

ஜீவவிருட்சம்

ஜீவவிருட்சம் Tree of Life Heb: Etz Chaim பழைய ஏற்பாட்டில், "ஜீவவிருட்சம்" ஆதியாகமம் 2:9 இல் முதன்முதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின...