Tuesday, March 26, 2024

ஏல் கன்னா

 பொருள்: எரிச்சலுள்ள தேவன்

வசனம்: "கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, ஆகையால், அந்நிய தேவனை நீ பணிந்துகொள்ளவேண்டாம்."
யாத்திராகமம் 34:14
ஆங்கிலத்தில் இதை "பொறாமையுள்ள தேவன்" (Jealous God) என்று மொழிபெயர்த்துள்ளனர். மற்றொரு நபரிடம் உள்ள ஏதோ ஒரு காரியம் நம்மிடம் இல்லாதபோது நமக்கு பொறாமை ஏற்பட வாய்ப்புண்டு. "எனக்கு மட்டும் உரியது" என்று நாம் எதை நினைத்தாலும் அதை ஆங்கிலத்தில், "Possessiveness" என்று சொல்வார்கள்.
தேவனுடைய இந்த உணர்வு சற்று வித்தியாசமானது. தனக்குச் சொந்தமான ஒன்றை யாராவது இன்னொருவருக்குக் கொடுக்கும்போது தேவன் எரிச்சலடைகிறார். அவர் சிலை வழிபாட்டிற்கு எதிரானவர். தனது மக்களை அடிமைத்தனத்திலிருந்து காப்பாற்றி, வாக்களிக்கப்பட்ட தேசத்தில் தன் ஜனங்களைப் பாதுகாக்கிறார். ஒவ்வொரு யுத்தத்திலும் அவர் அவர்களுடன் இருந்தார்.
மற்ற தெய்வங்கள் நம் இதயத்திற்காக போட்டியிடுவார்கள் என்பது அவருக்குத் தெரியும். ஏவாள் எல்லாவற்றையும் கொண்டிருந்தும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தைப் புசிக்க ஆசைக் கொண்டாள். தாவீதுக்கு அதிகமான மனைவிகள் இருந்தும், பத்சேபாவை விரும்பினார்.
தேவனுடைய இந்த உணர்வு அவரைப் பற்றியது அல்ல, அது நம்மைப் பற்றியது. அவருடன் மட்டுமே நெருங்கிய உறவைக் கொண்டிருப்பதற்கான ஒரே நோக்கத்திற்காக அவர் நம்மை உருவாக்கினார். கணவனை வேறொரு பெண்ணிடம் பகிர்ந்து கொள்வது எந்த மனைவியாலாவது ஏற்றுக்கொள்ள முடியுமா? ஒரு கணவன் தன் மனைவி வேறு ஆணுடன் இருப்பதை எப்படி சகிக்க முடியும்? (ஓசியா புத்தகத்தின் மையப்பொருளே இதுதான்!) அதேப்போல், தேவன் உங்கள் மீது வைராக்கியம் கொண்டவர். நம் இதயத்தின் ஒவ்வொரு அங்குலமும் தன்னுடன் இணைக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார். நாம் அவருக்கு மட்டுமே சொந்தமானவர்கள், அவர் நமக்கு சொந்தமானவர்!
"நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாக கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காகத் தேவவைராக்கியங்கொண்டிருக்கிறேன்."
2 கொரிந்தியர் 11:2

No comments:

Post a Comment

ஜீவவிருட்சம்

ஜீவவிருட்சம் Tree of Life Heb: Etz Chaim பழைய ஏற்பாட்டில், "ஜீவவிருட்சம்" ஆதியாகமம் 2:9 இல் முதன்முதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின...