Monday, November 18, 2024

ஜீவவிருட்சம்

ஜீவவிருட்சம்

Tree of Life
Heb: Etz Chaim
பழைய ஏற்பாட்டில், "ஜீவவிருட்சம்" ஆதியாகமம் 2:9 இல் முதன்முதலாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர் புதிய ஏற்பாட்டில், "நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும், அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்." என்று
வெளி 22:2 கூறுகிறது.
ஏதேன் தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சம் இருந்தது. அதினருகே இருந்த நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிக்க வேண்டாம் என்று தேவன் ஆதாம், ஏவாளுக்கு கட்டளையிட்டிருந்தார்.
ஆனால் அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படியாமல், அதை புசித்து, பாவம் செய்தனர். ஆவிக்குரிய ரீதியீல் மறித்து, நித்திய ஜீவனை இழந்தனர். அவர்கள் ஜீவவிருட்சத்திலிருந்தும் சாப்பிட்டு விட்டால், இந்த பாவத்துடன் என்றென்றும் வாழ்ந்துவிடுவார்கள். எனவே, தேவன் மனுஷனை ஏதேனிலிருந்து துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியைக் காவல்செய்ய கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்.
அந்த ஜீவவிருட்சத்தைத் தேடி, ஸ்திரீயாகிய ஏவாள் எத்தனை முறை கேரூபீன்களிடம் சென்று நித்திய ஜீவனுக்காக ஏங்கி அழுதிருப்பாள் என்று கற்பனை செய்து பாருங்கள்! ஆனால் பின்னர் யோவான் 20 இல், வேறொரு தோட்டத்தின் நடுவில் மகதலேனா மரியாள் என்ற வேறொரு ஸ்திரீ இரண்டு தேவதூதர்களிடம் அழுதுகொண்டிருந்தாள். அவளிடம் ஜீவவிருட்சமானவரே வந்து, "ஏன் அழுகிறாய்" என்று கேட்டார்! ஏனென்றால் அவர்தான் ஏற்கனவே நித்திய ஜீவனுக்கு வழியை உருவாக்கிவிட்டாரே!
"...ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்குத் தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப்புசிக்கக்கொடுப்பேன்..."
வெளி 2:7
ஆவிக்குரிய "ஜீவவிருட்சம்” என்பது கிறிஸ்துவைக் குறிக்கும் ஒரு அடையாளம். கிறிஸ்து "...இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார்". (யோ 6:58)
நாம் அவருடைய பந்தியில் பங்கேற்கும் ஒவ்வொறு முறையும், ஜீவவிருட்சத்திலிருந்து புசிக்கிறோம். அவருடைய வார்த்தையை தியானித்து அதன்படி நடக்கும்போதெல்லாம், நாம் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ந்து செழித்து, நித்திய ஜீவனைப் பெறுகிறோம்.
"அது (ஞானம்) தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவவிருட்சம், அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்."
நீதிமொழிகள் 3:18
~ ரேமா ஜாய் ஷரத்
[Strong's Hebrew:
6086. ets - Tree, wood, timber
2416. chay - Alive, living, life]

யேகோவா நொ-ஆம்

யேகோவா நொ-ஆம்

Jehovah Noam
பொருள்: தேவன் அழகானவர்
God is beautiful
"தேவன் அழகானவர்" என்றால், அவர் பரிபூரணமானவர் மற்றும் விரும்பத்தக்க அனைத்து குணங்களையும் உடையவர் என்பதைக் குறிக்கும்.
"கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன், நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்."
சங்கீதம் 27:4
இங்கே "மகிமை" என்ற வார்த்தை, ஆங்கிலத்தில் "beauty" என்று எழுதப்பட்டுள்ளது. தோற்றத்தைக் குறிக்கும் beauty [yapheh] வேறு, இங்கு எழுதப்பட்ட beauty [noam] வேறு - இந்த வார்த்தைக்கு "கனிவான, இனிமையான, மகிழ்ச்சியான" என்று பொருள். [Noam Adonai is a phrase that means "the beauty of the Lord". Also appears in Ps 90:17]
இயற்கையில் அழகை நாம் காணலாம், ஏனென்றால் அதன் படைப்பாளர் முற்றிலும் அழகானவர். வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்.
"அவருடைய காருண்யம் எத்தனை பெரியது? அவருடைய சௌந்தரியம் எத்தனை பெரியது?..."
சகரியா 9:17
"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்று ஒரு பழமொழி உண்டு. அழகான மனிதர்ளும் உண்டு. வேதாகமத்தில் சாராள், ரெபேக்காள், ராகேல், மோசே, தாவீது, அப்சலோம், சாலமோன், எஸ்தர், தானியேல் போன்ற பலர் பார்வைக்கு அழகாக இருந்தார்கள்.
தலைமுடி நேர்த்தியாகவும், முகம் பொலிவுடனும், தேகம் அமைப்பாகவும், விலை உயர்ந்த ஆடைகளால் அலங்கரிக்கப்பட்டு பலரது கண்கள் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு அழகிகளும் அழகன்களும் உலகில் உள்ளனர்.
இந்த அழகு நிறந்தரமானது அல்ல.
ஆனால் நம் தேவன் பூரண அழகுள்ளவர். அவரது குணத்தின் ஒவ்வொரு அம்சமும் அழகானது. அவரது அன்பு, சந்தோஷம், நீதி, இறக்கம், ஞானம், விசுவாசம் மற்றும் பல குணாதிசயங்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன. அவர் ஆவியாக இருப்பதால் அவருடைய தோற்றத்தால் அல்ல, அவர் அழகானவர் என்பதை அவரது பண்புகளால் சொல்ல முடியும். தேவன் பரிசுத்தமான, களங்கம் இல்லாத அழகானவராக இருக்கிறார். அவரது அழகு நிலையானது. அவரை வேறு யாரோடும் ஒப்பிட முடியாது.
இயேசு மெய்யாகவே "எல்லா மனுபுத்திரரிலும் மகா சவுந்தரியமுள்ளவர்" மற்றும் "பதினாயிரம்பேர்களில் சிறந்தவர்."
"இயேசுவைப் போல் அழகுள்ளோர் யாரையும் இப்பூவினில்
இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை..."
~ ரேமா ஜாய் ஷரத்
[Strong's Hebrew:
5278. noam - delightfulness, pleasantness
3303. yapheh - fair, beautiful]

யேகோவா ஷனா லோ

யேகோவா ஷனா லோ

Jehovah Shanah Lo
பொருள்: தேவன் மாறாதவர்
The God who changes not
வசனம்: "நான் கர்த்தர். நான் மாறாதவர்..."
மல்கியா 3:6
"மாற்றம்" சங்கடமானது. சில நேரங்களில் மனிதர்கள் மாற்றங்களைக் கண்டு பயப்படுகிறார்கள். கர்த்தர் ஒருவரே மாறாத பண்புடையவர். உருவாக்கப்பட்ட அனைத்தும் மாற்றத்திற்கு உட்பட்டவை: பாறைகள் சிதையும், உலோகங்கள் துரு பிடிக்கும், மண் அரிக்கும், செத்த உயிரினங்கள் அழுகி மக்கும்.
நாம் கூட மாறிக்கொண்டேத்தான் இருக்கிறோம். வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நமது நடை, உடை, பாவனை மாறுகிறது. சிறு குழந்தைகள் வளர வளர, அவர்களின் அப்பாவித்தனம் மாறிவிடும். வாலிப நாட்களில் நம் நண்பர்கள் வட்டாரம் பல மாற்றங்களை அடையும். உறவுகள் மாறும். வயதான காலத்தில் நம் தோல் சுருங்க ஆரம்பிக்கும், நம் உடல் வலிமை இழக்கும். வெளிப்புறமாக மட்டுமல்ல, நமது எண்ணங்களும் காலத்தோடு மாறுகின்றன.
நீங்களும் நானும் மாறலாம், ஆனால் தேவன் "இருக்கிறவராகவே இருக்கிறார்". அவர் நம்மைப்போல ஒரு நாள் வேறுபட்ட மனநிலையில் இருந்தாலோ, அல்லது தனது வார்த்தையை மாற்ற முடிவு செய்தாலோ, அவருடைய தேவைகள் நாளுக்கு நாள் வித்தியாசமாக இருந்தாலோ... நம் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! ஒரு சிலர் பழைய ஏற்பாட்டின் தேவன் கடுமையானவர் என்றும் புதிய ஏற்பாட்டில் அவர் அன்பாக மாறிவிட்டார் என்றும் நினைக்கிறார்கள். ஆனால் அவர் என்றுமே ஒரே குணம் கொண்டவர்தான்!
"இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்."
எபிரேயர் 13:8
A.W. டோசர் என்ற அமெரிக்க போதகர் தனது புத்தகத்தில்,
“தேவன் ஒருபோதும் தன் மனநிலையை மாற்றுவதில்லை, அவரது நேசம், உற்சாகம் குறைவதேயில்லை. பாவத்தின் மீதான அவரது அணுகுமுறை, முதலாக பாவம் செய்த மனிதனை ஏதேன் தோட்டத்திலிருந்து விரட்டிய போது எப்படி இருந்ததோ இன்றும் அப்படித்தான் இருக்கிறது. பாவியின் மீதான அவரது அக்கறையும், அவர் கையை நீட்டி, 'வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்று அழைத்ததைப் போலவே இன்றும் அழைக்கிறார்." என்று எழுதியுள்ளார்.
தேவனுடைய இந்த மாறாத தன்மையில் கிறிஸ்தவர்களாகிய நாம் மிகுந்த ஆறுதலை அடைய முடியும்.
"மாறிடா எம் மா நேசரே – ஆ
மாறாதவர் அன்பெந்நாளுமே
கல்வாரி சிலுவை மீதிலே
காணுதே இம்மா அன்பிதே!..."
- ரேமா ஜாய் ஷரத்
[Strong's Hebrew:
3808. lo - not
8138. shanah - to repeat, do again]

யேகோவா பாராக்

யேகோவா பாராக்

Jehovah Barak
ஆசீர்வதிக்கும் தேவன்
"பூமி தன் பலனைத் தரும், தேவனாகிய எங்கள் தேவனே எங்களை ஆசீர்வதிப்பார்."
சங்கீதம் 67:6
எபிரேயத்தில் "Berakah" [பெராக்கா] என்ற வார்த்தைக்கு "ஆசீர்வாதம்" என்று பொருள். நம் தேவன் ஆசிர்வதிக்கும் தேவன். ஆசீர்வாதமும் தேவனும் வெவ்வேறல்ல: தேவனே நம் ஆசீர்வாதம். ஆதியாகமம் 32-இல், யாக்கோபு இரு பரிவாரங்கள் கொண்ட ஐசுவரியவானாக இருந்தபோதிலும், அவர் தேவனுடன் இராமுழுவதும் போராடி, "நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்" என்றான். யாக்கோபு தனக்கு பலவீனங்கள் இருப்பதையும், தேவனுடைய ஆசீர்வாதம் இல்லாமல் நிம்மதியாக வாழ முடியாது என்பதையும் அறிந்திருந்தார்.
"கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்."
நீதிமொழிகள் 10:22
பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இன்று பூமிக்குரிய ஆசீர்வாதங்களையே மிகவும் நேசிக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவுடன் இந்த உலகில் வாழ்க்கையை வாழ போராட வேண்டியதில்லை என்றும், எல்லாம் தங்களுக்கு எளிதாகக் கிடைத்துவிடும் என்று நினைக்கிறார்கள். ஆனால், ஆசீர்வாதமும் வெற்றியும் பெரும் போராட்டங்களை மேற்கொள்வதின் விளைவாகும். ஆசீர்வாதம் என்பது நம் கடின உழைப்பிற்கும் விடாமுயற்சிக்கும் தேவன் நமக்குத் தரும் பரிசு. நாம் எதை விதைக்கிறோமோ, அதையே அறுப்போம்.
உபாகமம் 28 கீழ்ப்படிதலுக்கான ஆசீர்வாதங்களும் கீழ்ப்படியாமைக்கான சாபங்களும் நிறைந்த ஒரு அதிகாரம்.
"நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்."
உபாகமம் 28:2
தேவன் நமக்குக் கொடுக்கும் எல்லாவற்றுக்கும் பராமரிப்பும் கவனமும் தேவைப்படுகிறது. உங்களுக்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு ஆசீர்வாதமும் கூடுதல் பொறுப்புடன் வரும். ஒரு நல்ல உத்தியோகம், பலனளிக்கும் வியாபாரம், இனிமையான திருமண வாழ்க்கை, ஒழுக்கமான குழந்தைகள், அபிஷேகம் நிறைந்த ஊழியம்...எல்லாவற்றுக்கும் கடின உழைப்பு தேவை.
"...எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும், மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்."
லூக்கா 12:48
- ரேமா ஜாய் ஷரத்
[Strong's numbers
Hebrew:
1288. barak - to kneel, bless
1293. berakah - a blessing
Greek:
3107. makarios - happy, blessed, to be envied.]

Saturday, November 2, 2024

யேகோவா ரெயா

யேகோவா ரெயா
Jehovah Reya
கர்த்தர் என் சிநேகிதர்
God is my friend
ஏசாயா புத்தகத்தில், கர்த்தர் ஆபிரகாமை “என் சிநேகிதன்” (41:8) என்று குறிப்பிடுகிறார். யாத்திராகமத்தில், “ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்" என்றுள்ளது. யோவான் சுவிசேஷத்தில், இயேசு தனது சீஷர்களை “சிநேகிதர்” என்று அழைக்கிறார்.
"நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்.
இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்."
யோவான் 15:14, 15
நீதிமொழிகள் 17:17 "சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்..." என்று கூறுகிறது. வேதாகமம் யோனத்தான் & தாவீது; தானியேல் மற்றும் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ; எலியா & எலிஷா; எலிசபெத் & மரியாள்; பவுல் & தீமோத்தேயு மற்றும் பல நெருங்கிய நண்பர்களைப் பற்றி பேசுகிறது. "உன் சிநேகிதனையும், உன் தகப்பனுடைய சிநேகிதனையும் விட்டுவிடாதே" என்று வேதம் அறிவுரை செய்கிறது.
தேவனுடனான நட்பு மனித நட்பைப்போலவே இருந்தாலும், சில முக்கியமான வேறுபாடுகளும் உள்ளன. இது சமமான இருவர்களுக்கிடையேயான உறவு அல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தேவனுடனான நட்பு அவரால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும், அவருடைய நிபந்தனைகளின் அடிப்படையில் தொடரப்பட வேண்டும். இந்த நட்பை நிலைநாட்ட, இயேசு நமக்காக தனது சொந்த ஜீவனையே பலியாகக் கொடுத்தார்!
"ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை."
யோவான் 15:13
தேவனை அறிந்துகொள்வதும் அனுபவிப்பதுமே வாழ்க்கையின் சாராம்சம். இதற்காகவே நாம் உருவாக்கப்பட்டோம். ஏதேன் தோட்டத்தில் தேவன் ஆதாம் ஏவாளுடன் நட்பு வைத்துக்கொள்ளவே அவர்களை சிருஷ்டித்தார். தேவனை அறியாமல் நமது உண்மையான நோக்கத்தை அடைய முடியாது. தேவனுடனான நட்பில்தான் நம் ஆத்துமாவிற்கு இளைப்பாறுதல் கிடைக்கிறது.
[எபிரேயத்தில் "ரெகுவேல்" என்றும் கிரேக்கத்தில் "தேயோப்பிலு" என்றாலும் "தேவனின் நண்பன்" என்று பொருள்படும்]
Strong's Greek:
5384. philos - beloved, dear, friendly
Hebrew:
7453. rea - friend, companion, fellow

யேகோவா யாஷா

யேகோவா யாஷா

Jehovah Yasha

பொருள்: கர்த்தரே என் இரட்சகர்
The Lord is my Saviour
"இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்."
லூக்கா 2:11
எபிரேய மொழியில் "யாஷா" என்றால் "விடுவித்தல்" என்று பொருள். இது யோசுவா, ஓசியா என்ற பெயர்களின் மூலச் சொல்லாகும். சில கிறிஸ்தவர்கள் இன்று இயேசுவை “யெஷுவா” என்று உச்சரிக்கின்றனர், இது "யெஹோஷுவா"வின் நவீன பதமாகும். "யேகோவா என் இரட்சிப்பு" என்பதே இதன் அர்த்தம்.
"Yeshua" என்ற எபிரேய வார்த்தை, கிரேக்க மொழியில் "sh" இல்லை என்பதால், “Iesous” என மொழிபெயர்க்கப்பட்டது. லத்தீன் மொழியில் "Iesus" என்று எழுதப்பட்டு, பின்னர் ஆங்கில எழுத்துக்களில் “J” என்ற எழுத்து சேர்க்கப்பட்டபோது “Jesus” என மாறிவிட்டது. எபிரேயத்தில் “J” என்ற ஒலி இல்லாததால், “Jesus” என்பது மேசியாவின் உச்சரிப்பாக என்றுமே இருந்ததேயில்லை. ஒரு பெயர் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு செல்லும் போது, அது மாற்றப்பட்ட மொழியின் இலக்கணம் மற்றும் ஒலியியலுக்கு ஏற்றது போல் மாறும். அதற்காக நாம் அவரை "ஜீசஸ்" என்று அழைப்பதை நிறுத்த வேண்டும் என்று நான் சொல்லவில்லை, எப்படி மாற்றமடைந்துள்ளது என்று புரிந்துக்கொள்வதற்காகக் கூறுகிறேன். உச்சரிப்பு எதுவாக இருந்தாலும், நாம் இயேசுவை அழைக்கும்போது, அவர் நமக்கு பதிலளிப்பார்.
"இரட்சிப்பு" என்பது பாவத்தின் வல்லமையிலிருந்தும் மரணத்திலிருந்தும், தேவனுடைய ஆக்கினைக்கும் நம்மை விடுவிக்கும். தேவனுடைய பார்வையில் நாம் ஆவிக்குறிய ரீதியில் மரித்தவர்கள் என்று வேதம் கூறுகிறது. நாம் நன்மை செய்ய விரும்பினாலும், தீமை நமக்குள் இருக்கிறது. எல்லாவற்றைப்பார்க்கிலும் நம் இருதயம் திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது. அதிலிருந்து பொல்லாத சிந்தனைகள் முடிவில்லாமல் புறப்பட்டு வருகின்றன. உலக மக்கள் தெய்வத்தைத் தேடி பல இடங்களுக்குச் செல்கிறார்கள், தங்கள் பாவங்களை மறைக்க பிராயசித்தங்களை தாங்களாகவே செய்ய முயற்சிக்கிறார்கள். பவுல் கூட "நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?" என்று கூக்குரலிடுகிறார்.
"நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்." என்று 1 யோவான் 1:9 கூறுகிறது.
இயேசுவின் இரத்தத்தால் நாம் இரட்சிக்கப்படும்போது, மரணத்தால் நம் ஆத்துமாவின் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது. இயேசுவால் மட்டுமே நமக்கு நித்திய ஜீவனைக் கொடுக்க முடியும். இந்த நற்செய்தியை உலகம் முழுதும் பறைசாற்றுவோமாக!
[Strong's Greek:
4990. sótér - a savior, deliverer
2424. Iésous - Jesus; the Greek form of Joshua
Hebrew:
3467. yasha - to deliver
3091. Yehoshua - the LORD is salvation]

மாம்சமான வார்த்தையானவர்

மாம்சமான வார்த்தையானவர்

The word who became flesh
"ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது."
"அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்..."
யோவான் 1:1, 14
இந்த வசனங்களில் “வார்த்தை” என்ற சொல் இயேசுவைக் குறிக்கும். இயேசுவுக்கு “வார்த்தையானவர்” என்ற நாமம் – ஆதியில் இருந்தே உள்ளது. அதாவது அவரே தேவனாக இருந்தார். அவர் ஒரு மனிதனாக உலகிற்கு வரத் தேர்ந்தெடுத்து, மாம்சமாக மாறினார்.
கிரேக்க மொழியில் வார்த்தைக்கு இரண்டு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன:
LOGOS & RHEMA:
• LOGOS: (Written Word)
லோகோஸ் என்பது ஏற்கனவே தேவனால் "எழுதப்பட்ட" வார்த்தையாகும், இது அனைவருக்கும் பொதுவான வார்த்தை. பத்துக் கட்டளைகள் ஒரு சிறந்த உதாரணம். நாம் தேவனுடைய கற்பனைகளை நேசித்து, கற்று, மனப்பாடம் செய்து அதன்படி நடக்க வேண்டும்.
"தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும்...இருக்கிறது."
எபிரேயர் 4:12
RHEMA (Spoken Word)
ரேமா என்பது தேவனால் குறிப்பிட்ட காலத்தில் "பேசப்படும்" வார்த்தை – இது ஒரு நபருக்கோ, அல்லது ஒரு சிலருக்கோ தேவன் வாக்குத்தரும் தனிப்பட்ட வார்த்தை. அவர் "சொல்லுகிற வசனங்கள்" ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது. ரேமா வார்த்தை யாருக்குப் பேசப்பட்டதோ அந்த நபருக்கு மட்டுமே பொருந்தும், அதை அனைவராலும் உரிமைக்கோர முடியாது. காபிரியேல் தூதன் "இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்.." என்று மரியாளுக்குச் சொன்ன வார்த்தை அந்த நேரத்தில் மரியாளுக்கு மட்டுமே பொருந்தும்.
"அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்."
மத்தேயு 4:4
"தேவ வார்த்தை" என்பது வேதாகமத்தை மட்டும் குறிக்காது. தேவன் இயற்கை, தீர்க்கதரிசிகள், தேவதூதர்கள், பரிசுத்த ஆவியானவர், இயேசு கிறிஸ்து, போதகர்கள் மற்றும் பல தேவ மனிதர்கள் மூலமாகவும் நம்முடன் பேசி வருகிறார். அவர் எந்த வழியில் பேசினாலும், நாம் காதுள்ளவர்களாய் கேட்கக்கடவோம்.
~ ரேமா ஜாய் ஷரத்
[Strong's Greek:
3056. logos: a word, a statement, a speech
4487. rhéma: a thing spoken, a word or saying of any kind, as command, report, promise]

ஆபிரகாமின் சந்ததி

ஆபிரகாமின் சந்ததி

The seed of Abraham
Heb: Zera Avraham
ஆதாமுக்கு சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, தேவன் ஆபிரகாமிடம் உன் சந்ததி மூலம் பூமியின் அனைத்து நாடுகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று கூறினார்.
"நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்..."
- ஆதியாகமம் 22:18
இந்த "ஆபிரகாமின் சந்ததி"யை மூன்றாகப் பிரிக்கலாம்.
1. முதலாக, மாம்சத்திற்குறிய ஆபிரகாமின் சந்ததி: ஆபிரகாம் பல தேசங்களின் தந்தையாக இருப்பார் என்று தேவன் உறுதியளித்தார். ஆகார் மற்றும் கேத்தூராள் மூலம் பிறந்த அவரது சந்ததியினரிடமிருந்து நாடுகள் எழுந்தன, ஆனால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட சந்ததி சாராளுக்குப் பிறந்த ஈசாக்கு மட்டுமே. ஈசாக்கிலிருந்து யாக்கோபும், பின்னர் இஸ்ரவேல் தேசமும் உருவானது. மாம்சத்தின்படி கிறிஸ்துவும் யூதராகப் பிறந்தார். (ரோமர் 9:4,5)
2. ஆவிக்குறிய ஆபிரகாமின் சந்ததி: பல முறை, யூதர்கள் தாங்கள்தான் ஆபிரகாமின் பிள்ளைகள் என்று பெருமை பாராட்டிக்கொள்வார்கள்.
இதுவே அவர்கள் பாவத்திலிருந்து மனம்திரும்ப தடையாக இருந்தது.
அதனால்தான் யோவான் ஸ்நானகன், "ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள், தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார்..." என்று கூறுகிறார். விசுவாசமார்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் உண்மையான பிள்ளைகள்.
"நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயுமிருக்கிறீர்கள்."
கலாத்தியர் 3:29
3. மூன்றாவது மற்றும் மிக முக்கியமான ஆபிரகாமின் சந்ததி, நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே. “சந்ததி” என்று மொழிபெயர்க்கப்பட்ட வார்த்தை பல நபர்களையும் ஒரு தனிநபரையும் குறிக்கலாம் என்றாலும், இந்த வசனத்தில் இலக்கண ரீதியில் ஒருமையில் பவுல் எழுதியுள்ளார்:
"ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன. சந்ததிகளுக்கு என்று அநேகரைக் குறித்துச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக்குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்தச் சந்ததி கிறிஸ்துவே."
கலாத்தியர் 3:16
இந்த காரணத்திற்காகத்தான், புதிய ஏற்பாடு இயேசுவை "ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்து" என்று அடையாளம் காட்டி தொடங்குகிறது.
~ ரேமா ஜாய் ஷரத்
[Strong's:
Heb:
2233. zera: a sowing, seed, offspring
Greek:
4690. sperma: that which is sown, seed, offspring/descendents]

ஜீவவிருட்சம்

ஜீவவிருட்சம் Tree of Life Heb: Etz Chaim பழைய ஏற்பாட்டில், "ஜீவவிருட்சம்" ஆதியாகமம் 2:9 இல் முதன்முதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின...