யேகோவா ஷனா லோ
Jehovah Shanah Lo
பொருள்: தேவன் மாறாதவர்
The God who changes not
"மாற்றம்" சங்கடமானது. சில நேரங்களில் மனிதர்கள் மாற்றங்களைக் கண்டு பயப்படுகிறார்கள். கர்த்தர் ஒருவரே மாறாத பண்புடையவர். உருவாக்கப்பட்ட அனைத்தும் மாற்றத்திற்கு உட்பட்டவை: பாறைகள் சிதையும், உலோகங்கள் துரு பிடிக்கும், மண் அரிக்கும், செத்த உயிரினங்கள் அழுகி மக்கும்.
நாம் கூட மாறிக்கொண்டேத்தான் இருக்கிறோம். வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நமது நடை, உடை, பாவனை மாறுகிறது. சிறு குழந்தைகள் வளர வளர, அவர்களின் அப்பாவித்தனம் மாறிவிடும். வாலிப நாட்களில் நம் நண்பர்கள் வட்டாரம் பல மாற்றங்களை அடையும். உறவுகள் மாறும். வயதான காலத்தில் நம் தோல் சுருங்க ஆரம்பிக்கும், நம் உடல் வலிமை இழக்கும். வெளிப்புறமாக மட்டுமல்ல, நமது எண்ணங்களும் காலத்தோடு மாறுகின்றன.
நீங்களும் நானும் மாறலாம், ஆனால் தேவன் "இருக்கிறவராகவே இருக்கிறார்". அவர் நம்மைப்போல ஒரு நாள் வேறுபட்ட மனநிலையில் இருந்தாலோ, அல்லது தனது வார்த்தையை மாற்ற முடிவு செய்தாலோ, அவருடைய தேவைகள் நாளுக்கு நாள் வித்தியாசமாக இருந்தாலோ... நம் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! ஒரு சிலர் பழைய ஏற்பாட்டின் தேவன் கடுமையானவர் என்றும் புதிய ஏற்பாட்டில் அவர் அன்பாக மாறிவிட்டார் என்றும் நினைக்கிறார்கள். ஆனால் அவர் என்றுமே ஒரே குணம் கொண்டவர்தான்!
"இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்."
எபிரேயர் 13:8
A.W. டோசர் என்ற அமெரிக்க போதகர் தனது புத்தகத்தில்,
“தேவன் ஒருபோதும் தன் மனநிலையை மாற்றுவதில்லை, அவரது நேசம், உற்சாகம் குறைவதேயில்லை. பாவத்தின் மீதான அவரது அணுகுமுறை, முதலாக பாவம் செய்த மனிதனை ஏதேன் தோட்டத்திலிருந்து விரட்டிய போது எப்படி இருந்ததோ இன்றும் அப்படித்தான் இருக்கிறது. பாவியின் மீதான அவரது அக்கறையும், அவர் கையை நீட்டி, 'வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்று அழைத்ததைப் போலவே இன்றும் அழைக்கிறார்." என்று எழுதியுள்ளார்.
தேவனுடைய இந்த மாறாத தன்மையில் கிறிஸ்தவர்களாகிய நாம் மிகுந்த ஆறுதலை அடைய முடியும்.
"மாறிடா எம் மா நேசரே – ஆ
மாறாதவர் அன்பெந்நாளுமே
கல்வாரி சிலுவை மீதிலே
காணுதே இம்மா அன்பிதே!..."
- ரேமா ஜாய் ஷரத்
[Strong's Hebrew:
3808. lo - not
8138. shanah - to repeat, do again]
No comments:
Post a Comment