யூதா கோத்திரத்துச்சிங்கம்
[Hebrew: Aryeh Yehudah
Greek: Leon ek tes Phyles Iouda]
"...இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார்..."
வெளி 5:5
இயேசு கிறிஸ்து ஏன் யோசேப்பின் கோத்திரத்தில் வராமல் "யூதா" கோத்திரத்தின் சிங்கமாக வந்தார்? யோசேப்பிற்கு எதிராக பொறாமைப்பட்டு சதி செய்த பத்து சகோதரர்களில் யூதாவும் ஒருவர். ஆனால் அவரைக் கொல்வதற்குப் பதிலாக அடிமையாக விற்கும்படி பரிந்துரை செய்தவர் யூதாதான். பென்யமீனின் பாதுகாப்பிற்காக யாக்கோபிடம் உத்தரவாதம் செய்தவரும் யூதா தான்.
"அவனுக்காக நான் உத்தரவாதம் பண்ணுவேன். அவனை என்னிடத்திலே கேளும். நான் அவனை உம்மிடத்தில் கொண்டுவந்து, உமக்கு முன்பாக நிறுத்தாமற்போனால், எந்நாளும் அந்தக் குற்றம் என்மேல் இருப்பதாக."
ஆதியாகமம் 43:9
இந்த வார்த்தைகளைக் கேட்ட பிறகுதான், வேதாகமத்தில் மிகவும் உணர்ச்சிகரமான தருணங்களில் ஒன்றான பென்யமீனை மற்ற அனைத்து சகோதரர்களுடன் எகிப்திற்கு அனுப்ப யாக்கோபு தயாராக இருந்தார்.
ஆதியாகமம் 49 - ல் இஸ்ரவேலின் அரசாட்சி யூதா கோத்திரத்திற்கு உரியதாக இருக்கும் என்று யாக்கோபு சொல்வதைக் காண்கிறோம்.
"யூதா பாலசிங்கம், நீ இரை கவர்ந்துகொண்டு ஏறிப்போனாய்; என் மகனே, சிங்கம்போலும் கிழச்சிங்கம்போலும் மடங்கிப் படுத்தான்; அவனை எழுப்புகிறவன் யார்? சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை. ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்."
ஆதியாகமம் 49:9, 10
மற்றவர்களை சுரண்டாமல் அவர்களுக்காக தியாகம் செய்வது யூதாவின் குணம். தனது சக்தியை மற்றவர்களை காயப்படுத்த பயன்படுத்தாமல் உதவி செய்வதற்கே பயன்படுத்துவார் யூதா. தேவன் இப்படிப்பட்ட மனிதர்களைத்தான் தனது மக்கள் மீது ராஜாவாகவும், சமூகத்தில் தலைவர்களாகவும், சபையின் மேய்ப்பர்களாகவும், கணவர்களாகவும், தந்தைகளாகவும், தாய்களாகவும் இருக்க விரும்புகிறார்.
No comments:
Post a Comment