Monday, April 8, 2024

ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன்

 "ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன்"

Friend of Tax Collectors and Sinners
வசனம்: "மனுஷகுமாரன் போஜனபானம்பண்ணுகிறவராய் வந்தார், அதற்கு அவர்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறார்கள்."
மத்தேயு 11:19
பரிசேயர்கள் வெறுத்த ஆயக்காரருக்கு (சகேயு மற்றும் மத்தேயு போன்றவர்கள்) இயேசு நண்பராக இருந்தார். இயேசு அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். தவறான நபர்களுடன் இயேசு தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருப்பதாகவும், அவரை "பாவிகளின் சிநேகிதன்" என்றும் யூதர்கள் அழைத்தனர்.
உண்மையில் அவர் பாவிகளுக்காகத்தான் வந்தார். நோயாளிகளுக்குத்தான் வைத்தியன் தேவை! பரிசேயர்களும் பாவிகளாகத்தான் இருந்தனர், ஆனால் அவர்களை நீதிமான்கள் என்று கருதினர். 'பாவிகளின் நண்பன்' என்று அவர்கள் விமர்சித்தவர் இதுவரை பாவமே செய்திராத சுத்த இருதயமுள்ளவர்!
முரட்டுத்தனமான மற்றும் ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடும் குழந்தைகளுடன் தங்கள் குழந்தைகள் நட்பு வைத்துக்கொண்டால், பெரும்பாலான பெற்றோர்கள் அதை விரும்புவதில்லை, ஏனென்றால் அவர்களுடைய பழக்க வழக்கம் தங்கள் குழந்தைகளுக்கும் வந்துவிடும் என்று அவர்கள் பயப்படுகிறார்கள். இயேசு பாவிகளோடு சேர்ந்து பாவம் செய்யவில்லை, அவர்களை இரட்சிக்கவே அவர் அவர்களுடன் இருந்தார்.
கிறிஸ்தவர்களாகிய நாம் சுவிசேஷம் சொல்வதற்கு முன் மக்களுடன் நட்பை உருவாக்க வேண்டும். கிறிஸ்தவரல்லாத சகோதர சகோதரிகளை நேசித்து, நாம் இயேசுவைப் போல நடந்துக்கொள்ளத் தொடங்கும் போது, சில மதவாதிகள் விமர்சிப்பார்கள், எப்போதும் ஏதாவது குறை சொல்லிக்கொண்டு இருப்பார்கள். நாம் அவர்களுக்காக வாழாமல், இயேசு ஒருவருக்கே வாழ்வோம்!
"நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்."
ரோமர் 5:8

No comments:

Post a Comment

ஜீவவிருட்சம்

ஜீவவிருட்சம் Tree of Life Heb: Etz Chaim பழைய ஏற்பாட்டில், "ஜீவவிருட்சம்" ஆதியாகமம் 2:9 இல் முதன்முதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின...