பொருள்: தேவக்குமாரன்
தேவனுக்கும் இயேசுவிற்கும் உள்ள உறவு இந்த பூமியிலுள்ள ஒரு தந்தைக்கும் அவருடைய மகனுக்கும் உள்ள மனித உறவைப்போன்றது அல்ல. பிதா திருமணம் செய்து இயேசுவைப் பெற்றுக்கொள்ளவில்லை. வார்த்தையான தெய்வம், பிதாவின் குமாரனாக மனித வடிவத்தில் வெளிப்படுத்தப்பட்டார் (யோவான் 1:1, 14).
தேவனுடன் ஒரு சிறப்பு உறவைக் கொண்டவர்களைக் குறிக்க இந்த நாமம் பழைய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. யாத்திராகமத்தில், இஸ்ரவேல் தேசம் தேவனுடைய "சேஷ்டபுத்திரன்" என்று அழைக்கப்படுகிறது (யாத் 4:22).
தேவதூதர்கள், நீதியுள்ள, பக்தியுள்ள மனிதர்கள் மற்றும் இஸ்ரவேல் ராஜாக்கள் அனைவரும் "தேவனுடைய குமாரர்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள்.
புதிய ஏற்பாட்டில், "தேவனுடைய குமாரன்" என்ற பட்டம் பல சந்தர்ப்பங்களில் இயேசுவிற்குப் பயன்படுத்தப்படுகிறது. இயேசுவே தன்னை இவ்வாறு உரிமையுடன் அடையாளப்படுத்திக்கொண்டதால்தான் யூதர்களால் அவதூறாக விசாரிக்கப்பட்டு குற்றவாளியாகக் கருதப்பட்டார். (யோவான் 19:7)
அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்துவருகிறேன் என்றான்.
யோவான் 1:34
யோவான் ஸ்நானகனுக்கு இயேசுவை மரியாள் மற்றும் யோசேப்பின் மகன் என்றுதான் தெரியும். ஆனால் பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் ஞானஸ்நானத்தின் போது அவர் மீது இறங்கியபோது, யோவான் அவரை தேவக்குமாரனாக அடையாளம் கண்டார். அவருடைய சாட்சி தெளிவாக உள்ளது! 'தேவனுடைய குமாரர்களில் ஒருவர்' அல்ல, "இவரே தேவனுடைய குமாரன்" என்று சொல்கிறார்.
No comments:
Post a Comment